'தக் லைஃப்' படம் கர்நாடகாவில் வெளியாகாததால் எத்தனை கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்?

தக் லைஃப், தமிழ்நாடு, கர்நாடகா, மொழி

பட மூலாதாரம், @MadrasTalkies_

படக்குறிப்பு, இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

'தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது' என கமல்ஹாசன் பேசியதால் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்னைகளையடுத்து, 'தக் லைஃப்' திரைப்படம் இன்று (ஜூன் ஐந்தாம் தேதி) அங்கே வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் எவ்வளவு இழப்பு ஏற்படும்?

கன்னட மொழி குறித்த கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, அபிராமி, சிலம்பரசன் ஆகியோர் நடித்திருக்கும் 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகா தவிர உலகம் முழுவதும் இன்று (ஜூன் 5ஆம் தேதி) வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், 'கன்னட மொழி தமிழில் இருந்து தோன்றியது' என்ற கமல்ஹாசனின் பேச்சு கர்நாடக மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதால், அந்த மாநிலத்தில் மட்டும் ஜூன் ஐந்தாம் தேதி படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கமல்ஹாசனுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவர் மன்னிப்புக் கேட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் எனக் குறிப்பிட்டது உயர்நீதிமன்றம். ஆனால், கர்நாடகா பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்திவருவதாக ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துவிட்டது.

தக் லைஃப், தமிழ்நாடு, கர்நாடகா, மொழி

பட மூலாதாரம், @MadrasTalkies_

படக்குறிப்பு, கர்நாடகா மாநிலத்தில் மட்டும் ஜூன் ஐந்தாம் தேதி தக் லைஃப் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

"தமிழ், கன்னடம், தெலுகு, மலையாளம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பு நிலையானது மற்றும் இதயப்பூர்வமானது." என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், "சினிமா என்பது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. எனது வார்த்தைகள், அவற்றுக்கான உண்மையான நோக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது உண்மையான பாசம் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன்" என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஆகவே, இப்போதைய சூழலில் 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்கள், "அன்பு மன்னிப்புக் கேட்காது" என்ற தலைப்பில் பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எத்தனை கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்?

'தக் லைஃப்' திரைப்படம், எல்லா இடங்களிலும் வெளியாகும் தேதியில் கர்நாடக மாநிலத்தில் வெளியாகாவிட்டால், தயாரிப்புத் தரப்புக்கு கணிசமான அளவுக்கு வசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

"கடந்த சில ஆண்டுகளில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வசூல் செய்யும் முறை வெகுவாக மாறியிருக்கிறது. படம் வெளியாகும் முதல் வார இறுதியில்தான் பெருமளவு வசூல் கிடைக்கிறது. குறிப்பாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள், முதல் வார இறுதிக்குள் தங்கள் பெருமளவு தொகையை வசூலித்துவிடுகின்றன" என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளரான ஸ்ரீதர் பிள்ளை.

ஆகவே, ஜூன் ஐந்தாம் தேதி 'தக் லைஃப்' படம் வெளியாகாவிட்டால் தயாரிப்புத் தரப்புக்கு கணிசமான இழப்பு ஏற்படலாம். "'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் சுமார் 40 கோடி ரூபாய் முதல் 45 கோடி ரூபாய் வரை வசூலிக்கலாம். இதில் தயாரிப்பாளர்களுக்கு 10 - 15 கோடி ரூபாய் வரை கிடைக்கலாம். கர்நாடகாவில் இன்று (ஜூன் 5ஆம் தேதி) படம் வெளியாகாவிட்டால் இந்த பத்து - பதினைந்து கோடி ரூபாய் அவர்களுக்கு இழப்பு ஏற்படும்" என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்சயன்.

தனஞ்சயன் தரும் தகவல்களின்படி, பெரிய நடிகர்கள் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தக்க தொகையை வசூலித்திருக்கின்றன. ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் 67.7 கோடி ரூபாயையும் லியோ திரைப்படம் 41.35 கோடி ரூபாயையும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் 28.1 கோடி ரூபாயையும் GOAT திரைப்படம் 27.95 கோடி ரூபாயையும் விக்ரம் திரைப்படம் 22.1 கோடி ரூபாயும் வசூலித்திருக்கின்றன.

தக் லைஃப், தமிழ்நாடு, கர்நாடகா, மொழி

பட மூலாதாரம், @MadrasTalkies_

அதேபோல, சில கன்னடத் திரைப்படங்களும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றிருக்கின்றன. உதாரணமாக, கேஜிஎஃப் - 2 திரைப்படம், 114.25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

ஆனால் இழப்பைவிட, இந்தப் படத்தை வெளியாகாமல் தடுப்பதன் மூலம் இரு மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினர் இடையிலான உறவு பாழாகிறது என்பதுதான் இதில் ஏற்படக்கூடிய பெரிய இழப்பு என்கிறார் தனஞ்சயன்.

"தமிழ்த் திரைப்படங்கள் கர்நாடக மாநிலத்தில் வெளியாவதும் கன்னடத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாவதும் ஒருபுறமிருக்க கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரைக்கலைஞர்கள் தமிழ்த் திரையுலகிலும் இயங்குகிறார்கள். உதாரணமாக, ஹொம்பாலே ஃபிலிம்ஸ் சிலம்பரசனை வைத்து அடுத்ததாக படம் தயாரிக்கவிருக்கிறது. உபேந்திரா 'கூலி' திரைப்படத்தில் நடிக்கிறார். இவர்களுக்கெல்லாம் சிக்கல் ஏற்படாதா?

அதனால்தான் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கர்நாடகா ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்சிற்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அவர்கள் புதன்கிழமைக்குள் எந்த முடிவும் எடுக்கவில்லையென்றால் வியாழக்கிழமையன்று படம் வெளியாகாது. அது எல்லாத் தரப்பிற்குமே இழப்பாகத்தான் முடியும்" என்கிறார் தனஞ்சயன்.

'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாகாமல், சற்றுத் தாமதமாக வெளியானால் என்ன நடக்கும்?

"அப்படி தாமதித்து வெளியானால், பெரிய அளவில் வசூல் செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. படம் வெளியாகும் முதல் வாரத்தில்தான் எல்லோரும் படத்தைப் பார்க்க விரும்புவார்கள்" என்கிறார் ஸ்ரீதர் பிள்ளை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு