You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் மின் மாற்றி பற்றாக்குறையால் மின் இணைப்புகள் வழங்குவதில் அசாத்திய தாமதமா?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் விநியோக மின்மாற்றிகள் பற்றாக்குறையால், குறைந்த மின்னழுத்த புதிய மின் இணைப்பு சேவைகளுக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவலின்படி, மாநிலம் முழுவதும் பரவலாக பலவிதமான மின் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள், மின்மாற்றிகள் இல்லாத காரணத்தால் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் மின்மாற்றிகள் பற்றாக்குறை என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
தமிழகத்தில் மின் இணைப்புகளின் எண்ணிக்கையும், மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
மின் பகிர்மானக்கழகத் தரவுகளின்படி, தமிழகத்தில் 2.4 கோடி வீட்டு மின் இணைப்புகள் உட்பட மொத்தம் 3.4 கோடி மின் இணைப்புகள் உள்ளன.
மத்திய மின்சார ஆணையத்தின் கடந்த ஆண்டு ஆய்வறிக்கையின்படி, தென் மாநிலங்களில் அதிகளவு மின் தேவையுள்ள முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது.
தற்போது 20 ஆயிரம் மெகா வாட் என்ற அளவில் உள்ள மின்தேவை நகரமயமாக்கல் மற்றும் தொழில் வளர்ச்சி காரணமாக, வரும் 2026–2027 ஆம் ஆண்டில் 23,013 மெகா வாட் என்ற அளவுக்கு உயரும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
4 ஆண்டுகளில் புதிதாக 27 லட்சம் மின் இணைப்புகள்!
கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டசபையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தபோது, அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 27 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மின் இணைப்புகள் பலருக்கு மறுக்கப்படுவதாகவும், மிகவும் தாமதமாகி வருவதாகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ''உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்போருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.'' என்றும் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தபடி, குடியிருப்புகளில் வீடுகளுக்கான மின் இணைப்பு 3 நாட்களில் வழங்கப்பட்டாலும், குறுந்தொழில்கூடங்கள் மற்றும் புதிதாகக் கட்டப்படும் சிறிய அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்குத் தேவைப்படும் குறைந்த மின்னழுத்த (LT) மின் இணைப்பு சேவைகளுக்கு விண்ணப்பித்துள்ள பல ஆயிரம் பேருக்கு, பல மாதங்கள் கடந்தும் மின் இணைப்பு கிடைக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் மூலமாகத் தெரியவந்துள்ளது.
பல பகுதிகளில் ஓராண்டுக்கு மேலாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் புதிய மின்மாற்றிகள் அவசியமாகவுள்ள குறுந்தொழில் கூடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்பு மட்டுமின்றி, விவசாயத்துக்கான தட்கல் மின் இணைப்பு, தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளும் அடங்கும்.
மின் இணைப்புகள் வழங்கப்படாமலிருப்பதற்கு விநியோக மின்மாற்றிகள் (DT-Distribution Transformers) பற்றாக்குறையே காரணம் என்கிறார் கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளரும், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினருமான கதிர்மதியோன்.
இதனால் நுகர்வோருக்கு மட்டுமின்றி, மின் வாரியத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகச் சொல்கிறார் அவர்.
''கோவை மாவட்டத்தில் மட்டும் பல நுாறு விண்ணப்பங்களுக்கு, 9 மாதங்களுக்கும் மேலாகியும் இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. சில இடங்களில் ஓராண்டு கடந்தும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதற்கு மின் மாற்றிகள் இல்லாததுதான் காரணம் கோவையில் மட்டும் 242 விநியோக மின் மாற்றிகளுக்கான தேவை இருப்பதாகத் தெரிகிறது.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கதிர்மதியோன்.
மின்மாற்றிகள் இல்லாததால், தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள புதிய மின் இணைப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து, தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த அமைப்பு சார்பில் தகவல் கேட்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அந்த தகவலைப் பெற்று ஒருங்கிணைத்துத் தராமல், மாநிலம் முழுவதும் உள்ள மண்டல வாரியான தலைமைப் பொறியாளர்களுக்கு அந்த மனு அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அந்த மனுவை அனுப்பி, அவர்களால் கோட்டப்பொறியாளர்களுக்கு (Divisional Engineers) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோட்டப்பொறியாளர்கள் சார்பில், அந்தந்தப் பகுதிகளில் நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் இந்த அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
- இந்தியாவில் ஏசியை 20°C-க்கு கீழ் குளிர்விக்க தடை செய்தால் சாமானியர்களுக்கு என்ன நன்மை?
- அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் புதிய புகார் - குஜராத் துறைமுகத்தில் என்ன நடக்கிறது?
- தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர வாய்ப்பு - எவ்வளவு உயரும்? இன்றைய டாப்5 செய்திகள்
- சுட்டெரிக்கும் கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 10 எளிய வழிகள்
10 நாளுக்கும், ஓராண்டுக்கும் ஒரே அபராதம்தான்!
