வினேஷ் போகாட் உடல் எடை 100 கிராம் அதிகமாக யார் காரணம்?

காணொளிக் குறிப்பு, வினேஷ் போகாட் உடல் எடை அதிகரிக்க யார் காரணம்? ஒலிம்பிக்கில் என்ன நடந்தது?
வினேஷ் போகாட் உடல் எடை 100 கிராம் அதிகமாக யார் காரணம்?

இந்திய வீராங்கனை வினேஷ் போகாட், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய செய்தி இந்தியர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் வினேஷ் அதிக எடையுடன் உள்ளார் என்று தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, பதக்கத்திற்கான கனவை தகர்த்துள்ளது.

பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் இன்று காலை எடையை அளவிடும் போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்தியக் குழு கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை, எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

எடை ஏன் முக்கியம்?

எந்தவொரு மல்யுத்த நிகழ்விலும், அனைத்து போட்டியிடும் வீரர்களும் எடையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர். மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் இது ஒரு நிறுவப்பட்ட முறையாகும்.

இதன் மூலம் போட்டியிடும் அனைத்து மல்யுத்த வீரர்களுக்கும் ஒரு நியாயமான வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்த அமைப்பின் (UWW- United World Wrestling) விதிகளை பிபிசி சரிபார்த்தது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முன்னாள் மல்யுத்த வீரர் ஒருவர் மற்றும் பயிற்சியாளர் ஒருவரிடம் பிபிசி பேசியது.

எந்தவொரு போட்டியிலும், குறிப்பிட்ட எடைப் பிரிவுக்கான போட்டி இரண்டு நாட்களுக்கு நடைபெறும்.

ஒவ்வொரு போட்டியாளரும் ஒரே ஒரு எடைப் பிரிவில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள். முதல் அதிகாரப்பூர்வ எடை சோதனையின் போது, போட்டியாளரின் எடைக்கு ஏற்றார் போல எந்த பிரிவு என தீர்மானிக்கப்படும்.

ஒற்றை மல்யுத்த சீருடை மட்டுமே எடை சோதனையின் போது அனுமதிக்கப்படும், சீருடை விஷயத்தில் எந்த சமரசமும் செய்யப்படாது.

போட்டி நடைபெறும் முதல் நாளன்று, காலையில் சம்பந்தப்பட்ட எடைப் பிரிவின் மருத்துவச் சோதனை மற்றும் முதல் எடை சோதனை நடைபெறும்.

அப்போது, மல்யுத்த வீரர்கள் முதலில் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வார்கள். அங்கு தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மல்யுத்த வீரருக்கு ஏதேனும் தொற்று நோய் அறிகுறிகள் இருக்கிறதா என சோதனை செய்வார்கள். போட்டியாளர்கள் தங்கள் நகங்களை ஒட்ட வெட்டியிருக்க வேண்டும்.

இந்த முதல் எடை சோதனை மற்றும் மருத்துவக் பரிசோதனைகள் 30 நிமிடங்கள் நீடிக்கும். பிரிவில் பொருந்துபவர்கள் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

இறுதிப் போட்டிகள் மற்றும் இரண்டாம் வாய்ப்பிற்கு தகுதி பெற்றவர்களுக்கு, இரண்டாவது நாள் காலையில் மீண்டும் எடை சோதனை நடைபெறும்.

இந்த எடை சோதனை 15 நிமிடங்கள் நீடிக்கும்.

யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்த அமைப்பின் விதிகள், இரண்டாவது நாள் சோதனையின் போது, எடை தொடர்பான விவகாரத்தில் எந்த சமரசமும் அனுமதிக்கப்படாது என்று கூறுகிறது.

விதிகளின்படி, “எடை சோதனை நடைபெறும் நேரத்தில், மல்யுத்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும், எத்தனை முறை வேண்டுமானாலும் எடையைச் சோதிக்க உரிமை உண்டு.

இந்தச் சோதனைக்கு பொறுப்பான நடுவர்கள், அனைத்து மல்யுத்த வீரர்களும், எந்தப் பிரிவில் போட்டியிடுகிறார்களோ அதற்கான சரியான எடையுடன் அவர்கள் இருப்பதையும், அவர்கள் அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்கிறார்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மல்யுத்த களத்தில் தவறான சீருடையில் நுழைந்தால் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்தும் நடுவர்கள் வீரர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு மல்யுத்த வீரர் போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலோ அல்லது எடை சோதனையில் தோல்வியடைந்தாலோ (1வது அல்லது 2வது எடை சோதனையில்) போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, கடைசி இடத்தைப் பெறுவார்.

ஒலிம்பிக்கில், முதல் 2 இடத்தில் உள்ள மல்யுத்த வீரர்களில் ஒருவர் எடை சோதனையில் தோல்வியுற்றால், பதக்கம் தகுதி நீக்கம் செய்யப்படும். அதாவது பதக்கம் யாருக்கும் கொடுக்கப்படாது.

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

வினேஷ் போகாட் உடல் எடை 100 கிராம் அதிகமாக யார் காரணம்?

வினேஷ் போகாட் தகுதி நீக்கம் பற்றி பி.டி.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் விளக்கியுள்ளார். அவர் பேசுகையில், "காலையில் எனக்கு போன் அழைப்பு வந்தது. வினேஷ் போகாட் 100 கிராம் அதிக எடை இருப்பதாக சொல்லப்பட்டது. அவருக்கு கூடுதல் நேரம் தருமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஒட்டுமொத்த நாடும் தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அதிக எடை காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த நாடும் அவர் பக்கம் நிற்கிறது. இதனை தாங்கும் வலிமையை கடவுள் அவருக்குத் தருவார்." என்று கூறியுள்ளார்.

அத்துடன், "இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் உலக மல்யுத்த கூட்டமைப்பு ஆகியவற்றுடன் பேசியுள்ளேன். விதிகளில் சற்று தளர்வு தருமாறு கேட்டுள்ளேன். வினேஷ் மீது தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் சிறப்பாக விளையாடினார். அவரது பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களே இதற்கு முழு பொறுப்பு. வினேஷ் போகாட்டின் உடல் எடை எவ்வாறு அதிகரித்து என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். வினேஷ் போகாட்டின் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்றும் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)