மாதவிடாய் சுழற்சியை செயலி மூலம் கண்காணிக்கிறீர்களா? முக்கியமான 4 விஷயங்கள்

மாதவிடாய் கண்காணிப்பு காலண்டர் கொண்ட தொலைபேசி திரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதவிடாய் கண்காணிப்பு செயலிகள் சுகாதார தரவாக வகைப்படுத்தப்படாவிட்டால், அந்த தரவு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து குறைவான ஒழுங்குமுறைகள் உள்ளன.
    • எழுதியவர், ஜாக்கி வேக்ஃபீல்ட்
    • பதவி, பிபிசி குளோபல் டிஸ்இன்ஃபர்மேஷன் யூனிட்

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் (PMS), பாலியல் செயல்பாடு, கருத்தடை மற்றும் மனநிலை.

இவை மாதவிடாய் கண்காணிப்பு செயலிகள் (Apps) தங்கள் பயனர்களைப் பற்றி சேகரிக்கும் மிகவும் தனிப்பட்ட விவரங்களில் சில.

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தத் தகவல்கள் பயனர்கள் எதிர்பார்ப்பது போல தனிப்பட்டவையாக இருக்காது.

உலகின் மிகப்பெரிய மாதவிடாய் கண்காணிப்பு செயலியான ஃப்ளோ ஹெல்த் ( Flo Health), அமெரிக்காவில் பயனர்களின் தனியுரிமையை மீறியதாகவும், லட்சக்கணக்கான பயனர் தரவைப் பகிர்ந்து விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டு, மொத்தமாக பல பயனர்கள் தொடர்ந்த வழக்கில்(class action) சமரசம் செய்துகொண்டுள்ளது.

ஃப்ளோ ஹெல்த் இந்த தீர்வால் "மகிழ்ச்சியடைவதாக" கூறியது, மேலும் இந்த சமரசத்தில் தவறு செய்ததாக எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்தது.

பிரிட்டனைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான பிரைவஸி இண்டர்நேஷனல், 2021 இல் 36 மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை பரிசோதித்து, 61% செயலிகள் தானாகவே மூன்றாம் தரப்பினருக்கு தரவை மாற்றுவதாகக் கண்டறிந்தது. சில செயலிகள் மேம்படுத்தப்பட்டாலும், பயனர்களின் தனியுரிமை குறித்து இன்னும் கவலைகள் உள்ளன.

இந்த செயலிகள் 112-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்தது. செண்டர் ஃபார் ரிபொரொடக்டிவ் ரைட்ஸின் (Centre for Reproductive Rights) கூற்றுப்படி, 40% மக்கள் கருக்கலைப்பு சட்டங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருக்கும் நாடுகளில் வாழ்கின்றனர். இந்த நாடுகளில் சட்டத்தை கையில் வைத்திருப்பவர்களால், இந்த செயலிகளின் தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் மற்றும் அணுகப்படலாம் என்பது குறித்து நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்.

"மாதவிடாய் தரவு ஆயுதமாக்கப்படலாம்," என்கிறார் மொஸில்லா அறக்கட்டளை(Mozilla Foundation)-இன் ஆராய்ச்சியாளர் லாரன் ஹென்ட்ரி பார்சன்ஸ். "தனிப்பட்ட பராமரிப்புக்கான கருவியாகத் தோன்றுவது, கண்காணிப்பு, அவமானம் அல்லது தீங்கு விளைவிக்கும் கருவியாக மாறலாம்."

2019 இல், டிரம்பின் முதல் ஆட்சியின்போது, அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், சுகாதாரத் துறை, தோல்வியடைந்த கருக்கலைப்புகளை ஆய்வு செய்யும் முயற்சியாக நோயாளிகளின் மாதவிடாய் சுழற்சிகளைக் கண்காணித்தது.

கூட்டு வழக்கு

ஆப் ஸ்டோரின் சுகாதாரப் பிரிவில், ஃப்ளோ ஹெல்த் இந்தியா, கென்யா, பிரேசில் போன்ற பல நாடுகளில் முதல் 5 இடங்களில் உள்ளது.

இரு ஆண்களால் நிறுவப்பட்ட ஃப்ளோ, "உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு அவர்களின் உடல் சமிக்ஞைகளின் பொருளைப் புரிந்துகொள்ள உதவுகிறது" என்று கூறுகிறது.

இது பயனர் தரவைப் பகிர்வதாக 2019 முதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.

ஃப்ளோ ஹெல்த் அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான பெண்களின் தனிப்பட்ட தரவை மெட்டா (Meta) மற்றும் பிற மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு கூட்டு வழக்கில் ஜூலை 31 அன்று சமரசம் செய்தது.

"இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாதது நீதிமன்றத்தில் தொடர்ந்து புலப்படுத்தப்பட்டது" என்று ஃப்ளோ ஹெல்த் ஒரு அறிக்கையில் கூறியது.

"இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று நாங்கள் எப்போதும் உறுதியாகக் கூறி வந்தோம்," என்று நிறுவனம் மேலும் தெரிவித்தது.

இந்த மாத தொடக்கத்தில், ஒரு நடுவர் மன்றம், மெட்டா கலிபோர்னியா பயனர் தனியுரிமை சட்டங்களை மீறியதாக தீர்ப்பளித்தது. மெட்டா, இந்த முடிவை "வன்மையாக மறுப்பதாக" கூறியது, மேலும் "மெட்டா-வுக்கு எதிரான வாதிகளின் குற்றச்சாட்டுகள் தவறானவை" என்று தெரிவித்தது. தனியுரிமையை மதிப்பதாகவும், "சுகாதாரம் அல்லது பிற முக்கியமான தகவல்களை விரும்பவில்லை" என்றும் கூறினர்.

இதற்கிடையில், கனடாவில் ஃப்ளோ ஹெல்த்க்கு எதிராக கூட்டு வழக்கு நடவடிக்கைகள் உள்ளன, மேலும் போர்ச்சுகலில் ஒரு நுகர்வோர் உரிமைகள் வழக்கு நடந்து வருகிறது.

ஆரோக்கியமா அல்லது சுகாதார தரவா?

மாதவிடாய் உள்ளவர்கள் தங்கள் மாதவிடாயை கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.

இது அவர்களின் மாதவிடாயை கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளுடன் தொடர்புடைய நோய்கள், உதாரணமாக பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் போன்ற சுகாதார பிரச்சனைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்கலாம்.

ஒரு பெண் தனது வயிற்றைப் பிடித்திருக்கிறார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதவிடாய் கண்காணிப்பு செயலிகள் ஒழுங்கற்ற மாதவிடாயின் அறிகுறிகளைக் கண்டறிய உதவலாம்.

குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அதிக தேவை மற்றும் அதிக மொத்த பிறப்பு விகிதம் உள்ள குறைந்த வருமான நாடுகளில் இந்த செயலிகளின் பதிவிறக்கங்கள் அதிகமாக உள்ளன என்று 2024 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று கண்டறிந்தது.

உள்ளூர் சந்தைகளுக்கான செயலிகளாக இருந்தாலும், பெரும்பாலான நாடுகள் ஒரே செயலிகளை பயன்படுத்துவதாக ஆய்வு கண்டறிந்தது.

"சில நாடுகளில் இந்தத் தகவல் சுகாதார தரவாக வகைப்படுத்தப்படாமல் 'பொது ஆரோக்கியம்' என்று வகைப்படுத்தப்படுகிறது," என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிண்டெரூ தொழில்நுட்ப மற்றும் ஜனநாயகத்திற்கான மையத்தில் (Minderoo Centre for Technology and Democracy) தனியுரிமை ஆராய்ச்சியாளரான ஸ்டெஃபானி ஃபெல்ஸ்பெர்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அதாவது பயனர் தரவுக்கு சிறப்பு பாதுகாப்பு அல்லது ஒழுங்குமுறைகள் இல்லாமல் இருக்கலாம் என்பதுதான் இதன் பொருள்.

பிரிட்டனின் பிரைவஸி இண்டர்நேஷனல் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள சுபாடாடாஸ் ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றின் புலனாய்வுகளில், சில செயலிகள்தொடர்ந்து பயனர் தரவைப் பகிர்கின்றன, மேலும் சிலவற்றில் பாதுகாப்பு பலவீனங்கள் உள்ளன, இது தரவு கசிவுக்கு வழிவகுக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளில் உள்ள தனியுரிமைக் கொள்கைகள் பயனர்களுக்கு புரிவதற்கு கடினமாக உள்ளன, மேலும் அவை பயனர்களுக்கு அவர்களின் தரவு (Data Privacy) நடைமுறைகள் குறித்து முழு தகவலை வழங்குவதில்லை என்று ஃபெல்ஸ்பெர்கர் பிபிசியிடம் கூறினார்.

"அவை பெரும்பாலும் 'எல்லாம் அல்லது ஒன்றுமில்லை' என்ற ஒப்புதல் விருப்பங்களை நம்பியுள்ளன," என்று அவர் கூறினார்.

பயனர்கள் செயலியை பயன்படுத்த விரும்பினால், அனைத்து தரவு சேகரிப்பு நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

தனது தொலைபேசியை பார்க்கும் ஒரு பெண்

பட மூலாதாரம், Getty Images

'சுழற்சி அடிப்படையிலான விளம்பரம்'?

இனப்பெருக்க ஆரோக்கிய தரவு மட்டுமல்லாமல், மிகவும் மதிப்புமிக்கதாகவும் உள்ளது.

"முக்கியமாக, செயலிகள் கர்ப்பம் பற்றிய தகவல்களை வைத்திருக்கின்றன, இது விளம்பரதாரர்களால் மிகவும் தேடப்படும் தகவலாகும்," என்று ஃபெல்ஸ்பெர்கர் கூறினார்.

2013 ஆம் ஆண்டு ஃபனான்ஸியல் டைம்ஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில், ஒருவர் கர்ப்பத்தின் 7 முதல் 9 மாதங்களில்(third trimester) இருப்பது பற்றிய தகவல் அவர்களின் தரவின் மதிப்பை 220 மடங்கு அதிகரிக்கிறது என்று கண்டறிந்தது.

"இந்த செயலிகள் ஒருவரின் மனநிலை நிலை பற்றிய தகவலையும் வைத்திருக்கின்றன," என்று ஃபெல்ஸ்பெர்கர் கூறினார்.

"பாதிக்கப்படக்கூடிய அல்லது உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதும் கூட துரதிர்ஷ்டவசமாக விளம்பரதாரர்கள் ஆர்வம் காட்டும் ஒன்றாக உள்ளது."

ஃபெல்ஸ்பெர்கர் இதை "சுழற்சி அடிப்படையிலான விளம்பரம்" என்று குறிப்பிட்டார், இது மாதவிடாய் சுழற்சிகளின் அடிப்படையில் நுகர்வோரை இலக்காகக் கொள்ள நிறுவனங்கள் தகவலைப் பயன்படுத்தும் முறையாகும்.

இது விளம்பரதாரர்களையும் தாண்டி செல்லக்கூடியதாக இருக்கலாம் என லாரன் ஹென்ட்ரி பார்சன்ஸ் பிபிசியிடம் கூறினார்.

"இது காப்பீட்டு நிறுவனங்கள், அரசு, அல்லது வேலை தருபவர்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கலாம்," என்று அவர் கூறினார், "இது வேலைவாய்ப்பு, சுகாதாரம், அல்லது பொது சேவைகளுக்கான வாய்ப்புகளை பாதிக்கலாம்."

மாதவிடாய் கண்காணிப்பு காரணமாக வேலைவாய்ப்பு அல்லது சுகாதார பாகுபாடு ஏற்பட்டதற்கு இதுவரை எடுத்துக்காட்டுகள் இல்லை என்றாலும், இது ஒரு சாத்தியமாக மாறலாம் என்று நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சட்ட அமலாக்க அபாயங்கள்

உலகளவில் கருக்கலைப்பு சட்டங்களை எளிமைப்படுத்தும் ஒரு போக்கு உள்ளது, ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கருக்கலைப்பு உரிமைகளை பின்னோக்கி இழுத்துள்ளன. உலகில் பலர் கடுமையான கருக்கலைப்பு சட்டங்களின் கீழ் வாழ்கின்றனர்.

இங்குதான் மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளால் சேகரிக்கப்படும் தரவுகள் அபாயகரமானதாக இருக்கலாம் என ஹென்ட்ரி பார்சன்ஸ் கூறுகிறார்.

"கருக்கலைப்பு உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இடங்களில், கர்ப்பங்கள், கருச்சிதைவுகள் அல்லது கருக்கலைப்புகளை அனுமானிக்க மாதவிடாய் தரவு பயன்படுத்தப்படலாம், பின்னர் அது சட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம்," என்று அவர் கூறினார்.

"அந்தத் தரவைச் சுற்றி மிகவும் உறுதியான பாதுகாப்புகள் இல்லையெனில், நிறுவனங்கள் பெரும்பாலும் தரவுகளை தருகின்றன."

