ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானிகள் பேசிக் கொண்டது என்ன? விசாரணை அறிக்கையில் புதிய தகவல்
ஏன் கட்-ஆப் செய்தீர்கள்?
நான் அப்படிச் செய்யவில்லை?
இது கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் விமானிகள் அறையில் இரு விமானிகள் பேசிக்கொண்ட உரையாடல். இந்த விபத்து தொடர்பான இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகமான ஏ.ஏ.ஐ.பி-யின் (AAIB) முதற்கட்ட விசாரணை அறிக்கை மூலம் இந்த உரையாடல் நடந்தது தெரிய வந்திருக்கிறது.
அந்த அறிக்கையின் படி விமானம் இயங்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே எரிபொருளை கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் 'கட்-ஆஃப்' நிலைக்கு சென்றுள்ளன. இதையடுத்து, ஒரு விமானி சக விமானியிடம் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
விமானத்தை மும்பையைச் சேர்ந்த கிளைவ் குந்தர் மற்றும் சுமித் சபர்வால் ஆகிய இரு விமானிகள் இயக்கினர். எனினும், யார் இந்த கேள்வியை மற்றொருவரிடம் கேட்டது என்பது தெளிவாக தெரியவில்லை.
தற்போது வெளியாகி இருப்பது 15 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட அறிக்கைதான். எனவே ஏன் இது நடந்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. விசாரணை முகமைகளின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஏர் இந்தியா தெரிவித்திருக்கிறது.
நிபுணர்கள் கூற்றுப்படி, கட்-ஆஃப் நிலைக்கு செல்லும்போது கிட்டத்தட்ட என்ஜினுக்கான எரிபொருள் விநியோகம் உடனடியாக துண்டிக்கப்படும்!
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