அதன்படி, சென்னை வடக்கு கோட்டத்தில் மட்டும் 59 மின்மாற்றிகள் இல்லாததால் 113 மின் இணைப்புகள் வழங்கப்படாமலிருப்பதும், 2024 மே 14 தரப்பட்ட விண்ணப்பமும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
சென்னை தெற்கு கோட்டத்தில் 2023 செப்டம்பரில் தரப்பட்ட விண்ணப்பமும் இன்னும் நிலுவையில் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் கோட்டத்தில் மட்டும் 215 மின் இணைப்பு விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் 44, கன்னியாகுமரியில் 43, விருதுநகரில் 28, துாத்துக்குடியில் 8 என்ற எண்ணிக்கையில் மின் இணைப்பு விண்ணப்பங்கள், மின்மாற்றிகள் பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த 4 கோட்டங்களில் மட்டும் மொத்தமாக 120க்கும் அதிகமான விநியோக மின்மாற்றிகள் தேவையிருப்பதும் மின்வாரியப் பொறியாளர்களால் அனுப்பப்பட்டுள்ள பதில் மூலமாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற மின்கோட்டங்களின் நிலை குறித்து தகவல்கள் இன்னும் வரவில்லை என்கிறார் கதிர்மதியோன்
''தமிழ்நாடு மின்சாரப் பகிர்மான செயல்திறன் தரநிலை விதிமுறைகள் 2004-ன்படி, கட்டமைப்பு வசதியுள்ள இடங்களில் 60 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கவேண்டும்; மின்மாற்றி, மின் கம்பம் நீட்டிப்பு பணிகள் இருந்தாலும் அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். அந்த காலவரம்பைத் தாண்டிவிட்டால் ஒரு நாளுக்கு 200 ரூபாய் வீதமாக நுகர்வோருக்கு அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் அபராதத்தை மின் பகிர்மானக்கழகம் வழங்க வேண்டும்.'' என்றார் கதிர்மதியோன்.
இருப்பினும் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
10 நாட்களுக்கும், ஓராண்டுக்கும் ஒரே அளவில் அபராதம் என்பதால்தான், அபராதத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆண்டுக் கணக்கில் மின் இணைப்பு வழங்காமல் மின்வாரியம் தாமதித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.
இதனால் பல ஆயிரம் மக்கள் குறிப்பாக சிறுதொழில் முனைவோர் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன், மின் வாரியத்துக்கும் பல கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது என்கிறார் அவர்.
மின்மாற்றிகள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மின் வாரியத்தில் எடுக்கப்படும் குளறுபடியான முடிவுகளும், ஊழல் போக்கு அதிகரித்திருப்பதுமே காரணம் என்கிறார் தமிழ்நாடு மின் வாரியத்தின் திட்டங்கள் பிரிவின் முன்னாள் தலைமைப் பொறியாளரான குமாரவேல்.
மின் வாரியத்தில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர், 25 ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்த 2 மணி நேரத்தில் வீடுகளுக்கான மின் இணைப்பு வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
''முன்பு மின் இணைப்புக்கான மின்மாற்றி உள்ளிட்ட பொருட்களுக்கான கொள்முதல் விவகாரங்களில் அரசின் தலையீடு பெரியளவில் இருந்ததில்லை. இப்போது மின் வாரியத்துக்கான கொள்முதலில் கடை பிடிக்கப்படும் புதுப்புது நடைமுறைகள் (System), தேவையற்ற அரசியல் தலையீடுகளால் பிரச்னை ஏற்படுகிறது. அதுவே மின்மாற்றி, மின் மீட்டர் போன்றவை பற்றாக்குறையாவதற்கு முக்கியக்காரணமாகிறது,'' என்கிறார் அவர்.
''களத்தில் இருக்கும் நடைமுறைச்சிக்கல்களே காரணம்!''
இந்த கருத்தை மறுக்கும் தமிழ்நாடு மின் வாரியப் பொறியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவரும், தமிழ்நாடு மின்சாரப் பொறியாளர்கள் சங்கத்தின் (PESOT-Power Engineers Society of Tamil Nadu) தலைவருமான காந்தி, மின் பகிர்மானக்கழகத்தில் மின்மாற்றி பற்றாக்குறை என்பது எளிதில் தீர்க்கக்கூடிய பிரச்னை என்கிறார்.
''பல கட்டடங்களுக்கு கட்டட நிறைவுச்சான்று இல்லாததாலும் மின் இணைப்பு தரமுடிவதில்லை. மின்மாற்றி பொருத்தும் இடங்களில் ஏற்படும் பிரச்னை, மற்றவர் இடத்தைக் கடந்து செல்வதில் உள்ள சிக்கல் என மின் வாரிய அலுவலர்கள் களத்தில் காணும் பிரச்னைகள் ஏராளம். மின்மாற்றி பற்றாக்குறைக்கும், மின் வாரிய அலுவலர்களே பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.'' என்றார் காந்தி.
தற்போது மின் வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்கள் பலரிடமும் பிபிசி தமிழ் பேசியபோது, மின்மாற்றிகள் பற்றாக்குறை பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்ட அவர்கள், நகரங்கள் விரிவாக்கம் காரணமாக பல பகுதிகளுக்கு புதிய மின் மாற்றிகள் அதிகம் தேவைப்படுவதோடு, பழைய குடியிருப்புப் பகுதிகளில் கட்டடங்கள் மற்றும் வணிகப்பயன்பாடு மின்தேவை அதிகரிப்பால் கூடுதல் மின்திறனுள்ள மின்மாற்றிகளை மாற்ற வேண்டிய அவசியமும் உள்ளதாகக் கூறுகின்றனர்.
அரசின் பதில் என்ன?
மின்மாற்றிகள் பற்றாக்குறையால் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு மின்வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ், பல்வேறு மின் பகிர்மானக்கழக கோட்டப்பொறியாளர்களிடம் பெற்ற தகவல்களைப் பற்றி அவரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''அது அந்தந்தப் பகுதிகளில் சரி செய்யப்பட வேண்டிய பிரச்னையாக மட்டுமே இருக்கும். ஒட்டுமொத்தமாக மின்மாற்றிகள் பற்றாக்குறையால் மின் இணைப்பு தாமதமாவதில்லை. எங்கே எவ்வளவு நாளாக மின் இணைப்பு தாமதப்படுகிறது என்று குறிப்பிட்டுத் தகவல் தெரிவித்தால் அந்தப் பகுதிகளில் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு