இலங்கை: மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஸ்பிரிங் வேலி பகுதியில் சிக்கியுள்ள மக்கள்
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இலங்கையின் பல பகுதிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்றுதான் பதுல்ல மாவட்டத்தில் உள்ள ஸ்பிரிங் வேலி மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதிகள்.
ஸ்பிரிங் வேலி தோட்டப்பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த சுமார் 1000 பேர் பெரியளவிலான மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஸ்பிரிங் வேலியில் இருந்து மேமலைக்கு செல்லும் வீதியில் உள்ள மூன்று பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் பகுதியில் இருந்து வெளியே செல்ல முடியாமல் தவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான உணவு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பதுல்லயில் இருந்து ஸ்பிரிங் வேலி வழியாக பண்டாரவல திமோதர செல்லும் பிரதான வீதியின் ஸ்பிரிங் வேலியின் பிரதான பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
அடித்துச்செல்லப்பட்ட பாலம் இருந்த இடத்தையும் அப்பகுதி மக்கள் காண்பித்தனர்.
அங்கிருக்கும் குடியிருப்புகள், மின்சார கம்பங்கள், வீதிகள் என பலதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பான பிரச்னையாக ஸ்பிரிங் வேலி மேமலையில் இருக்கும் மக்களுக்கு உலர் உணவு பொருட்களை கொண்டு செல்வதில்தான் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து கிமீ வரை உணவு பொருட்களை தூக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