இந்த ஆண்டு ஜூன் முதல், எதிர்பாராத கருக்கலைப்பு ஏற்பட்டால், பெண்களின் தொலைபேசிகளில் இந்த செயலிகளை சரிபார்ப்பதை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று பிரிட்டன் காவல்துறை வழிகாட்டுதல் பரிந்துரைக்கிறது - இவை அனைத்தும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டவை.

மற்ற தரவுகள் சேகரிக்கப்பட்டு கருக்கலைப்பு வழக்குகளை விசாரிக்கப் பயன்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டுகள் உள்ளன. 2022 இல் அமெரிக்காவில், கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பிய ஒருவர் மீது வழக்கு தொடர ஃபேஸ்புக் அரட்டை பதிவுகள் பயன்படுத்தப்பட்டன. 2020 இல் பிரிட்டனில், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்ட வரம்புக்கு அப்பால் பயன்படுத்தியது குறித்து விசாரணையின்போது, காவல்துறை ஒரு பெண்ணின் கூகுள் தேடல் வரலாற்றைப் பெற்றது.

ஃபெல்ஸ்பெர்கர் மற்றும் ஹென்ட்ரி பார்சன்ஸ் ஆகியோர் தரவு மீறல் ஏற்பட்டால் பயனர்களின் மிகவும் முக்கியமான குறியாக்கம்(encrypt) செய்யப்படாத தரவு வெளிப்படும் அபாயத்தையும் சுட்டிக்காட்டினர்.

மஞ்சள் பூட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனியுரிமையைப் பாதுகாக்க வழிகள் உள்ளன.

நீங்கள் செய்யக்கூடியது என்ன?

மாதவிடாய் செயலிகள் தனிநபர்களின் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய தரவைக் கண்காணிக்க உதவியாக இருக்கும் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

பயனர்கள் தங்கள் தரவைப் பாதுகாக்க விரும்பினால், மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளின் தனியுரிமை பாதுகாப்புகளை தெரிந்துகொள்ள சில கேள்விகளைக் கேட்கலாம்.

தனியுரிமை விதிமுறைகள் தெளிவாகவும் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளனவா?

ஒரு செயலியில் தெளிவான தனியுரிமை விதிமுறைகள் இருந்து, பயனர்களுக்கு இதை தெரிவிக்க முயற்சி செய்யப்பட்டால், அது அந்த செயலியை உருவாக்குபவர்கள் தனியுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று ஃபெல்ஸ்பெர்கர் பிபிசியிடம், கூறினார்.

செயலிகள் உங்கள் தரவை குறியாக்கம்(encrypt) செய்கிறதா?

ஆப் பயனர் தகவலை குறியாக்கம் செய்தால், அது ஒரு புதிய ரகசிய குறியீட்டிற்கு மாற்றப்படுகிறது. இது அங்கீகரிக்கப்படாத தரப்பினர் தரவை புரிந்துகொள்வதை கடினமாக்குகிறது.

மாதவிடாய் கண்காணிப்புக்கு தொடர்பில்லாத உங்கள் முகவரி போன்ற கேள்விகளைக் கேட்கிறதா?

சில செயலிகள் மாதவிடாய் கண்காணிப்புக்கு தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்பதை, மாதவிடாய் கண்காணிப்பு செய்யும்போது பயனர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று என ஃபெல்ஸ்பெர்கர் மற்றும் பார்சன்ஸ் சுட்டிக்காட்டினர். முகவரி போன்ற அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடிய விவரங்கள், மாதவிடாய் சுழற்சியைப் புரிந்துகொள்ள தேவையில்லாதவை.

அந்த செயலி எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது - உங்கள் தரவை விளம்பரதாரர்களுக்கு விற்பதன் மூலமா?

இந்த செயலிகளின் வணிக மாதிரி பலவற்றில் பயனர் தரவு மற்றும் நுண்ணறிவை மூன்றாம் தரப்பினருக்கு விற்பது அல்லது பகிர்வது ஆகியவற்றை நம்பியுள்ளது என்று ஃபெல்ஸ்பெர்கர் பிபிசியிடம் கூறினார்.

"இதற்கு வழி உங்கள் கண்காணிப்பு செயலியை பயன்படுத்துவதை நிறுத்துவது அல்ல," என்று டாக்டர் ஃபெல்ஸ்பெர்கர் பிபிசியிடம் கூறினார்.

"இதற்கு வழி உங்கள் கண்காணிப்பு செயலியிடமிருந்து மேலும் கேட்பது, மற்றும் நீங்கள் தனிப்பட்ட முறையில் எதைப் பகிர விரும்புகிறீர்கள் என்பதைக் கேட்பது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு