You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய எல்லைக்கு அருகே உள்ள மியான்மர் நகரை கைப்பற்றியதாகக் கூறும் கிளர்ச்சியாளர்கள் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
- எழுதியவர், ஜானதன் ஹெட் மற்றும் ஆலிவர் ஸ்லௌ
- பதவி, பாங்காக் மற்றும் லண்டனில் இருந்து
மேற்கு மியான்மரில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ராணுவத்திடம் இருந்து முக்கிய நகரமான பலேத்வாவை (Paletwa) கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர்.
இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே செல்லும் முக்கியமான சாலை ஒன்றில் இருக்கும் இந்த நகரம் இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான இனக் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
அரக்கான் ராணுவம் என்பது ஏ.ஏ. (AA - Arakan Army) கிளர்ச்சியாளர்களின் மூன்று குழுக்களில் ஒன்றாகும். இந்த குழு சின் மாநிலத்தின்பலேத்வா நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக கூறுகிறது.
தனது டெலிகிராம் குழுவில் இந்த அமைப்பு, முழு பலேத்வா நகரத்திலும் ஒரு ராணுவ கவுன்சில் முகாம் கூட இல்லை எனத்தெரிவித்துள்ளது.
இந்தக் கூற்று தொடர்பாக மியான்மர் ராணுவம் இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.
பிப்ரவரி 2021-இல், மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிருந்து, மியான்மரில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பலேத்வா
பலேத்வா நகரம் இந்தியா மற்றும் வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவும் இந்த புதிய கிளர்ச்சி இயக்கத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்தியாவின் உதவியுடன் இந்த நகரத்தில் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தொலைதூர பகுதிகளுக்கான இணைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
மே 2023-இல், இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மியான்மரின் துணைப் பிரதமர் அட்மிரல் டின் ஆங் சான் ஆகியோர் இணைந்து கலடன் திட்டத்தின் கீழ் ஒரு புதிய சிட்வே துறைமுகத்தைத் திறந்து வைத்தனர்.
கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கிய முதல் இந்திய சரக்குக் கப்பலை சர்பானந்தா சோனோவால் வரவேற்றார்.
கலடன் மல்டிமோடல் திட்டம் (Kaladan Multimodal Project) கொல்கத்தா துறைமுகத்தை மியான்மரின் சிட்வே துறைமுகத்தை கடல் வழியாக இணைக்கிறது.
இதன் நன்மை என்னவென்றால், இது சிட்வே துறைமுகத்தை கலடனுடனும், பலேத்வா நதி வழியாக பலேத்வாவை இந்திய எல்லையுடனும், மியான்மரை லாங்ட்லாய், மிசோராமிலிருந்து சாலை வழியாகவும் இணைக்கிறது.
வலுவடையும் கிளர்ச்சியாளர்களின் பிடி
தற்போது பலேத்வாவைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள குழு, ஏஏ (AA) கிளர்ச்சியாளர்களின் புதிய குழுவாகும். இக்குழுவிடம் ஏராளமான ஆயுதங்களும் உள்ளன. மியான்மரில் பல ஆயுதமேந்திய இனக்குழுக்கள் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றன.
இந்த குழுக்கள் ராக்கைன் மற்றும் சின் போன்ற மாநிலங்களிலும் தங்கள் பிடியை வலுப்படுத்தி வருகின்றன.
2021-இல் ராணுவம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஏஏ (AA) போராளிகள் ராக்கைனில் தங்கள் நிலையை பலப்படுத்தியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குழுக்கள் மாநிலத்தின் 60% தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறின.
2021-இல் ஆட்சிக்கவிழ்ப்பின் போது போர்நிறுத்தம் ஏற்பட்டது என்பதுடன் ராணுவம் இந்த கிளர்ச்சியாளர்களுடன் மோதுவதைத் தவிர்த்து வந்தது. இதனால் சதிப்புரட்சியை எதிர்ப்பவர்கள் மீது தனது கவனத்தை செலுத்த முடியும்.
இருப்பினும், கடந்த ஆண்டு அக்டோபரில், சகோதரத்துவக் கூட்டணியின் கீழ் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைவதாக ஏ.ஏ. அறிவித்தது.
இதற்குப் பிறகு, இந்த ஏ.ஏ.க்கள் ராணுவத்தின் மீது பல தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தினர்.
கடந்த 11 வாரங்களில், கிளர்ச்சியாளர்களின் இந்தக் கூட்டணிக்கு எதிராக சீன எல்லைக்கு அருகே மியான்மர் ராணுவம் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது.
2020-இல் நடந்த 42 நாட்கள் போர்
கடந்த சனிக்கிழமை, பலேத்வா நகரின் கடைசி ராணுவச் சாவடியான மிவாவையும் ஏ.ஏ. தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
2020-ஆம் ஆண்டிலும், ஏ.ஏ. அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் 42 நாட்கள் சண்டையிட்ட பிறகு, இந்த இடத்தை அடைய முடியவில்லை.
இந்த நகரத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றதன் மூலம், கிளர்ச்சியாளர்கள் இப்போது கலடனையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக, இந்த கிளர்ச்சியாளர்கள் இப்போது இந்திய எல்லை வரை சாலை மற்றும் நீர் போக்குவரத்தை கட்டுப்படுத்தியுள்ளனர் என்று கூறமுடியும்.
இந்த கிளர்ச்சியாளர்கள் இப்போது தங்களுக்கென சொந்த தளத்தைக் கொண்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் ராக்கைன் மாநிலத்தில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடலாம்.
ரக்கைன் மாநிலத்தில் இனி எந்த நகரங்களையும் இழப்பது மியான்மர் ராணுவத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
இந்த கிளர்ச்சியாளர்களை சமாளிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கியோக்த்வாவின் கட்டுப்பாட்டை ஏஏ பெறுவதைத் தடுக்க ராணுவம் முயற்சிக்கும். ஏனெனில் இது ராக்கைனின் தலைநகரான சிட்வே மியான்மர் முழுவதையும் இணைக்கும் பிரதான சாலையில் உள்ளது.
இருப்பினும், ஏ.ஏ.வின் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஏஏ தனது முன்னணியைத் தக்க வைத்துக் கொள்ளவும் மேலும் இழப்புகளைக் குறைக்கவும் முயற்சிக்கும் என்று நம்பப்படுகிறது.
கூட்டாட்சிக் கட்டமைப்பிற்குள் ஒருவித சுயாட்சி அல்லது சுதந்திரத்தை அடைவதே கிளர்ச்சியாளர்களின் குறிப்பிடப்படாத குறிக்கோளாக இருக்கும். ஆனால், இதை ராணுவ ஆட்சியை விட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் நடத்த வேண்டும் என கிளர்ச்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கிளர்ச்சியாளர்கள் பலேத்வாவைக் கைப்பற்றிய பிறகு, மியான்மர் ராணுவம் தனது மன உறுதியை மீட்டெடுக்கவும், எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்கு வீரர்களைஊக்குவிக்கவும் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு என்ன கவலை?
கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட நகரம் இந்தியாவிற்கு அருகில் உள்ளது.
இந்தியாவின் மிசோரம் மாகாணத்திற்கும் மியான்மரின் சின் மாகாணத்திற்கும் இடையே 510 கி.மீ. நீள எல்லை உள்ளது.
இருப்பினும், இருபுறமும் உள்ளவர்கள் எளிதாக அங்கும் இங்கும் செல்ல முடியும். இரு திசைகளிலும் 25 கி.மீ. வரை பயணிக்க எந்தத் தடையும் இல்லை.
கடந்த ஆண்டு நவம்பரில், இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே மியான்மர் ராணுவம் மற்றும் ராணுவ ஆட்சியை எதிர்க்கும் படைகளுக்கு இடையே நடந்த தீவிர மோதல்களுக்கு மத்தியில் மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 5,000 பேர் மிசோரம் மாநிலத்தை அடைந்தனர்.
45 மியான்மர் ராணுவ வீரர்களும் மிசோரம் போலீசாரிடம் சரணடைந்தனர்.
மியான்மரில் ராணுவப் புரட்சிக்குப் பிறகு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த வன்முறையில் சிக்கிய ஏராளமானோர் இந்தியா வந்தடைந்தனர்.
மார்ச் 2022 வரையிலான தரவுகளின்படி, மியான்மரில் இருந்து சுமார் 31,500 அகதிகள் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் மற்றும் பிற மாவட்டங்களுக்கு வந்து வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சின் மாகாணத்தில் இருந்து வந்தவர்கள்.
இப்போது கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பலேத்வா நகரம் இந்த சின் மாகாணத்தைச் சேர்ந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)