You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவில்களில் பள்ளி, கல்லூரி மாணவியரை கந்த சஷ்டி கவசம் பாட வைக்க எதிர்ப்பு - அமைச்சர் சேகர்பாபு பதில் என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளை வைத்து கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
நவம்பர் இரண்டாம் தேதியன்று சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 51 பேர் என மொத்தம் 120 பேர் இதில் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.
'விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதி'
அந்தத் தருணத்தில் இதுகுறித்து பேட்டியளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, "இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இசைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
738 மாணவ, மாணவிகளுக்கு கந்த சஷ்டி பாராயணம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோல 12 கோவில்களில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பாட உள்ளதாகவும் அவர் கூறினார்.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டிருந்த இந்த கந்த சஷ்டி பாராயண நிகழ்வின் வீடியோவை மேற்கோள்காட்டி, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், பாராட்டும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
ஆனால், விரைவிலேயே தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் இயக்கங்களிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. நவம்பர் ஐந்தாம் தேதி வெளியான திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ இதழான விடுதலையின் முதல் பக்கத்திலேயே இதனைக் கண்டித்து செய்தி வெளியானது.
"தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தென்மாவட்டத்தில் நடத்தப்படும் கல்லூரியிலிருந்து கந்த சஷ்டி கவசம் பாட முருகன் கோவிலுக்கு மாணவர்/மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று துறையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக ஒரு செய்தி வருகிறது. கல்லூரி நடத்தப்படுவது எந்தத் துறையால் என்றாலும், மாணவர்கள் வந்திருப்பது கல்வி கற்கத் தானே ஒழிய, பஜனை செய்ய அல்ல. திராவிட மாடல் அரசின் கொள்கை செயல் திட்டங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது யார் என்ற கேள்வி எழவில்லையா?" என அந்நாளிதழ் கேள்வி எழுப்பியிருந்தது.
‘திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது’
அதேபோல, மே 17 இயக்கமும் இதனைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டது. "கந்த சஷ்டி பாராயணம் என்ற தொடர் ஆன்மீக நிகழ்வை முன்னெடுப்பதும், அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைப்பதும், திராவிடத்தின் வழிவந்த - 'திராவிட மாடல்' ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானதாகும்.”
“மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்த்தெடுக்கும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல" என அந்த இயக்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
திமுகவின் தோழமைக் கட்சிகள் எதிர்ப்பு
விரைவிலேயே தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதனை எதிர்க்க ஆரம்பித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார் இதனைக் கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
"தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போக வேண்டும் என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் முதலமைச்சர். அவரது நல்ல நோக்கத்துக்கு மாறாக பள்ளி மாணவிகளைப் பாராயணம் பாடச் சொல்லி ‘பழமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு.”
“கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ‘அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி கல்வி, உயர்கல்வித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்பது தவிர வேறு வழியில்லை" என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச் சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் சென்னை ராயப்பட்டையில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாகத் திரண்டு, அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஊர்வலமாகச் செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இப்படி எதிர்ப்புகள் வந்தபோதும், சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் ஆறாம் தேதி மாணவியரை வைத்து கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றிருக்கிறது.
வட பழனியில் நடந்த நிகழ்வில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 50 பேர் என மொத்தம் 119 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர்.
அனைத்துலக முருகன் மாநாடும் விமர்சனங்களும்
தி.மு.க. அரசு 2021இல் பதவியேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக பி.கே. சேகர் பாபு பொறுப்பேற்றார். இதற்குப் பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் பணிகள் வேகமெடுத்தன. வெகு விரைவிலேயே அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிலரை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நியமனம் செய்தார்.
மேலும், நூற்றுக்கணக்கான கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்வது, ஆன்மீக நூல்களை வெளியிடுவது என விறுவிறுப்பாகச் செயல்பட்டார் சேகர் பாபு. ஆனால், விரைவிலேயே இவரது நடவடிக்கைகள் மீது விமர்சனங்களும் எழுந்தன.
குறிப்பாக, அனைத்துலக முருகன் மாநாடு நடத்த முடிவு செய்தபோது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த மாநாட்டிற்கு தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்துவரும் இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத்தை அழைத்ததும், அதில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தன. குறிப்பாக, 8வது மற்றும் 12வது தீர்மானங்கள் விமர்சனத்தை எதிர்கொண்டன.
எட்டாவது தீர்மானமாக, 'கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியரைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.’ என்றும் 12வது தீர்மானமாக ‘முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது’ என்றும் குறிப்பிடப்பட்டது.
இதற்குக் கண்டனம் தெரிவித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, "இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே! தி.மு.க. அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர் - இதற்குமேல் விளக்கத் தேவையில்லை" என்று குறிப்பிட்டார்.
தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அந்தத் தருணத்தில் இதற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆனால், தி.மு.கவின் தரப்பில் இருந்து அப்போது பதில் ஏதும் வரவில்லை.
சேகர் பாபு இவற்றையெல்லாம் தானாகச் செய்யவில்லையெனக் கருதுவதாகச் சொல்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி.
"அறநிலையத் துறை நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் மீது தனக்கு உரிமை இருப்பதாகக் கருதுகிறார் சேகர் பாபு. அறநிலையத் துறை அரசின் அங்கம். அப்படியிருக்கும் போது சேகர் பாபு தன் விருப்பப்படி எப்படிச் செயல்படுகிறார் என்பது புரியவில்லை. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது.” என்கிறார் கொளத்தூர் மணி.
தொடர்ந்து பேசிய அவர், “அறநிலையத் துறை செய்வது சரியென்றால், பள்ளிகளில் சென்று இதேபோலப் பேசிய மகாவிஷ்ணு மீது வழக்குப் போட்டது ஏன்? இதையெல்லாம் அவர் தானாகச் செய்வதாகத் தோன்றவில்லை" என்று கூறினார்.
அமைச்சர் சேகர்பாபு பதில் என்ன?
கந்த சஷ்டி பாராயணம் தொடர்பாக எழுந்திருக்கும் எதிர்ப்புகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பிபிசி கேட்டபோது, "இதை ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. கடந்த ஆண்டும் வடபழனி, கந்தகோட்டம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் இதேபோன்ற பாராயணம் நடந்தது. இதை ஏன் தேவையில்லாமல் சர்ச்சையாக்குகிறீர்கள்?" என்கிறார் சேகர் பாபு.
தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் இப்படி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
கூட்டணிக் கட்சியினரே இது குறித்து விமர்சிப்பது குறித்துக் கேட்டபோது, "ஆன்மீகம் தொடர்பாக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்கிறோம். அதில் கவனம் செலுத்துங்கள்" என்று மட்டும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)