தங்கம் விலை ஏறிக்கொண்டே இருப்பது இந்தியாவுக்கு நன்மையா தீமையா?

தங்கத்தின் விலை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தினேஷ் உப்ரேதி
    • பதவி, பிபிசி இந்தி

மன்னராட்சி நடந்துகொண்டிருந்த காலத்தில், ஒரு அரசனின் பலம் அவரிடம் இருக்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட்டது.

காலம் மாறிவிட்டது, அமைப்புகள் மாறிவிட்டன, ஆனால் தங்கத்தின் ஆட்சி மட்டும் மாறவில்லை. சொல்லப்போனால் முன்பை விட அதன் மதிப்பு பலப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு பலமடைந்திருக்கிறது என்றால் தங்கத்தால் இன்று ஒரு தேசத்தின் பணமதிப்பில் தாக்கம் ஏற்படுத்த முடியும், பணவீக்கத்தை அதிகரிக்க முடியும், ஏன் அரசாங்கத்தையே கூட கவிழ்க்க முடியும்.

இந்தியாவில் முதலீட்டுக்காக மட்டும் தங்கம் வாங்கப்படுவதில்லை. கலாசார மற்றும் பாரம்பரிய காரணங்களுக்காகவும் தங்கம் வாங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தேவைகள் ஏற்படும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் பொருளாதார ரீதியாகவும் தங்கம் அதீத முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 62 சதவிகிதத்துக்கும் மேல் தங்கத்தின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இருந்தாலும், இந்தியர்களின் தங்க கையிருப்பு கணிசமாகக் குறையவில்லை.

தங்கத்தின் விலை

பட மூலாதாரம், Getty Images

இந்திய இல்லங்களில் வரலாற்று அளவிலான தங்கம்

சமீபத்தில் மோர்கன் ஸ்டான்லி வெளியிட்ட ஒரு அறிக்கையில் 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய 34,600 டன் தங்கம் இந்திய குடும்பங்களிடம் இருப்பதாக தெரிவித்திருந்தது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 88.8 சதவிகிதம்!.

தங்கத்தின் விலை இப்போது வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4100 அமெரிக்க டாலரைத் தொட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு இந்தியாவில் உள்ள தங்கத்தின் மதிப்புக்கும் நல்ல செய்தியாகும்..

மோர்கன் ஸ்டான்லியின் அந்த அறிக்கையில், 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்திய குடும்பங்களிடம் 34,600 டன் தங்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உலக அளவில் அதிக தங்கம் நுகர்வோர் பட்டியலில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

மேலும், 2024 முதல் 75 டன் தங்கத்தை வாங்கி இந்திய ரிசர்வ் வங்கி தங்க இருப்பை அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் தங்க இருப்பு 880 டன்கள் ஆகியிருக்கிறது. இது அந்நிய செலவாணி கையிருப்பில் 14 சதவிகிதம்.

இது இந்தியாவில் தங்கத்தின் மதிப்பு அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது. ஆனால், அதிகரித்திருக்கொண்டிருக்கும் தங்கத்தின் விலை, நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதோடு, நாணயத்தின் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரூபாய் மீதான தாக்கம்

ஒரு தேசத்தின் வருமானத்தில் பெரும் பங்கு உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டு வணிகம் செய்யப்படும் பொருள்களின் மூலம் தான் கிடைக்கும். அப்படியெனில் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை விட ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள்தான் ஒரு தேசத்துக்கு அதிக வருவாயை ஏற்படுத்தும்.

தங்க ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் கூட இது பொருந்தும். ஒரு நாடு தங்கத்தை அதிகம் ஏற்றுமதி செய்தால் அவர்களின் நாணய மதிப்பு பலப்படும். அதேசமயம், இந்தியா தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. அதனால் சர்வதேச சந்தையில் எப்போதெல்லாம் தங்கத்தின் விலை உயர்கிறதோ அப்போதெல்லாம் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்.

பணவீக்கத்தில் தாக்கம்

பணவீக்கத்தில் தாக்கம்

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தின் விலை பல்வேறு காரணங்களால் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். அதில் முக்கியமானது தங்கத்தின் ஏற்றுமதியும் இறக்குமதியும்.

தங்க இறக்குமதியின் நேரடித் தாக்கத்தை பணவீக்கத்தின் மூலமாகக் காண முடியும்.

இதுபற்றிக் கூறும் சந்தை ஆய்வாளரான ஆசிஃப் இக்பால், "இதை இப்படிப் புரிந்துகொள்வோம் - உதாரணமாக, அதிகரித்துக்கொண்டிருக்கும் தேவையை சமாளிக்க இந்தியா வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. அந்த நாடுகளுக்கு செலுத்துவதற்காக அதிக ரூபாய் நோட்டுகளை அச்சிடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது"

இதற்கு முன் இந்த அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறதா?

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தின் விலை இந்த அளவுக்கு உயர்வது இது முதல் முறை அல்ல. 1930களிலும், 1970-80 காலகட்டத்திலும் தங்கத்தின் மதிப்பு உலகளவில் உயர்ந்ததாகக் கூறுகிறார் ஆசிஃப்.

1978 - 80க்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு அவுன்ஸ் 200 அமெரிக்க டாலராக இருந்த தங்கம் கிட்டத்தட்ட 850 அமெரிக்க டாலர் வரை உயர்ந்ததாகச் சொல்கிறார் அவர்.

அப்போது ஏற்பட்ட உலகளாவிய பணவீக்கம், இரான் புரட்சி, சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு ஏற்படுத்திய நிலையற்ற தன்மை முதலானவற்றால் தங்கல் விலை அந்த அளவுக்கு உயர்ந்ததாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் தங்க இறக்குமதி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில், 1979ல் 937 ரூபாயாக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை, 1980ல் 1330 ரூபாய்க்கு உயர்ந்ததாக தரவுகள் சொல்கின்றன. இது கிட்டத்தட்ட 45 சதவிகித உயர்வு.

அப்போது அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக இருந்த பால் வோல்கர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அதிகப்படுத்தினார். இது 'வோல்கர் ஷாக்' என்றழைக்கப்பட்ட ஒரு நிலைக்கு வித்திட்டது.

அதனால் தங்கத்தின் விலை அதன் உச்சத்திலிருந்து 50 சதவிகிதம் குறைந்தது. மேலும் அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு அது பெரிதளவு மாறாமலும் இருந்தது.

தங்கத்தின் மீதான மோகம் முன்பொருமுறை 1930களில் குறையத் தொடங்கியது. அப்போது மக்களிடமிருக்கும் தங்கத்தை பறிமுதல் செய்யும் ஒரு சட்டத்தை வகுத்தது அமெரிக்க அரசு. ஆர்டர் நம்பர் 6102 எனச் சொல்லப்படும் நிர்வாக உத்தரவை 1933ல் வெளியிட்டார் அப்போதைய அதிபர் ஃபிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட்.

இதன்மூலம் அவுன்ஸுக்கு 20.67 அமெரிக்க டாலர் என்ற விலையை நிர்ணயித்து, ஒவ்வொரு அமெரிக்கரும் தங்களிடம் இருக்கும் தங்கத்தை அரசாங்கத்திடம் கொடுத்து சேமித்து வைக்கவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. 1934ல் தங்க இருப்புச் சட்டம் இயற்றப்பட்டு ஒரு அவுன்ஸுக்கு 35 அமெரிக்க டாலர் என்ற விலை வகுக்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலை எவ்வாறு மாறுபட்டிருக்கிறது?

"1930களில் தங்கம் விலை கூடியதற்கான முக்கியக் காரணம் அப்போதிருந்த கொள்கைகள். 1980களில் கூடியதற்குக் காரணம் பணவீக்கம். அதேபோல் அப்போது தங்கத்தை வாங்கும் போட்டியில் உலகின் மத்திய வங்கிகள் ஈடுபடவில்லை. ஆனால் இப்போது மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது அதன் விலை உயர்வுக்கு ஒரு காரணம். ரிசர்வ் வங்கியே தங்கள் இருப்பை 880 டன் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது" என்று கூறுகிறார் ஆசிஃப் இக்பால்.

எம்.ஐ.டி உலக அமைதி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் ரிது கோயல் இதுபற்றி ET Now பத்திரிகைக்குப் பேசும்போது, "அதிகரித்திருக்கும் தங்கத்தின் விலை உள்ளூர் நகை சந்தையை பலப்படுத்தியிருக்கிறது. ஆனால், அதன் நீண்ட காலத் தாக்கம் இனிதான் தெரியவரும். வணிக சமநிலை நிச்சயம் தவறும், பணவீக்கம் குறையலாம், இது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்" என்று கூறினார்.

பொருளாதார வளர்ச்சியில் தாக்கம்

அதேசமயம் இந்தியா போன்ற நாடுகள் டாலரை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான ஒரு யுக்தியாக தங்கத்தின் இருப்பை அதிகப்படுத்துகிறார்கள் என்று பல வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்திருக்கும் வரிகள் உலக நாடுகள் தங்கள் யுக்திகளை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது. பிரிக்ஸ் நாடுகள் உள்பட பல நாடுகள் டாலர் சார்பின்மையை (De-dollarization) நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றன" என்று கூறுகிறார் ஆசிஃப்.

அதாவது ஒரு நாடு தங்களை டாலரிடமிருந்து அந்நியப்படுத்திக்கொள்வது டாலர் சார்பின்மை என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு நாடும் டாலரையோ அமெரிக்க பத்திரங்களையோ தங்கள் அந்நிய செலவாணி கையிருப்பில் வைத்திருப்பார்கள். அதை தொடர்ந்து அதிகப்படுத்திக்கொண்டும் இருப்பார்கள். ஏனெனில், கச்சா எண்ணெயோ மற்ற பொருள்களோ இறக்குமதி செய்யும்போது அவர்களில் டாலரில் தான் அதற்கு பணம் செலுத்தவேண்டியிருக்கும். டாலரைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

"சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்காவின் கொள்கைகள் பல நாடுகளில் டாலர் பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளன. 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யா மீது பல்வேறு தடைகளை திணித்தது அமெரிக்கா. ரஷ்யாவின் அந்நிய செலவாணி கையிருப்புகளும் முடக்கப்பட்டன. அப்போது முதலே பல நாடுகளுக்கு டாலர் குறித்த கவலை ஏற்படத் தொடங்கிவிட்டது" என்கிறார் ஆசிஃப்.

வங்கி அமைப்பில் அழுத்தம் சாத்தியமா?

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் தங்கம் வாங்கப்படும் முறையிலுமே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நகைகளாக வாங்காமல், தற்போது பலரும் தங்கத்தை கட்டிகளாகவோ பிஸ்கட்களாகவோ வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தங்க நகை வியாபாரம் 27 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், அதேசமயம் கட்டிகள் மற்றும் நாணயங்களின் வியாபாரம் அதிகரித்திருப்பதாகவும் இந்தியா புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளர் சுரிந்தர் மேத்தா பிபிசி-யிடம் கூறினார்.

இந்தியா முழுக்க மக்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்குகிறார்கள். பெரு நகரங்களை விட சிறு நகரங்களில் தங்கள் அதிகம் வாங்கப்படுகிறது.

மாறியிருக்கும் இந்தப் போக்கு பற்றிப் பேசிய ஆசிஃப், "தங்கத்தின் விலை அதிகரித்துவரும் நிலையிலும் மக்கள் அதை வாங்கினால், அது அவர்களின் நிதி சேமிப்பைக் குறைக்கும். வங்கி வைப்பு குறையும். இது வங்கி அமைப்பில் உள்ள பணத்தையும், கடன் வழங்குவதற்கான தொகையையும் குறைக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இது கார்ப்பரேட் அல்லது விவசாயத் துறைகளுக்கு வழங்கப்படும் கடன்களை பாதிக்க்கலாம். பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கம் ஏற்படுத்தலாம்.''