You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தஞ்சை அரசுப் பள்ளியில் மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டியது யார்? என்ன நடந்தது?
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு அரசுத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கு படிக்கும் ஒரு மாணவி உட்பட 5 மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டிக் கொடுமைப்படுத்தியதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்களின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
அரசுப் பள்ளியில் நடந்தது என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 95 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த மாத இறுதியில் இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டி இரண்டு மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்திருந்ததாக பெற்றோர் கூறுகின்றனர்
இதனை அதே பள்ளியில் பணியாற்றி வரும் மூன்றாம் வகுப்பு ஆசிரியை செல்போனில் புகைப்படம் எடுத்து அவற்றை மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பி உள்ளார்.
புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இது தொடர்பாக கேட்டுள்ளனர். அதற்கு, 'உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் பேசிக் கொண்டு இருந்ததால் வாயில் செல்லோ டேப் ஒட்டியதாகத்' தலைமை ஆசிரியர் சொன்னதாகப் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மாணவரின் தாயார் என்ன சொல்கிறார்?
வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டியதாகக் கூறப்படும் ஒரு மாணவரின் தாயான தனலட்சுமி இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், பள்ளியில் அவரது மகன் உட்பட 5 மாணவர்களுக்கு, வகுப்பில் ஆசிரியர் இல்லாத போது பேசியதற்காக வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்டதாக கூறினார்.
“குழந்தைகளின் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டியது தொடர்பாக மூன்றாம் வகுப்பு ஆசிரியை எடுத்த புகைப்படங்கள் வாயிலாக இரண்டு நாட்களுக்கு பிறகு எங்களுக்கு தெரிய வந்தது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு 'உங்கள் மகன் வகுப்பறையில் பேசியதால் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டினோம். நான் ஒட்டவில்லை மாணவன் ஒருவர் ஒட்டியதாக', தெரிவித்தார்.''
“உங்கள் அனுமதி இல்லாமல் எப்படி மாணவர் ஒருவர் பிற மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டுவார் என கேட்டதற்கு இது தெரியாமல் நடந்துவிட்டது இதை பெரிதுபடுத்த வேண்டாம், மீண்டும் இது போன்று நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக தலைமை ஆசிரியர் கேட்டு கொண்டார்,” என்று கூறினார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூறுவது என்ன?
இது குறித்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் பிபிசி தமிழிடம் பேசுகையில், பள்ளி மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டிய விவகாரம் திங்கட்கிழமை அன்றே (நவம்பர் 11) தனது கவனத்திற்கு வந்தது என்றார்.
“ஆனால் நான் திருச்சியில் நடைபெற்ற தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நிகழ்ச்சிக்குச் சென்று விட்டதால் வட்டாரக் கல்வி அலுவலரை இதனை உடனடியாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டேன்,” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ''வட்டாரக் கல்வி அலுவலர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த விவகாரம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார். அதில், 'அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3 மணியளவில் நான்காம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் விடுப்பில் இருந்ததால், இரண்டாம் வகுப்பு ஆசிரியரை நான்காம் வகுப்பையும் சேர்த்து பார்த்துக் கொள்ளுமாறு கூறி இருந்தேன். அந்த ஆசிரியர் இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் ஒரு மாணவனை நான்காம் வகுப்புக்குச் சென்று யாரும் பேசாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த மாணவன் வகுப்பறையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டியுள்ளார். தலைமை ஆசிரியரான நான் ஒட்டவில்லை' என தெரிவித்துள்ளார்,” என்கிறார் மதியழகன்
வட்டாரக் கல்வி அலுவலர் கொடுத்த முதல் கட்ட அறிக்கையின் அடிப்படையில் நேரில் விசாரணை செய்து அதன் முழு அறிக்கையை விரைவில் உயர் அதிகாரிகளுக்கு சமர்பிக்க இருப்பதாக மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் தெரிவித்தார்.
‘புகைப்படம் எடுத்த ஆசிரியர் மீது விசாரணை தேவை’
அரசுப் பள்ளியில் மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டியது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்கிறார் குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மாணவர்கள் மீதான அனைத்து தண்டனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறு செய்தால் அதைச் சரி செய்ய ஆசிரியர்கள் ஆக்கபூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் கண்டிக்க வேண்டும்,” என்கிறார்.
“மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டிய சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியருக்குக் கவுன்சிலிங் தேவை. மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டியதைப் புகைப்படம் எடுத்து பொதுத்தளத்தில் வெளியிட்டது மிகப்பெரிய தவறு, இது குழந்தைகள் உரிமைக்கு எதிரானது. எனவே அந்த ஆசிரியரை விசாரிக்க வேண்டும்,” என்கிறார் தேவநேயன்.
மாணவர்கள் இவ்வாறு கொடுமைபடுத்தப்படுகிறார்கள் எனத் தெரிய வந்தால் பள்ளிக் கல்வி அலுவலர்கள் அல்லது மாவட்டக் குழந்தைகள் நல அலுவலருக்குப் புகார் கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து புகைப்படம் எடுத்தது குழந்தைகள் உரிமைகள் மற்றும் மாண்புக்கு எதிரானது,” என்று கூறுகிறார் அவர்.
“இச்சம்பவத்தில் குழந்தைகள் உரிமை மீறப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையே ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று முழுமையாக விசாரித்து, இனிமேல் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல் நடைபெறாமல் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்,” என்கிறார் தேவநேயன்.
தலைமை ஆசிரியர் தரப்பு விளக்கம் என்ன?
பெற்றோரின் புகார் குறித்து விளக்கம் கேட்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் புனிதாவை பிபிசி தமிழ் சார்பில் தொடர்பு கொண்டோம். "பள்ளியில் அன்றைய தினம் நடந்தது தொடர்பாக வட்டாரக் கல்வி அலுவலரிடம் தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டோம்,” என்று தலைமை ஆசிரியர் தரப்பில் பதில் கூறப்பட்டது. பெற்றோர்களின் புகார் தொடர்பாக மேற்கொண்டு ஏதும் கூற பள்ளி தரப்பில் மறுத்துவிட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)