You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் உள்பட உலகெங்கும் சீன தொழிலாளர்கள் குறிவைத்து தாக்கப்படுவது ஏன்?
- எழுதியவர், ஜெரெமி ஹோவெல்
- பதவி, பிபிசி உலகச் செய்திகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6-ஆம் தேதி), பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இரண்டு சீனப் பிரஜைகள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (Balochistan Liberation Army - BLA) பொறுப்பேற்றுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் சீன தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களின் வரிசையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் சமீபத்தியது.
உலகெங்கிலும் உள்ள கட்டுமானத் திட்டப் பணிகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான சீனத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் அரசியல் கொந்தளிப்பு மிக்க பகுதிகளில் உள்ளனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கடத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சீனத் தொழிலாளர்கள் அடிக்கடி தாக்கப்படுகிறார்களா?
அக்டோபர் 6-ஆம் தேதி, பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகிலுள்ள போர்ட் காசிமில் கட்டப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையங்களின் கட்டுமான தொழிலாளர்கள் பயணித்த வாகனத்தில் இரண்டு சீனப் பிரஜைகள் இருந்தனர். அவர்கள் கராச்சி விமான நிலையத்திற்கு அருகில் ஒரு வாகனத்தில் வெடிகுண்டு வைத்துக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.
விமான நிலையத்திலிருந்து வரும் ‘உயர்மட்ட சீனப் பொறியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வாகனங்களைக் குறிவைத்து’ தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் கூறியது.
பாகிஸ்தானின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், இந்தத் தாக்குதல் ‘கொடூரமான செயல்’ என்று கூறினார். பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அலுவலகம் ‘இந்தச் செயல் தண்டிக்கப்படாமல் போகாது’ என்று கூறியது.
பலுச் இன மக்களுக்குத் தனி தாயகத்தைப் பெறுவதற்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் நீண்ட காலமாகக் கிளர்ச்சி செய்து வருகிறது.
அவர்கள் கொன்ற இரு சீனப் பிரஜைகள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் கராச்சிக்கு அருகில் உள்ள போர்ட் காசிம் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த மார்ச் மாதம், பலுசிஸ்தானில் சீன நிறுவனங்களால் கட்டப்பட்டு வரும் குவாதர் துறைமுகத்திற்கு அருகே உள்ள கடல்சார் விமானப்படை தளத்தை தாக்கியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் ஒப்புக்கொண்டது.
2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சி பல்கலைக்கழகத்தில் சீனா நடத்தும் கன்பூசியஸ் நிறுவனத்தின் அருகே ஒரு தற்கொலைத் தாக்குதலில் மூன்று சீனக் கல்வியாளர்களையும் அவர்களது பாகிஸ்தானிய டிரைவரையும் கொன்றதை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் ஒப்புக்கொள்கிறது.
பலுச் பகுதியில் செய்யப்படும் அந்நிய முதலீட்டில் இருந்தோ, அப்பகுதியில் வெளிநாட்டு நிறுவனங்களால் எடுக்கப்படும் எண்ணெய் போன்ற கனிமங்களில் இருந்தோ கிடைக்கும் செல்வத்தில் நியாயமான பங்கை பலுச் இன மக்கள் பெறவில்லை என்று பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் கூறுகிறது.
வெளிநாட்டில் பணிபுரியும் சீனத் தொழிலாளர்களின் எண்ணிக்கை
சீன வர்த்தக அமைச்சக (2022ஆம் ஆண்டிற்கான) புள்ளிவிவரங்களின்படி, சீன நிறுவனங்களால் உலகெங்கிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக சுமார் 5,68,000 சீனர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் மிகப்பெரிய, கனவு திட்டமான ‘பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்’ (பி.ஆர்.ஐ) திட்டம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மற்றும் ரயில் இணைப்புகள், துறைமுகங்கள் மற்றும் மின் நிலையங்கள் போன்ற விஷயங்களை மேம்படுத்துவதற்கான பி.ஆர்.ஐ திட்டங்களுக்கு 1 டிரில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் சீனாவின் ஏற்றுமதிக்கான புதிய பாதைகளை உருவாக்குவதற்கும், பி.ஆர்.ஐ திட்டத்தில் பங்குதாரர்களாக கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துப்படுதாகும்.
பி.ஆர்.ஐ-யின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான சீனா-பாகிஸ்தான் பொருளாதார பெருவழி (CPEC) திட்டத்தின் தாயகம் பாகிஸ்தான் தான். இந்த திட்டத்தில், சீனாவின் மேற்கு எல்லையில் இருந்து பாகிஸ்தான் வழியாக, அரபிக் கடலில் உள்ள குவாதர் துறைமுகம் வரை பல சாலை மற்றும் ரயில் இணைப்புகள் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானைப் போலவே, கென்யா, எத்தியோப்பியா மற்றும் செனகல் உள்ளிட்ட ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளும் சிறந்த போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக சீனாவிடம் இருந்து பில்லியன்கணக்கான டாலர்களை கடன் வாங்கியுள்ளன.
ஆனால், இந்த நாடுகளின் மக்கள் ‘வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள், தங்கள் நாட்டு குடிமக்களுக்கு சில வேலைகளை மட்டுமே வழங்குவதாகவும், பெரும்பாலும் சீன நாட்டினரை வேலைக்கு அமர்த்துவதாகவும்’ புகார் கூறுகின்றனர்.
"ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உள்ளூர் மக்கள் இதனால் கோபத்தில் உள்ளார்கள்" என்று லண்டனில் உள்ள எஸ்ஓஏஎஸ் சீனா இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் ஸ்டீவ் சாங் கூறுகிறார்.
"நிறுவனங்கள் அதிகளவில் சீனத் தொழிலாளர்களை உள்ளே கொண்டு வருகின்றன. கடுமையான சூழ்நிலைகளைக் கொண்ட வேலைகளில் மட்டுமே அவர்கள் ஆப்பிரிக்க மக்களை பணியில் அமர்த்துகிறார்கள் என்ற உணர்வு உள்ளூர் மக்களுக்கு உள்ளது" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
"வெளிநாடுகளில் முதலீடு செய்வது என்பது இருதரப்பு வெற்றி என்று சீனா கூறுகிறது" என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வெளியுறவு விவகார சிந்தனைக் குழுவான சாத்தம் ஹவுஸின் (Chatham House) முனைவர் அலெக்ஸ் வைன்ஸ் கூறுகிறார்.
“ஆனால், சீனாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்னையைத் தீர்க்க இந்த நாடுகளில் உள்ள வேலைகள் சீனத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
சீன தொழிலாளர்கள் வெளிநாட்டில் வேலை செய்வது எவ்வளவு ஆபத்தானது?
வெளிநாடுகளில் சீனாவின் முதலீடுகள் காரணமாக, சீனத் தொழிலாளர்கள் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் மட்டுமல்லாது மோதல் நடக்கும் பகுதிகளில் (Active conflict zone) கூட வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
உதாரணமாக, உலக வங்கியின் வகைப்பாட்டின்படி, அரசியல் ரீதியாக மிகவும் ஸ்திரமற்ற நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
கராச்சியில் உள்ள பிபிசி உலக சேவையின் செய்தியாளர் ரியாஸ் சோஹைல் கூறுகையில், “பாகிஸ்தானில் சீன வளர்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய 16 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதன் விளைவாக 12 சீன குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.” என்கிறார்.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பதற்றம் நிறைந்த பகுதியான கைபர் பக்துன்க்வாவின் பிஷாம் பிராந்தியத்தில் உள்ள டாசு நீர்மின் அணையில் பணிபுரிந்த ஐந்து சீனப் பொறியாளர்கள் மார்ச் 2024இல் கொல்லப்பட்டதும் இதில் அடங்கும்.
கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கராச்சியில் உள்ள சீன தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய நபர்கள் குறைந்தது நான்கு பேரைக் கொன்றனர். இந்த தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்பிரிக்காவில், ஆயுதமேந்திய போராளிக் குழுக்களின் அரசியல் வன்முறை பரவலாக உள்ள காங்கோ ஜனநாயக குடியரசில் (Democratic Republic of Congo), தங்கச் சுரங்கங்களில் பணிபுரியும் சீன தொழிலாளர்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன.
கடந்த ஜூலை மாதத்தில், வடகிழக்கு காங்கோவில் ஒரு சீன நிறுவனத்திற்கு சொந்தமான தங்கச் சுரங்கத்தின் தளத்தில் ஆறு சீன குடிமக்கள் மற்றும் குறைந்தது இரண்டு காங்கோ ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அப்போது செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் 'காங்கோ வளர்ச்சிக்கான கூட்டுறவு' என்ற ஆயுதப்படையின் உறுப்பினர்கள் என்று கூறப்பட்டது. காங்கோவில், நிலம் மற்றும் இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்த போராடும் பல குழுக்களில் இதுவும் ஒன்றாகும்.
நைஜீரியாவில் ஜனவரி 2022-ஆம் ஆண்டில், நைஜர் மாநிலத்தின் அணை கட்டுமான தளத்தில் இருந்த மூன்று சீனத் தொழிலாளர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த அணையானது சீன நிறுவனமான சினோஹைட்ரோவால் கட்டப்பட்டு வந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ்’ (பிஐஇஇ) அமைப்பு அறிக்கையின்படி, ‘ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆயுதக் குழுக்கள், சீன நாட்டினரைக் கடத்துவது லாபகரமானது என்று நினைக்கிறார்கள். ஏனெனில் சீனர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், அவர்களை மீட்பதற்கு மிகப்பெரிய பிணைத்தொகையை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.’
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை இழந்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிய கடந்த இருபது வருடங்களில், பலமுறை சீன தொழிலாளர்களைக் கடத்தியுள்ளனர். பெரும்பாலும் அவர்களை பிணைத்தொகைக்காகவே கடத்தியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்க சீனா என்ன செய்கிறது?
பிஐஇஇ அமைப்பின் கூற்றுப்படி, “இதுவரை சீன அரசாங்கமும் சீன நிறுவனங்களும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை, ‘பிணைத்தொகைகளை செலுத்துதல், சிறந்த பாதுகாப்பை வழங்க அந்தந்த நாடுகளின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணவும் தடுக்கவும் உதவும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்தல்’ ஆகிய நடவடிக்கைகள் மூலம் கையாண்டுள்ளன.”
சீனா, தனது தொழிலாளர்கள் பணிபுரியும் நாடுகளின் ராணுவப் படைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதனால் அவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க முடியும் என சீனா நம்புகிறது.
சீன நிறுவனங்கள், தற்கொலை குண்டு தாக்குதல்கள், துப்பாக்கி ஏந்திய குற்றவாளிகள் மற்றும் கடத்தல்காரர்களை எதிர்கொள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை தங்கள் தளங்களில் அதிகளவில் பணியமர்த்தி வருகின்றன.
"ஆனால் சீன தொழிலாளர்கள் விவகாரத்தில் இந்த நாடுகள் செய்யக்கூடியவை குறித்த சீனாவின் எதிர்பார்ப்புகளுக்கு வரம்புகள் உள்ளன" என்று பிஐஇஇ அறிக்கை கூறுகிறது.
"சீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ- FDI) திட்டம், பலவீனமான சட்ட அமைப்புகள் மற்றும் ஆட்சியைக் கொண்ட நாடுகளையே குறிவைக்கிறது." என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
பாகிஸ்தானில் சீனத் தொழிலாளர்கள் மீதான சமீபத்திய தாக்குதலுக்குப் பிறகு, அங்குள்ள சீன தூதரகம் 'தனது குடிமக்களையும் பாகிஸ்தானில் உள்ள சீன நிறுவனங்களையும் விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறும்’ அறிவுறுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)