மும்பையில் 3 ஆண்டுகள் வீட்டிற்கு உள்ளேயே அடைபட்டிருந்த நபர் மீட்பு
நவி மும்பையில் மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளயே இருந்த நபர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். 55 வயதான அனுப் குமார் நாயர் மூன்று ஆண்டுகளாகத் தனது வீட்டை விட்டு வெளியே வந்ததில்லை.
உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் அவரின் சகோதரர் மற்றும் பெற்றோர் இறந்துள்ளனர். அதன்பிறகு, அனுப் குமார் மன அழுத்தத்துக்கு உள்ளானார். அதன்பிறகு, வெளி உலகத்துடனான தொடர்பை அவர் முற்றிலுமாக துண்டித்துவிட்டு, வீட்டிலேயே இருந்துள்ளார்.
அவர் மிக அரிதாகவே வீட்டின் கதவைத் திறப்பார் என்றும் குப்பையைக் கூட வெளியே கொட்டுவதில்லை எனவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
தனது பெற்றோரின் FD பணத்தை தன் வங்கிக் கணக்குக்கு மாற்றி, இவர் செலவு செய்து வந்துள்ளார். அனுப்பை குறித்த தகவலறிந்ததும் சோஷியல் அன்ட் எவாஞ்சலிகல் அசோசியேஷன் ஆஃப் லவ் எனப்படும் NGO அமைப்பினர் அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக வீடு சுத்தப்படுத்தப்படாமல் இருந்ததால், வீடு முழுவதும் குப்பையாக இருந்துள்ளது. இதனால் அனுப்பின் காலிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்து மீட்கப்பட்ட அவர் பன்வேலில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



