You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்களை விமர்சிக்கும் தி.க, கம்யூனிஸ்ட்- இது பாஜகவை எதிர்க்கும் உத்தியா?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இந்த வாரம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை நடத்திய இரண்டு நாள் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மை போன்றவை திமுகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக உள்ளன. அவ்வாறு இருக்க, திமுக அரசு முருகன் மாநாட்டை நடத்துவது குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் அந்த விமர்சனங்களை கடுமையாக்கியுள்ளன.
திமுகவின் தாய்கழகமான திராவிட கழகம் மற்றும் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக அரசின் முயற்சியை வரவேற்றுள்ளார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தீர்மானங்கள் என்ன?
முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில், ‘முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி’ இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்தவும், அந்த கல்வி நிலையங்களில் ‘சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகள்’ அறிமுகப்படுத்தவும் அரசுக்கு பரிந்துரைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மாணவர்களைக் கொண்டு முருகன் கோயில்களில், ‘கந்தசஷ்டி பாராயணம்’ செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
‘முருகன் மாநாடு- தமிழர் பண்பாட்டு மாநாடு’- உதயநிதி ஸ்டாலின்
மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும், அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருக்காது. திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறினார்.
மாநாட்டை வாழ்த்தி பேசிய, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சியின் போதுதான் என்று கூறினார்.
“நீதிக்கட்சி ஆட்சியின் போது இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசிக் கொண்டவர் தந்தை பெரியார். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர். இந்த மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமில்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாக நடைபெறுகிறது” என்று காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
தோழமை இயக்கங்கள் விமர்சனம்
முருகன் மாநாட்டை திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மத அடிப்படையிலான விழாக்களை அரசு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
“இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது” என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்து அறநிலையத் துறை என்பதே கோவில் பாதுகாப்பு, நிதி வரவு - செலவுகளை நிர்வகிப்பதற்கானதே தவிர, இந்து மத பிரசாரத்திற்கானதல்ல” என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திமுக அரசை சாடியுள்ளார்.
தனது அறிக்கையில் மாணவர்களை கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்யவும், சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தவும் பரிந்துரைக்கும் தீர்மானத்தை விமர்சித்த கி.வீரமணி, “இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? இந்து அறநிலையத் துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்புடையது அல்ல, தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் சேகர்பாபு மீதான விமர்சனம்
‘‘கோவில் துறையைப் பாதுகாக்க அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர் இப்போது கோவிலிலேயே குடியிருக்கிறார்” என்று மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவைப் பாராட்டி பேசியிருந்தார்.
அதை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிய கி.வீரமணி, “அவர் (அமைச்சர் சேகர் பாபு) தனது துறைப் பணிகளில் தேவையானவற்றைத் தாண்டிச் செய்கிறார். அதீத ஆர்வத்துடன் அவர் இருக்க வேண்டாம், இருக்கவும் கூடாது.”
“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்றத் தடை இன்னும் நீங்காது தொடரும் நிலை மாறவேண்டும், அதற்குரிய சட்ட நடவடிக்கைகள், நியமனங்கள், புதிய மாணவர் சேர்க்கைகள் போன்ற பணிகளில் அவர் தீவிரம் காட்டவேண்டும்” என்றும் விமர்சித்திருந்தார்.
பாஜகவின் வேல் யாத்திரை
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல்.முருகன், முருகன் வழிபாட்டுத் தலங்களில் வேல் யாத்திரை நடத்தினார்.
இந்துக்களின் நலன்களை பாதுகாக்க அந்த யாத்திரை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் ஆ.ராசா இந்து மதம் குறித்தும், உதயநிதி ஸ்டாலின் சனதான தர்மம் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானதை அடுத்து, திமுகவை இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று தொடர்ந்து விமர்சித்து வந்தது பாஜக.
முத்தமிழ் முருகன் மாநாட்டை விமர்சித்து பேசிய பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, “சனாதன தர்மம் வேண்டாம், வெட்டி வீழ்த்த வேண்டும் என்று கூறியவர்கள், பழநியில் பால் காவடி தூக்குவதற்கு பதிலாக, அரசியல் காமெடி செய்கிறார்கள். தமிழ் பண்பாடு என்றால் திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகியோர்தான். "
"பெரியாரின் மாடல் தான் திராவிட மாடல் என்று கூறும் திமுக இன்று தமிழ் பண்பாடு என்ற வார்த்தையை உச்சரிக்கிறார்கள், ஒரு நாடகத்தை பழநி மண்ணில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று மற்றொரு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
பாஜகவை எதிர்க்கும் உத்தியா?
தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “தமிழ்நாட்டில், பாஜக தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், சமீப காலங்களில், மாநிலத்தில் குறிப்பிட்டத்தக்க கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டின் இந்து வாக்குகளை பெறுவதற்கு பாஜக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே இப்போது நிலவும் அரசியல் சூழலில் இந்த மாநாடு அவசியமானது” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வட இந்தியாவில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் கடவுளையும் மதத்தையும் பயன்படுத்தி மக்களை அரசியல் வாக்கு வங்கியாக மாற்ற முயன்று வருகிறது. அதற்கு இடமளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தும் நோக்கில் அறநிலையத்துறை செயல்பட்டால் அதை வரவேற்கிறோம்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
வரலாற்று பேராசிரியர் கருணானந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “முருகனுக்கு மாநாடு நடத்துவது ராமருக்கும் கிருஷ்ணருக்கும் மாற்றான அரசியல் உத்தியாக இருக்கலாம். ஆனால் திமுகவின் வளர்ச்சி என்பது திமுகவுக்கும் மதத்துக்குமான உறவைப் பொறுத்து அமையவில்லை. மத பிடிப்பு இல்லாததால், மதம் என்ற பெயரில் நடைபெற்ற கொள்ளைகளை, மூடநம்பிக்கைகளை எடுத்துரைத்ததால், நேர்மையானவர்கள் என்று மக்கள் நம்பினர்.” என்கிறார்.
மேலும், “சமூக எழுச்சி இயக்கங்கள் பெரிதாக நடைபெறாத வட இந்தியாவில் மதத்தைக் கொண்டு அரசியல் செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டில் அந்த நிலைமை கிடையாது. கல்லூரிகளில் ஆன்மிக பாடம் நடத்தலாம் என்று கூறுவது மதச்சார்பற்ற அரசுக்கு அழகல்ல, மதத்தை மறுக்கவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம்” என்றார்.
மேலும் முருகனை தமிழ் கடவுள் என்று கூறுவதைக் குறித்தும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
“யேசுவை யூத கடவுள் என்று கூற முடியுமா? அல்லாவை அரபிக் கடவுள் என்று கூறலாமா? மதம் அனைவருக்குமானது, மொழியின் பெயரால் பிரிக்கக் கூடாது”, என்கிறார்.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் இந்து ஆன்மிக நூல்களை பாடமாகச் சேர்க்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்ததை ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு சுட்டிக்காட்டினார்
பிபிசி தமிழிடம் பேசிய சந்துரு“மத நிறுவனம் அல்லது அமைப்பு நடத்தும் கல்வி நிலையத்தில் மதச்சார்பற்ற பாடங்கள் கற்றுக் கொடுத்தால் அதை பாராட்ட வேண்டும் என்று 1963ம் ஆண்டு ‘சித்தாஜ்பாய் எதிர் பாம்பே அரசு’ என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே மதம் சார்ந்த பாடங்கள் இந்தக் கல்லூரிகளில் கட்டாயமில்லை.” என்றார்.
இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் நடைபெறும் மத நடவடிக்கைகளை தடுக்கக் கூடாது என்று கூறிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டப்படி மதத்தை பரப்புவது தனி நபரின் உரிமை, அதை அரசு செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்.
“2026ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு எதையும் செய்யக் கூடாது. இப்படி செய்வது மிகவும் பிற்போக்குத்தனமானது” என்று சந்துரு தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)