You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவின் புதிய விமானந்தாங்கி போர்க்கப்பல் அமெரிக்கா, இந்தியாவுக்கு எந்த அளவு சவால் தரும்?
"சீனாவின் அதிநவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான 'ஃபுஜியான்' அதிகாரப்பூர்வமாக நாட்டிற்கான சேவையில் இணைந்துள்ளது. அதற்கான பிரம்மாண்ட விழாவில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டார்" என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் மூன்றாவது போர்க் கப்பல் ஃபுஜியான், விமானங்களை அதிவேகமாகப் பறக்கச் செய்யும் மின்காந்த கவண்கள் (electromagnetic catapults) கொண்டிருக்கிறது.
இதன்மூலம், கப்பல்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப் பெரிய கடற்படையாக சீனா உருவெடுத்துள்ளது.
சீனா தனது கடற்படையை வேகமாக வலுப்படுத்துவது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் தங்களது ராணுவ திறன்களை அதிகப்படுத்த வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
சீனப் போர்க்கப்பல் எப்படி இருக்கிறது?
சீன அரசு ஊடக தகவலின்படி, ஃபுஜியானின் மின்காந்த கவண்கள் மற்றும் சமதள பறக்கும் தளம் (flat flight deck) மூலம் மூன்று வெவ்வேறு விதமான விமானங்கள் புறப்படலாம்.
சீனாவின் இந்த போர் கப்பலால், ஆயுதங்கள் ஏந்திய, எரிபொருள் நிரப்பப்பட்ட விமானங்களை செலுத்த முடியும். நீண்ட தூரத்திலிருந்தபடி எதிரி இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறனும் கொண்டது. ரஷ்யாவின் உதவியோடு கட்டப்பட்ட முந்தைய போர்க்கப்பல்களான தி லியோனிங் (the Liaoning) மற்றும் ஷான்டாங் (Shandong) ஆகியவற்றை விட இது சக்தி வாய்ந்தது.
சீன கடற்படையின் முன்னேற்றத்தில் ஃபுஜியான் ஒரு மைல்கல் என்று சீன அரசு ஊடகம் கூறுகிறது.
ஃபுஜியான் கப்பல் புதன்கிழமை தெற்கு ஹைனான் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படையில் இணைக்கப்பட்டது. சீன அதிபர் ஜின்பிங் கப்பலின் தளத்தைப் பார்வையிட்டு, கடலில் அதன் செயல்திறன் பற்றி விரிவாக கேட்டறிந்தார்.
மின்காந்த கவண் தொழில்நுட்பத்தை சீனா பெறவேண்டும் என்பது அதிபரின் தனிப்பட்ட முடிவு என்றும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா எந்த அளவுக்கு போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்?
இதற்கு முன் மின்காந்த கவண் கொண்ட போர்க்கப்பல் அமெரிக்காவிடம் மட்டுமே இருந்தது.
அமெரிக்கா - சீனா இடையிலான ஆதிக்கப் போட்டியில் சமீபமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த மோதல் போக்கு ஆசிய பசிஃபிக் பிராந்திய பாதுகாப்பில் ஒரு முக்கிய விஷயமாக உருவெடுத்துள்ளது.
கப்பல்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவை முந்தி இப்போது சீன கடற்படை உலகின் பெரிய கடற்படையாக உருவெடுத்துள்ளது. அதேசமயம் கப்பல்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து பலத்தைத் தீர்மானிப்பது துல்லியமாக இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தற்போது பல விஷயங்களில் சீனாவை விட அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. சீனாவிடம் தற்போது 3 நவீன விமானந்தாங்கி போர்க் கப்பல்கள் இருக்கின்றன. ஆனால், அமெரிக்காவிடம் அதுபோன்ற 11 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் இருக்கின்றன.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், க்ரூஸர்கள் (Cruisers), டெஸ்ட்ராயர்கள் (Destroyers) அல்லது பெரிய போர்க்கப்பல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவின் கடற்படைத் திறன் சீனாவை விட மிக உயர்ந்தது.
இருந்தாலும், சீனா தனது கடற்படையை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 மற்றும் 2040க்கு இடையில் சீன கடற்படை கப்பல்களின் எண்ணிக்கை சுமார் 40 சதவீதம் அதிகரிக்கும் என்று அமெரிக்க கடற்படை மதிப்பிடுகிறது.
இருப்பினும், அமெரிக்கா பல தொழில்நுட்ப துறைகளில் சீனாவை விட மிகவும் முன்னிலையில் உள்ளது. பல விமானந்தாங்கி கப்பல்களை இயக்கும் திறனையும் அமெரிக்கா கொண்டுள்ளது.
சீனாவை விட அமெரிக்கா எவ்வளவு முன்னிலையில் உள்ளது?
அமெரிக்க போர் கப்பல்கள் கடலில் நீண்ட காலம் தங்கிச் செயல்பட அணுசக்தி உதவுகிறது. ஆனால் ஃபுஜியான் பாரம்பரிய எரிபொருளில் இயங்குகிறது. அதனால், அந்தக் கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக கரையோரத்திற்குத் திரும்ப வேண்டும் அல்லது கடலிலேயே டாங்கர்கள் மூலம் அதில் எரிபொருள் நிரப்பப்பட வேண்டும்.
ஃபுஜியான் மின்காந்த கவண் தொழில்நுட்பம் கொண்டிருந்தாலும், அதிலுள்ள போர் விமானம் பறக்கும் செயல்பாடு, 50 ஆண்டுகள் பழமையான அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலின் திறனில் சுமார் 60% மட்டுமே என்று அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் இருவர் கடந்த மாதம் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்ததனர். இதற்கு காரணமாக அவர்கள் அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலின் பறக்கும் தள வடிவமைப்பை குறிப்பிடுகின்றனர்.
லியோனிங் மற்றும் ஷான்டாங் போன்ற முந்தைய கப்பல்களுக்கு மாறாக, ஃபுஜியான், சீனாவின் ஸ்கீ-ஜம்ப் பாணி ரேம்ப் (ski-jump-style ramp) இல்லாத முதல் விமானந்தாங்கி போர்க்கப்பல் ஆகும். சீனாவின் முந்தைய விமானந்தாங்கி போர்க்கப்பல்களில், அதிலிருந்த போர் விமானங்கள் தங்களின் சொந்த சக்தியால் பறக்கும். இந்த புதிய வடிவமைப்பு சீனாவில், நாட்டின் 'விமானந்தாங்கி போர்க்கப்பல் வலிமையின் எழுச்சியின் சின்னம்' என பாராட்டப்படுகிறது.
சுமார் 80,000 டன் எடையுள்ள ஃபுஜியான், அமெரிக்க கடற்படையின் 97,000 டன் எடையுள்ள நிமிட்ஸ் வகை போர்க் கப்பல்களுடன் அளவிலும் திறனிலும் நெருக்கமானதாகக் கருதப்படுகிறது.
சீனா தற்போது டைப் 004 என்று அழைக்கப்படும் மற்றொரு புதிய விமானம் தாங்கி கப்பலை உருவாக்கி வருகிறது. அதிலும் மின்காந்த கவண் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். ஃபுஜியானுக்கு மாறாக அது அணு ஆற்றலில் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படையின் பலம்
இந்திய கடற்படையில் 1.42 லட்சம் வீரர்கள் உள்ளனர் மற்றும் மொத்தம் 293 கப்பல்கள் உள்ளன. இதில் 2 விமானந்தாங்கி கப்பல்கள், 13 டெஸ்ட்ராயர்கள் (destroyers), 14 ஃபிரிகேட்ஸ் (frigates), 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 18 கார்வெட்ஸ் (corvettes) அடங்கும்.
தற்போது இந்திய கடற்படையில் மின்காந்த கவண் அமைப்பு கொண்ட எந்த விமானந்தாங்கி போர்க்கப்பலும் இல்லை. இந்தியாவின் விமானந்தாங்கி போர் கப்பல்களான ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா மற்றும் ஐ.என்.எஸ்.விக்ராந்த் ஆகிய இரண்டும் எஸ்.டி.ஓ.பி.ஏ.ஆர் (Short Take-off But Arrested Recovery) எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன.
சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட ஃபிரிகேட் கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ், 2013-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற பெயரில் இணைந்தது.
அதேசமயம், இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த், 2022ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த போர் கப்பல், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தன்னிறைவு நோக்கில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்பட்டது.
எனினும், இந்தியப் பெருங்கடலில் ராணுவ பலத்தில் சமநிலையைக் பராமரிக்க, மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் தேவையென இந்திய கடற்படை கருதுகிறது.
ஐ.என்.எஸ்.விக்ராந்த் அடுத்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்கள் வரை சேவையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதேசமயம் விக்ரமாதித்யா 2035ஆம் ஆண்டுவாக்கில் ஓய்வு பெறும் வாய்ப்புள்ளது.
சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவிடம் தற்போது இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்கள் மட்டுமே உள்ளன. மின்காந்த கவண் அமைப்புகளுடன் அடுத்த தலைமுறை போர் கப்பல்களை உருவாக்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு