டைனோசர்களின் குரல் எப்படி இருக்கும்? அவை கர்ஜிக்குமா?

டைனோசர்களின் குரல் எப்படி இருக்கும் தெரியுமா?

பட மூலாதாரம், Alamy

    • எழுதியவர், ரிச்சர்ட் கிரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

டைனோசர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவற்றின் பிரமாண்டமான உருவமும் கர்ஜனையான குரலும்தான். திரைகளில் டைனோசர்கள் தங்களது வாயை பிளந்து கர்ஜிக்கும் ஓசையை நாம் மிரட்சியோடு ரசித்திருப்போம்.

எனினும், டைனோசர்கள் இந்த புவியே அதிரும்படி கர்ஜிக்கும் குரலை கொண்டிருக்கும் என்று நாம் நினைத்திருந்தால் அது தவறாக இருக்கலாம் என்று அண்மைகால ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அடத்தியான பசுமையான காட்டுக்குள் எங்கிருந்தோ வெளிப்படும் ஆழமான, உள்ளுறுப்பில் இருந்து வரும் வலுவான ஒலியாக அதனை கேட்பதைவிடவும், அதனை நீங்கள் உணரமுடியும்.

கடற்பறவையின் சத்தம் போல, அது உங்கள் விலா எலும்புகளில் துடித்து, உங்கள் கழுத்தில் உள்ள முடிகளை முறுக்கிவிடும். கிரெட்டேசியஸ் காலத்தின் அடர்ந்த காடுகளில், அது பயங்கரமாக இருந்திருக்கும்.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போவதற்கு முன்பு இந்த புவியை ஆண்ட டைனோசர்களின் குரல் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு நமக்கு சில ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

பழங்கால ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க பாறை எச்சங்கள் இந்த உயிரினங்களின் உடல் வலிமைக்கான சான்றுகளை வழங்குகின்றன.

புதைபடிவங்களில் ஒலிக்கான ஆதாரங்கள் இருப்பதில்லை என்பதால், அவை எவ்வாறு தங்களுக்குள் உரையாடின மற்றும் தொடர்பு கொண்டன என்பது பற்றிய தகவல்கள் அதிகம் இல்லை. 

இப்படி இருக்கும் நிலையில் விலங்குகளின் நடத்தையை நாம் எப்படி அறிந்து கொள்வது? எனினும், டைனோசர்கள் நிச்சயமாக அமைதியானவையாக இருந்திருக்காது.

புதிய, அரிய புதைபடிவத்தின் உதவியுடன், நவீன ஆராய்ச்சி தொழில்நுட்பங்களுடன், டைனோசர்கள் எத்தகைய குரல் ஒலியைக் கொண்டிருந்திருக்கும் என்பதை அறிய விஞ்ஞானிகள் சில தடயங்களை ஒன்றாக இணைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த புதிருக்கு ஒரு விடை என்பது இல்லை. இந்த புவியில் டைனோசர்கள் தோராயமாக 179 மில்லியன் ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த காலகட்டத்தில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மகத்தான ஒன்றாக அவை உருவாகின.

அவற்றில் அல்பினிகஸ் போன்ற சிறியவை, ஒரு கிலோகிராமுக்கு (2.2 பவுண்டுகள்) கீழ் எடையும் 2 அடி (60 செ.மீ) நீளத்துக்கும் குறைவாகவும் இருக்கும். மற்றவை நிலத்தில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப் பெரிய விலங்குகளாக டைட்டானோசர் படகோடிடன் மேயோரம் போன்றவையாக இருந்திருக்கலாம்..

இவை 72 டன்கள் வரை எடையுள்ளதாக இருக்கலாம். அவை இரண்டு கால்களில் ஓடுவனவாக, நான்கு கால்களால் ஓடுவனாவாக இருந்தன. இந்த மாறுபட்ட உடல் வடிவங்களுடன், அவை சமமான பலவிதமான சத்தங்களை உருவாக்கியிருக்கும்.

டைனோசர்களின் குரல் எப்படி இருக்கும் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புகைப்பட உதவி- டாம் வில்லியம்சன்

சில டைனோசர்கள் மிகவும் நீளமான கழுத்துகளைக் கொண்டிருந்தன. மிகப்பெரிய நான்குகால்களைக் கொண்ட தாவரபட்சினி டைனோசர்களாக 16மீ (52 அடி) நீளம் வரை இருந்தன. இது அவை உருவாக்கிய ஒலிகளை மாற்றியமைத்திருக்கும் (டிராம்போன் நீட்டிக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்).

மற்றவை வினோதமான மண்டை ஓடு அமைப்புகளைக் கொண்டிருந்தன, அவை காற்றுக் கருவிகளைப் போலவே, விலங்குகள் உருவாக்கும் குரலின் தொனியைப் பெருக்கி மாற்றியமைத்திருக்கலாம்.

'பரசௌரோலோபஸ் டூபிசென்' என்ற தாவர வகை பட்சியினியான ஹட்ரோசர், அத்தகைய ஓர் உயிரினமாக இருந்திருக்கலாம். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பயமுறுத்தும் கர்ஜனை போன்ற குரலுக்கு உரியதாக அது இருந்திருக்கும்.

பி. ட்யூபிசென் கிட்டத்தட்ட 1மீ(3.2 அடி) நீளமுள்ள ஒரு பெரிய முகடை தலையின் பின்பகுதியில் கொண்டிருந்திருந்துள்ளது. . இதன் உள்ளே மூன்று ஜோடி வெற்று குழாய்கள் மூக்கில் இருந்து உச்சி வரை இயங்கும், இரண்டு ஜோடிகள் மண்டை ஓட்டின் அடிப்பகுதி மற்றும் விலங்கின் காற்றுப்பாதைகளை நோக்கி திரும்பிச் செல்ல U-போன்ற வளைவை கொண்டிருந்தன. உச்சியின் முகடு மேல் அருகில் ஒரு பெரிய அறை அமைக்க மற்ற ஜோடி விரிவடைந்தது. மொத்தத்தில் அவை அடிப்படையில் 2.9 மீ (9.5 அடி) நீளமான எதிரொலிக்கும் அறையை உருவாக்கியது.

சி.டி. ஸ்கேன் ஆராய்ச்சி கூறுவது என்ன?

1995 ஆம் ஆண்டில், நியூ மெக்ஸிகோ இயற்கை வரலாறு மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தின் பழங்கால ஆராய்ச்சியாளர்கள், இந்த அசாதாரண தோற்றம் கொண்ட பரசௌரோலோபஸின் கிட்டத்தட்ட முழுமையான மண்டை ஓட்டைக் கண்டுபிடித்தனர்.

கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (CT) ஸ்கேனரைப் பயன்படுத்தி, அவர்களால் உச்சி முகடுகளின் 350 படங்களை எடுக்க முடிந்தது, இதையடுத்து முன் எப்போதும் இல்லாத வகையில் விரிவாக உள்ளே பார்த்து ஆராய முடிந்தது.

பின்னர், கணினி விஞ்ஞானிகளுடன் இணைந்து, அவர்கள் டிஜிட்டல் முறையில் உறுப்பை புனரமைத்து, அதன் வழியே காற்று வீசினால், அது எவ்வாறு செயல்படும் என்பதை உருவகப்படுத்தினர்.

அகழாய்வில் ஈடுபட்ட ஒருவரான டாம் வில்லியம்சன், "நான் ஒலியை வேறொரு உலகமாக விவரிக்கிறேன்," என்று கூறுகிறார், இப்போது அவர் அருங்காட்சியகத்தில் பழங்காலவியல் காப்பாளராக உள்ளார். "என் முதுகெலும்பின் வழியே குளிர்ச்சி ஊடுருவியது போல, எனக்கு நினைவிருக்கிறது," என்றும் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது உள்ள தென் காசோவரி என்ற விலங்கிடம் இதற்கு நெருக்கமான ஒப்புமைளை காணுவதாக அவர் கூறுகிறார். பறக்க முடியாத இந்தப் பறவை, ஆழமான காற்றுப்பையில் இருந்து உறுமல்களை தொடர்ச்சியாக வெளியிடுகிறது. அது வாழும் அடர்ந்த காட்டில் எதிரொலிக்கும்.

"மூடுபனி மறைத்த கிரெட்டேசியஸ் மழைக்காடுகளை கற்பனை செய்வது எனக்கு எளிதானது. அந்த வினோதமான ஒலிகள் பின்னணியில் இடியுடன் கூடியவை," என்கிறார் வில்லியம்சன். "ஒலிகள் குறைந்த அதிர்வெண்களைக் கொண்டவை - அடர்ந்த நிலத்தடியில் ஊடுருவுவதற்கு போதுமானவை."

பாலூட்டிகள் மற்றும் நவீன ஊர்வனவற்றில் காணப்படும் குரல்வளை போன்ற குரல் உறுப்புகளோடும் அவை இல்லாமலும் பி. டியூபிசென் உருவாக்கியிருக்கக்கூடிய ஒலியை வில்லியம்சனும் அவரது சகாக்களும் உருவகப்படுத்தினர்.

குரல்வளை அல்லது அதற்கு சமமான குரல் பெட்டி இல்லாமல் கூட அவை ஓசை எழுப்பி இருந்திருக்கலாம் என அவர்கள் கண்டுபிடித்தனர். ஒரு குடத்தின் திறப்புக்கு மேல் ஊதுவதைப் போல, விலங்கு தனது முகடு வழியாக காற்றை ஊதும்போது அதற்குள் காற்று எதிரொலித்திருக்கலாம்.

"எடுத்துக்காட்டாக, இந்த டைனோசர்களிடம் பாலூட்டிகள் மற்றும் பறவைகளுடம் உள்ளது போன்ற ஒலி உற்பத்தி செய்யும் உறுப்புகள் இருந்திருக்கலாம். ஆய்வகத்தில் மென்மையான திசுக்கள் பாதுகாக்கப்படவில்லை, எனவே, எங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம்" என்று வில்லியம்சன் கூறுகிறார். "அது ஒரு நீண்ட கட்டமைப்பாக இருப்பதால், அந்த உச்சி முகடு எதிரொலிக்க ஒலி உருவாக்கும் உறுப்பு அவசியமில்லை என்பது தெளிவாகியது." 

டைனோசர்களின் குரல் எப்படி இருக்கும் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புகைப்பட உதவி- டாம் வில்லியம்சன்

மற்ற ஹாட்ரோசர்களும் இதைப் போலவே இருந்தன. அவ்வளவு வியத்தகுந்ததாக இல்லை என்றால் அவைகளின் தலையில் உள்ள இசை முகடுகள் காட்சிக் காட்சியாகவும் குரல் எழுப்புதலுக்கு உதவியாகவும் இருமடங்காக இருந்திருக்கும் எனக் கருதப்படுகின்றன.

பெரும்பாலானவை குறைந்த அதிர்வெண் ஒலிகளை உருவாக்கியிருக்கும், மேலும் இந்த விலங்குகளின் புதைபடிவ எச்சங்கள் ஹட்ரோசர் மண்டை ஓடுகளை அடிப்படையாகக் கொண்ட இசைக்கருவிகளை உருவாக்க சிலவற்றுக்கு உத்வேகம் அளித்துள்ளன.

அனைத்து டைனோசர்களும் அவற்றின் தலையில் ஓர் ஒலியை எழுப்பும் தன்மை கொண்டதாக ஆசீர்வதிக்கப்படவில்லை. மேலும் டைனோசரின் புதைபடிவங்களில் குரல் பெட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை, இதனால் விலங்குகள் ஊமையாக இருந்திருக்கலாம் என்று சிலர் ஊகிக்க வழிவகுத்தது.

"எங்களிடம் இருப்பது புதைபடிவ தடயங்கள் ஆகும், அவை டைனோசர்களின் காற்றுப்பாதைகளின் விட்டம் மற்றும் அதன் நீளம் போன்ற பல்வேறு அளவுருக்களைப் பற்றி நமக்குச் சொல்ல முடியும்" என்கிறார் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பழங்கால ஆராய்ச்சியாளர் ஜூலியா கிளார்க். "அந்த டைனோசர்களுடன் அவை எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் பார்க்க இன்று வாழும் - பறவைகளுடன் அந்த வடிவவியலை நாம் ஒப்பிடலாம்."

புதிருக்கு கிடைத்த மற்றொரு ஆதாரம்

கிளார்க்கிற்கு புதிரின் மேலும் ஒரு பகுதியை வழங்கும் மற்றொரு ஆதாரம் கிடைத்தது. 2000 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், அவரும் அவருடைய சக ஊழியர்களும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அண்டார்டிக் தீபகற்பத்தின் முனையில் ஒரு சிறிய நிலப்பகுதியான வேகா தீவில் அர்ஜென்டினா ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் ஆரம்ப வகை பறவையின் பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூட்டைப் பற்றிய விரிவான பரிசோதனையை நடத்தினர்.

புதைபடிவமானது ஒரு பாறைத் துண்டில் ஓரளவு பதிந்துள்ளது. ஆனால் மேம்பட்ட சிடி ஸ்கேனிங் நுட்பங்களைப் பயன்படுத்தி, கிளார்க்கும் அவரது குழுவினரும் பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட புதைபடிவத்தின் சிறிய துண்டுப்பகுதிகளைக் கண்டறிய முடிந்தது. பின்னர் அவர்கள் அந்த ஸ்கேன்களில் இருந்து படிமத்தை டிஜிட்டல் முறையில் புனரமைத்தனர்.

அங்கே, புதைபடிவ எலும்புத் துண்டுகளுக்கு மத்தியில், வியக்கத்தக்க ஒன்றின் எச்சங்களாக ஒரு பறவைகளின் கீழ் குரல்வளை அல்லது குரல் உறுப்பு கனிமமயமாக்கப்பட்ட வளையங்கள்,இருந்தன. பறவைகளில் காணப்படும் ஒலி உருவாக்கும் உறுப்பு, டைனோசர்களின் காலத்திற்கு முந்தையது. 

அது வேகவிஸ் ஐயாய் எனப்படும் வாத்து போன்ற பழமையான பறவை உயிரினமாகும். 66-68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தின் முடிவில் பறவை அல்லாத டைனோசர்களுடன் இணைந்து வாழ்ந்திருக்கும். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் நவீன அண்டார்டிகாவின் இந்த பகுதி மிதமான காடுகளால் மூடப்பட்டிருந்திருக்கும் மற்றும் ஆழமற்ற கடல்களால் சூழப்பட்டிருந்திருக்கும். ஐயாய்யின் ஹாரன் ஒலிகள் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். 

டைனோசர்களின் குரல் எப்படி இருக்கும் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புகைப்பட உதவி- ரோஜர் ஹாரிஸ்/SPL/Getty Images

ஆனால் கிளார்க்கைப் பொறுத்தவரை, ஒலியை உருவாக்கும் உறுப்புகளின் படிமமாக்க கண்டுபிடிப்பானது இருந்திருக்க முடியும், அதன் இருப்பின் மூலம் வேறு ஒன்றை வெளிப்படுத்துகிறது - பெரும்பாலான டைனோசர் புதைபடிவங்களிலிருந்து அவை இல்லாததை சொல்லுகின்றன.

இன்னும் துல்லியமாக, பறவைகள், அல்லது பறவை டைனோசர்கள் ஜுராசிக் காலத்தில் சுமார் 165-150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தெரோபாட் டைனோசர்களில் இருந்து உருவானது. 66-68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பறவையின் சிரின்க்ஸ் ஒரு புதைபடிவமாக பாதுகாக்கப்பட்டால், அழிந்துபோன டைரனோசொரஸ் ரெக்ஸ் போன்ற பறவை அல்லாத அவைகளின் உறவினர்களின் எச்சங்களில் ஏன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

டைனோசர்கள் கர்ஜிக்கவில்லை

இந்த ஒரு கேள்விதான் நவீன பறவைகள் எவ்வாறு ஒலியை உருவாக்குகின்றன என்பதை ஆழமாக ஆராய கிளார்க்கை வழிநடத்தியது . "சுமார் 10,000 பறவை இனங்கள் உள்ளன (சில மதிப்பீடுகளின் எண்ணிக்கை 18,000 வரை அதிகமாக உள்ளது).

ஆனால் அவை உண்மையில் என்ன ஒலிகளை உருவாக்குகின்றன, அதை எவ்வாறு செய்கின்றன என்பதில் வியக்கத்தக்க வகையில் சிறிய அளவிலேயே அறிவியல் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன," என்று அவர் கூறுகிறார்.

உலகெங்கிலும் உள்ள ஐந்து வயது சிறுவர்கள் மற்றும் திரைப்பட பார்வையாளர்களின் நம்பிக்கைகளை உலுக்கும் ஒரு வெளிப்பாட்டிற்கு அவரது பணி இட்டுச் சென்றது. டைனோசர்கள் நிச்சயமாக கர்ஜிக்கவில்லை. அவை அநேகமாக அதற்கு பதிலாக கூவல் ஒலியை வெளிப்படுத்தியிருக்கலாம்.

இன்னும் துல்லியமாக அவை புறாக்களின் கூவல் அல்லது தீக்கோழியின் வலுவான சத்தம் போன்ற வழிகளில் ஒலிகளை உருவாக்கியிருக்கலாம். பல நவீன பறவைகள் வாய் மூடிய குரலை கொண்டுள்ளன என அறியப்படுகிறது. இதன் மூலம் சிரின்க்ஸ் வழியாக காற்றைக் கடப்பதை விட தொண்டையை உயர்த்துவதன் மூலம் ஒலி உருவாக்கப்படுகிறது.

சுமார் 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பொதுவான மூதாதையரிடமிருந்து பிரிந்த டைனோசர்களின் மற்றொரு தொலைதூர உறவான முதலைகள் மூடிய வாய் குரல்களைக் கொண்டிருக்கின்றன. சுற்றியுள்ள தண்ணீர் அவைகளின் உடலைச் சுற்றி நடனம் செய்யக்கூடிய தொடர்ச்சியான ஆழமான, எதிரொலிக்கும் ஒலியை உருவாக்கும்.

மற்ற ஊர்வன மற்றும் பாலூட்டிகளைப் போல, முதலைகள், ஒரு சிரின்க்ஸுக்கு மாறாக ஒலியை உருவாக்கும் குரல்வளையை கொண்டிருக்கிறது. ஆனால், அவை இனச்சேர்க்கைக்கான சுருங்கி, விரியும் காற்றுப்பைகளை உற்பத்தி செய்யும் போது அவை இதை கடந்து செல்கின்றன.

"ஜுராசிக் பார்க் படங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டன" என்று கிளார்க் சிரிக்கிறார்." டைனோசர்கள் பற்றிய ஆரம்ப கால அவதனிப்புகள் என்பது தற்போது உள்ள அச்சமூட்டும் மிகப்பெரிய பாலூட்டியான சிங்கம் போன்றவற்றின் தாக்கங்களை கொண்டிருந்தது. ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் பெரிய டைனோசர்களுக்கு சில முதலை குரல்களைப் பயன்படுத்தினார்கள், ஆனால் திரையில் டைனோசர்கள் சிங்கம் கர்ஜிப்பதைப் போல வாயைத் திறந்திருக்கும்.

குறிப்பாக தங்கள் இரையைத் தாக்குவதற்கு அல்லது சாப்பிடுவதற்கு முன்பு அவை அவ்வாறு குரல் எழுப்பியிருக்காது. வேட்டையாடும் விலங்குகள் அப்படி குரல் எழுப்புவதில்லை. உணவு கிடைத்து விட்டது என அருகில் உள்ள பிற விலங்குகளுக்குச் அறிவிக்கும் வகையில் குரல் எழுப்பும். அது அவைகளுக்கான இரை அங்கே இருப்பதை எச்சரிக்கும் ஒலியை எழுப்பும்."

மாறாக ஒருவித இனச்சேர்க்கை அறிகுறியை வெளிப்படுத்தும் ஒரு பகுதியாக, பல பறவைகள் அல்லாத டைனோசர்கள் தங்கள் தொண்டையின் மென்மையான திசுக்களை ஊதுவதன் மூலம் வாயை மூடிக்கொண்டு ஒலிகளை உருவாக்கி இருக்கலாம் என கிளார்க் நம்புகிறார். ஆனால் அவைகள் நெருக்கடியான தருணங்கள் போன்ற பிற சூழ்நிலைகளிலும் வாயை திறந்து ஒலியை எழுப்புவதை செய்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார். ஜுராசிக் காலத்துக்கு பிந்தைய அல்லது அதற்கு முந்தைய கிரெட்டேசியஸின் நிலப்பரப்பின் பல்வேறு வகையான ஒலிகள் நிறைய இருந்திருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

புதைபடிவ பதிவில் சிறந்த சான்றாக அவற்றின் காதுகள் குறித்த ஆராய்ச்சி டைனோசர் உடற்கூறியல் பற்றிய ஆராய்ச்சிக்கு ஆதரவான ஒரு பார்வையாக கருதப்படுகிறது. டைனோசர் மண்டை ஓடுகள் பற்றிய ஆய்வுகள் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் உள் காதுகள் எப்படி இருந்தன என்பதை மறுகட்டமைக்க அனுமதித்துள்ளன. ஒரு சில புதைபடிவங்கள் டைனோசர் காதுகள் செயல்பட உதவிய சில மென்மையான எலும்புகளையும் வெளிப்படுத்தியுள்ளன. 

டைனோசர்களின் குரல் எப்படி இருக்கும் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புகைப்பட உதவி- டாம் வில்லியம்சன்

"டைனோசர்களின் நடுக் காதில் ஸ்டேப்ஸ் என்ற ஒற்றை எலும்பு மட்டுமே இருந்தது. காற்று, ஒலி அலைகளில் உள்ள அதிர்வுகளை உள் காதுக்கு கடத்தும் ஒரு முக்கிய அமைப்பு இதுவாகும். பின்னர் மூளையால் அது செயலாக்கப்படும்," என மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் இயற்கை வரலாற்றுப் பேராசிரியர் பில் மேனிங் கூறுகிறார்.

"நமது பாலூட்டிகள் மல்லியஸ் எனப்படும் எலும்பு மற்றும் இன்கஸ் எனப்படும் பட்டை சிற்றெலும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன." கேட்கும் கருவியின் எலும்பில் இந்த கூடுதல் துண்டுகள் இல்லாமல், பாலூட்டிகளுடன் ஒப்பிடும்போது, டைனோசர்களால் மிகக் குறைந்த அளவிலான அதிர்வுகளை மட்டுமே கேட்க முடிந்தது என மேனிங் கூறுகிறார். அவைகள் அநேகமாக குறைந்த அதிர்வெண் ஒலிகளை கேட்பதற்கு இணக்கமாக இருந்தன.

"டைனோசர்களில் உள்ள ஸ்டேப்கள் பெரும்பாலும் மிகப் பெரியதாக இருந்தன, கிட்டத்தட்ட டி. ரெக்ஸில் உள்ள தீப்பெட்டியின் அளவு, அதாவது குறைந்த அதிர்வெண்களுக்கு ஏற்றவாறு டியூன் செய்யப்பட்டது" என்கிறார் மேனிங். "சிறிய ஸ்டேப்களைக் கொண்ட சிறிய வகை டைனோசர்கள் அதிக அதிர்வெண் ஒலிகளுடன் தொடர்புகொண்டவையாகும்."

டைனோசர் புதைபடிவங்களின் உள் காதுகளில் உள்ள வால் நரம்பு குழாய்களின் அளவு அவற்றின் கேட்கும் திறன் பற்றிய பிற நுண்ணறிவுகளை வழங்குகிறது, மேலும் அவை அதிக அதிர்வெண்கள் பெறுவதை ஊக்குவிக்கின்றன.

"வால்நரம்பு எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, பொதுவாக அது அதிக அளவிலான ஒலிகளைக் கேட்கும் என்பது உயிருள்ள விலங்குகளிடமிருந்து நமக்குத் தெரியும்," என்கிறார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பழங்காலவியல் மற்றும் பரிணாமவியல் பேராசிரியர் ஸ்டீவ் புருசாட்.

"பாலூட்டி வால்நரம்புகள் பாம்பைப் போல் சுருண்டுள்ளது. மண்டை ஓட்டின் ஒரு சிறிய பகுதியில் நீண்ட நீளத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறது. டைனோசர் வால்நரம்புகள் இப்படி இல்லை, ஆனால் அவற்றில் சில மிகவும் நீளமானவை." உண்மையில் டைனோசர்கள் இந்த நீளமான வால் நரம்புகளை அவற்றின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்திலேயே உருவாக்கியிருக்கலாம். சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்கோசோரியா என்று அழைக்கப்பட்ட வளர்ந்த மரத்தின் கிளையின் ஆரம்ப நாட்களில் வளர்ந்திருக்கலாம்.

நியூ ஹேவன், கனெக்டிகுவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் பீபாடி மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியில் முதுகெலும்பு பழங்கால மருத்துவத்தின் இணை கண்காணிப்பாளர் பார்ட்-அஞ்சன் புல்லர், புதைபடிவ மண்டை ஓடுகளின் முப்பரிமாண ஸ்கேன்களைப் பயன்படுத்தி பல ஆர்கோசர்களின் காது கால்வாய்களை புனரமைத்துள்ளார்.

எனவே, இன்றைய நவீன பறவைக் குஞ்சுகள் மற்றும் இளம் முதலைகளைப் போல, இளம் டைனோசர்கள் தங்கள் பெற்றோரின் கவனத்தை ஈர்க்க தங்கள் கூடுகளில் இருந்து ஒலி எழுப்பியிருக்கலாம் என்று பார்ட்-அஞ்சன் புல்லர் கருதுகிறார். பெரும்பாலான டைனோசர்கள், குறிப்பாக பறவைகளுடன் நெருங்கிய தொடர்புடைய அவை பலவிதமான சத்தங்களை எழுப்பினால் நான் முற்றிலும் ஆச்சரியப்படமாட்டேன் என்றும் அவர் கூறுகிறார்.

வேட்டையாடுபவர்கள் அல்லது பிற அச்சுறுத்தல்களைக் கண்டறிதல் போன்ற பரந்த அளவிலான ஒலிகளைக் கேட்கும் திறன் அவைகளுக்குப் பல வழிகளில் பயனுள்ளதாக இருந்திருக்கும், இன்னும் திறம்பட இரையைத் தேடுவதற்கு அவைகளை அனுமதிக்கிறது, என்கிறார் புருசட். அவை ஒன்றொக்கு ஒன்று தொடர்புகொள்வதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் -ஆபத்தைப் பற்றி எச்சரிக்கவும், துணையை ஈர்க்கவும், போட்டியாளர்களை அச்சுறுத்தவும் அல்லது மந்தையாக ஒன்றாக ஒட்டிக்கொள்ள உதவியிருக்கும்.

"குறைந்த பட்சம் சில டைரனோசொரஸ் பயணம் செய்ததையும், வேட்டைக்குழுவால் வேட்டையாடப்பட்டதையும் நாங்கள் அறிவோம், எனவே அவைகளுக்கு இடையே தொடர்பு முக்கியமானதாக இருந்திருக்கலாம்" என்று புருசட் கூறுகிறார்.

டைனோசர்களின் குரல் எப்படி இருக்கும் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புகைப்பட உதவி- டாம் வில்லியம்சன்

மனிதர்களுக்கு கேட்காத நுண்ணிய ஒலி

ஆனால் இவ்வளவு பெரிய விலங்குகள் இந்த ஒலிகளில் பலவற்றை உருவாக்குவதால், அவை நம் காதுகளுக்கு எப்படி ஒலித்திருக்கும்? இன்ஃப்ராசவுண்ட் எனப்படும் குறைந்த அதிர்வெண்களில், முதலைகள் மற்றும் காசோவரிகள்(ஈமுவுடன் தொடர்புடைய மிகப் பெரிய பறக்காத பறவை) வெளிப்படுத்தும் அழைப்புகள் மனித செவித்திறன் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவை.(1980களில் ஸ்பேஸ் ஷட்டில் ஏவப்பட்டபோது ராக்கெட்டுகளின் ஆழமான சத்தத்திற்குப் பதிலளிக்கும் வகையில் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரலுக்கு அருகில் வாழும் முதலைகள் இன்ஃப்ராசவுண்ட் அழைப்புகளை உருவாக்கியதாக தகவல்கள் உள்ளன).

யானைகள் கூட நீண்ட தொலைவில் இருந்தாலும் மனிதர்களுக்கு கேட்காத வகையில் இத்தகைய இன்ஃப்ரா ஒலிகளை எழுப்பி தங்களுக்குள் தொடர்புகொள்வதாக அறியப்படுகின்றன. சுமத்ரான் காண்டாமிருகங்கள் அவற்றின் அடர்ந்த காடுகளின் வாழ்விடத்தை ஊடுருவ ஹம்ப்பேக் திமிங்கலப் பாடலைப் போன்ற இன்ஃப்ராசவுண்ட் விசில்களைப் பயன்படுத்துகின்றன. குறைந்த அதிர்வெண் ஒலிகள் மற்றும் கேளா ஒலி ஆகியவை குறிப்பாக திறந்த சூழல்களிலும் அடர்ந்த காடுகளின் வாழ்விடங்களிலும் நீண்ட தூரம் பயணிப்பதில் சிறந்தவை.

டி. ரெக்ஸ் அல்லது டிப்ளோடோகஸ் போன்ற ராட்சத சௌரோபாட்களின் அளவு கொண்ட விலங்குகளில், ஒலி மிகவும் குறைவாக இருந்திருக்கலாம்.

"உடல் அளவு மற்றும் அதிர்வெண் இடையே ஒரு அடிப்படை அளவிடுதல் உறவு இருப்பதை நாங்கள் அறிவோம்," என்கிறார் கிளார்க்.

"அவைகளில் சில வித்தியாசமான மாற்றங்களைப் பெற்றிருந்தால் தவிர, சிறிய விலங்குகள் அவற்றின் குரல் நாண்களின் நீளம் காரணமாக பொதுவாக அதிக அதிர்வெண் ஒலிகளை உருவாக்குகின்றன. பெரிய விலங்குகள் குறைந்த அதிர்வெண் ஒலிகளை உருவாக்குகின்றன.

எனவே , பெரிய டைனோசர்கள் நான்கு யானைகள் அளவுள்ள விலங்குகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டது போன்று இருக்கும். அவை மனித செவியின் அதிர்வெண் வரம்பில் ஒலிகளை உருவாக்கவில்லை. இருப்பினும், சில பயோலான்டாலஜிஸ்டுகள், டிப்ளோடோகஸ் மற்றும் சூப்பர்சொரஸ் போன்ற ராட்சத சௌரோபாட்கள் கூட்டமாக நகரும் போது தொட்டுணரக்கூடிய தகவல்தொடர்புகளை அதிகம் நம்பியிருக்கலாம் என்று முன்மொழிந்துள்ளனர்.

கூட்டமாக இடம்பெயரும்போது, அருகில் இருப்பவைகளோடு தொடர்புகொள்வதற்கு வசதியாகவே அவைகள் நீளமான வால்களை கொண்டிருந்தன என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: