You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரவீந்திர ஜடேஜா - சுழற்பந்து ஜாம்பவான்களால் முடியாததை தனி ஆளாக சாதித்துக் காட்டிய 'மந்திரவாதி'
- எழுதியவர், விமல் குமார்
- பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
"என்னைப் பற்றி பலவிதமான செய்திகள் வருகின்றன. இடையில் நான் இறந்துவிட்டதாக செய்திகள் வந்தன. செய்திகளைப் பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை. நெட்டில் பயிற்சி செய்கிறேன். நான் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். அது எனக்கு களத்தில் உதவுகிறது."
கடந்த ஆண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியின்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரவீந்திர ஜடேஜா இப்படிப் பேசினார். சமீப காலமாக விளையாட்டைவிட அவரது உடல் தகுதி பற்றி அதிகம் செய்திகள் வருகின்றனவே என்று ஒரு செய்தியாளர் அவரிடம் கேட்டபோது ஜடேஜா இவ்வாறு பதில் சொன்னார்.
ஜடேஜா இவ்வாறு கூறியதும் அனைவரும் சிரித்தனர். ஜடேஜா மிகவும் அப்பாவித்தனமாகவும் நகைச்சுவையாகவும் ஊடகங்களை கேலி செய்தார்.
ஜடேஜா ஊடகங்களை வெறுக்கவில்லை. ஆனால் எவ்வளவு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், தனது திறமையில் பாதியளவே உள்ள வீரர்களுக்குக் கிடைத்த அந்தஸ்து தனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
அந்தச் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு ஜடேஜாவுக்கு ஃபிட்னஸ் பிரச்னை ஏற்பட்டு, ஆசியக் கோப்பை போட்டியை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியா திரும்ப நேரிட்டது. டி20 உலகக் கோப்பை போட்டியிலும்கூட அவரால் விளையாட முடியாமல் போனது.
அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவடையும் தறுவாயில் உள்ளதா என்ற யூகங்கள் மீண்டும் உலா வரத் தொடங்கின.
திறமை மீது சந்தேகம்
அவரது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே அவரது திறமை குறித்து கிரிக்கெட் ஊடகங்களில் சந்தேகம் நிலவி வந்தது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒன்றன் பின் ஒன்றாக அவர் டிரிபிள் செஞ்சுரி அடித்தபோது, ராஜ்கோட்டில் ஜடேஜாவே டிரிபிள் சதம் அடிக்கும்போது, ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி அவரைக் கேலி செய்தனர்.
ஆனால் பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தத்தில் ஜடேஜாவின் பெயரைப் பார்த்து இப்போது யாரும் அவரைக் கேலி செய்ய முடியாது.
பத்தாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட ஜடேஜா, இப்போது ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா போன்ற சாம்பியன் வீரர்களைக் கொண்ட 'உயர் குழுவில்' இடம்பெறும் நிலையை அடைந்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையின்போது ஜடேஜா, தனது சக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் தொடர் நாயகன் விருதைப் பகிர்ந்து கொண்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரின் சாதனையும் ஜடேஜாவின் அளவுக்கு வலுவாக இல்லை. அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், முத்தையா முரளிதரன் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர் என்பதில் இருந்து அதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
மேலும் ஒரு விஷயம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த இடது கை சுழற்பந்து வீச்சாளர்களைப் பார்த்தால், யாருக்குமே ஜடேஜாவுக்கு நிகரான சராசரி இல்லை.
பிஷன் சிங் பேடி மற்றும் டெரெக் அண்டர்வுட் முதல் ரங்கனா ஹெராத், ஷாகிப் அல் ஹசன் மற்றும் டேனியல் வெட்டோரி போன்ற நவீன கால ஜாம்பவான்களும் இதில் அடங்கும்.
ஆனால் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று குறிப்பிடும்போது ஜடேஜாவின் பெயர் சொல்லப்படாமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதற்கு என்ன காரணம்?
ஜடேஜாவின் பந்துவீச்சைப் பற்றிப் பேசினால், அவர் சிக்கனமானவர், திறமையானவர். ஆனால் அவர் ஒரு மந்திரவாதியைப் போல் இல்லை.
அவரது பேட்டிங்குக்கும் இதுவே பொருந்தும். அவர் கீழ் வரிசையில் வந்து அதிரடியான முறையில் பேட் செய்கிறார். அணியின் பிரச்னையைத் தீர்க்கும் பாத்திரத்தை வகிக்கிறார். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக இன்னும் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
அவரது பீல்டிங்கை பற்றிய பொதுவான கருத்து என்னெவென்றால் அவர் சிறந்தவர். ஆனால் யுவராஜ் சிங்கின் கவர்ச்சி அவரிடம் இல்லை.
முரண்பாடு
மேலும் இந்த விஷயங்கள் பல வழிகளில் அவற்றுகுள்ளேயே முரண்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக ராக்ஸ்டார் ஷேன் வார்ன், 2008 ஐபிஎல் போட்டியின்போது அவரை 'ராக்ஸ்டார்' என்று அழைக்கத் தொடங்கினார். ஜடேஜா தனது விளையாட்டின் காரணமாக உலக கிரிக்கெட்டில் ராக்ஸ்டாராக உள்ளார். ஆனால் விமர்சகர்கள் அவரை A+ கிளாஸ் வீரராகக் கருதுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
பிசிசிஐயின் ஏ+ ஒப்பந்தத்தின் மூலம் ஜடேஜா ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் பெறுவார். ஆனால் கடந்த காலங்களில் ஐபிஎல் போட்டிகளில் பல அணிகள் இதைவிடப் பல மடங்கு அதிக தொகையை அவருக்காகக் கொடுக்கத் தயாராக இருந்தன.
டி20 வடிவத்தில் ஜடேஜாவின் வசீகரம் வித்தியாசமானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்புச் சீட்டாக அவர் அடிக்கடி தன்னை நிரூபித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்த சீசனின் தொடக்கத்தில் ஜடேஜாவுக்கு சென்னை அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அணியின் ஏமாற்றமளிக்கும் ஆட்டத்திற்குப் பிறகு அவர் இந்தப் பொறுப்பைக் கைவிட வேண்டியிருந்தது.
தோனி மீண்டும் கேப்டன் ஆனார். தோனி மற்றும் உரிமையாளரின் அணுகுமுறை சரியாக இல்லை என்று ஜடேஜா உணர்ந்தார். அவர் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
இதுவொரு சிறிய விஷயமல்ல. தோனி மற்றும் சென்னை போன்ற அணிக்கு எதிராக எத்தனை வீரர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த முடியும்?
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜடேஜாவாலும் இதைச் செய்திருக்க முடியாது. ஆனால் தனது திறமையை உலகம் அங்கீகரித்துவிட்டது என்பது இன்றைய ஜடேஜாவுக்கு தெரியும்.
பிசிசிஐயின் ஏ+ ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முன்பே அவர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுவிட்டார். அதனால்தான், புதிய ஐபிஎல் தொடங்குவதற்கு முன் தோனியும் சென்னை அணியும் அவரைத் தனியாகச் சந்தித்து ஆலோசனைகளை நடத்தி, பழைய சர்ச்சைகளை மறந்து முன்னேற முடிவு செய்தனர்.
ஜடேஜாவின் சிறப்பான கேரியரை போல இதுவும் ஒரு சிறிய, சாதாரண விஷயம் இல்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்