எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்தில் 9 பேர் பலி; நடந்தது என்ன?

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த போது முகப்பு சாரம் சரிந்து குறைந்தது 9 பேர் பலியாகி உள்ளனர்.

பிரதமர் மோதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இறந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்

வளைவு அமைக்கும் பணி செய்து கொண்டிருக்கும்போது திடீரென சாரத்தின் ஒரு பகுதி சரிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்ன நடந்தது?

பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல்மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ராட்சத வளைவு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, திடீரென சாரம் சரிந்து விழுந்தது. அதில், 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பலரும் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக சிஐடியூ மாநில துணைத் தலைவர் விஜயன் பிபிசியிடம் பேசுகையில், " சுமார் 45 மீட்டர் உயரத்தில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்றது. ஒருபக்கம் பணிகள் நிறைவடைந்து மற்றொரு பக்கத்தில் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான், அந்த சாரம் ஒரு பக்கத்திலிருந்து சரிந்துவிட்டது. அதன் மேல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்துவிட்டனர். பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தும் அதனுடன் சேர்ந்தே விழுந்துவிட்டனர்." என்றார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு மொத்தமாக 3,200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் வட இந்திய தொழிலாளர்கள் தான். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியின் கருத்துப்படி பாதுகாப்பு உடை அணிந்து 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளனர். ஆனாலும், திடீரென சாரம் சரிந்து விழுந்ததால், இதுவரை 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை, மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டோருடன் பேசி இருக்கிறோம். அடுத்ததாக BHEL நிறுவனத்திடம் தான் பேசி உள்ளோம். ஏனென்றால் அந்த நிறுவனம் தான் ஒப்பந்ததாரர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இருவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமாக உள்ளனர். மற்ற ஒன்பது பேர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன" என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சம்பவ நடந்த இடத்தில் அனைத்து அதிகாரிகளும் இருப்பதாகவும் விபத்து குறித்து காவல்துறையினர் சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோதி இரங்கல்

இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "எண்ணூரில் பெல் (BHEL) நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் ராதாகிருஷ்ணனையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்." என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், இச்செய்தி அறிந்து வருத்தமடைந்ததாகவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என மோதி தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.