You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர வாய்ப்பு - எவ்வளவு உயரும்? இன்றைய டாப்5 செய்திகள்
இன்றைய தினத்தில் (19.05.2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வந்துள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர உள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
அந்தச் செய்தியில் தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மின் கட்ட ணம் கடந்த 2022-ஆம் ஆண்டில் பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-இல் ஜூலை மாதம் 2.18 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையில், "கடன், உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நிகழாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்தவும், மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தினமணியின் செய்தி கூறுகிறது.
மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்புவரும் ஜூலை 1-க்குள் வெளியாகலாம் என மின்வாரியத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி தினமணி செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.1.2 கோடி மோசடி
திருத்துறைப்பூண்டியில் சிபிஐ அதிகாரி எனக் கூறி 1.2 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ. 1.19 கோடி மோசடி செய்த 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டையை சேர்ந்த மருத்துவரான மீரா உசைனைத் தொடர்பு கொண்ட மர்மநபர் சிபிஐ அதிகாரி எனக் கூறி, நீங்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்து, நான் தெரிவிக்கும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கைது செய்துவிடுவதாகவும் கூறியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது
இதையடுத்து, மீரா உசைன், தனது வங்கிக் கணக்கில் இருந்து, ரூ.55 லட்சம், மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 64.20 லட்சம் என அனுப்பியுள்ளார். இதன் பின்னர் இந்தச் சம்பவம் பற்றி திருவாரூர் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (25), பெனட்ரிக் ராஜ் (27) ஆகிய இருவரும் ரூ.55 லட்சம் பணம் பரிமாற்ற வங்கிக் கணக்கை உருவாக்கியவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் விசாரணை நடைபெறுவதாக தினமணி செய்தி கூறுகிறது.
டாஸ்மாக் வழக்கு - அமலாக்கத் துறை சோதனை நிறைவு
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை சோதனையை நிறைவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத் துறை நடத்திய 68 மணி நேர விசாரணை நேற்று நிறைவடைந்ததாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த இரண்டு நாட்களாக டாஸ்மாக் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மே 16ஆம் தேதியன்று சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் அவர்களின் இல்லத்திலும் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-2021 ஆண்டுகளுக்கு இடையே லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் விசாரணையை தொடங்கியதாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
நயினார் நாகேந்திரனைச் சந்தித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்த 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூரில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி சமீபத்தில் நடைபெற்றது. அதில், "பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது, அனுப்பர்பாளையம் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் நிலையங்களில் காவலர்களாகப் பணியாற்றும் மந்திரம், சின்னசாமி ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்" அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த இந்த 2 காவலர்களும் சகோதரர்கள். பணி நேரத்தில் சீருடையுடன் சென்று தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சித் தலைவரை சந்தித்துப் பேசியதால், இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசையின் செய்தி கூறுகிறது.
இலங்கையில் மின் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு
இலங்கையில் மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்ததாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க மின்சார சபை கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பேசியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
"தேர்தலுக்கு முன்னர் 30 சதவீத மின் கட்டணம் குறைக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தி கட்சிதான் இன்று கட்டண அதிகரிப்பிற்கான யோசனையை முன்வைத்துள்ளது. கடந்த காலங்களில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளமையினாலேயே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகக் கூறினர். அவ்வாறெனில் தற்போது மீண்டும் ஊழல் அதிகரித்துள்ளதா? 18 சதவீதத்தால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். மின்சாரசபையின் இந்த நியாயமற்ற கோரிக்கை தொடர்பில் நாம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்துவோம். அது மாத்திரமின்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நாம் முன்னிற்போம்" என்று அவர் தெரிவித்ததாக வீரகேசரி செய்தி கூறுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு