You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மன உறுதி உடைந்துவிட்டது, இறந்துவிடலாம் எனத் தோன்றுகிறது' - காஸாவில் பிபிசி செய்தியாளர்
கான் யூனிஸில் உள்ள நாசேர் மருத்துவமனை முன்பு ஜீன்ஸ் மற்றும் ஃபிளிப் ஃப்ளாப் அணிந்த இளைஞர்கள் ஏதோ இறுதி ஊர்வலம் நடப்பது போல வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர்.
தெற்கு காஸா பகுதியில் டிசம்பர் 1 முதல் இஸ்ரேல் தீவிர குண்டுவீச்சைத் தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பு மற்றுமொரு பதற்றமான இருள் சூழ்ந்த இரவு இது.
ஸ்க்ரப் உடையில் ஆண்கள் அமைதியாகக் கூடி நின்று கொண்டிருந்தார்கள். திடீரென அவசர உதவிக்கான சத்தம் வந்ததும் அங்கு ஓடுகிறார்கள்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயும், மனச்சோர்வுடனும் இருந்தனர்.
ஹாரன் ஒலித்தவாறே ஒரு கார் நுழைந்தவுடன், அதிலிருந்து ஒரு இளைஞரை ஸ்ட்ரெச்சர் படுக்கையில் இழுத்து மருத்துவமனைக்குள் வேகமாக அழைத்துச் செல்கிறார்கள்.
மற்றுமொரு புழுதி படிந்த கார் ஒன்றும் வந்தது. அதிலிருந்து நான்கு அல்லது 5 வயது மதிக்கத்தக்க குழந்தை இறங்கி நடந்து உள்ளே செல்கிறது.
அடுத்த நாள், ஆறு குழந்தைகளுக்குத் தாயான சாமா இல்வான் உதவி கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கிறார்.
“ஒட்டுமொத்த உலகம் மற்றும் அரபு உலகத்திற்கு நான் ஒரு செய்தியைக் கூற விரும்புகிறேன்,” என்று கத்தினார் அவர்.
“நாங்கள் அப்பாவிகள். எந்தத் தவறையும் நாங்கள் செய்யவில்லை.”
இரண்டு காலி தண்ணீர் பாட்டில்களை காற்றில் வீசியவாறே தனது 5 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் தாகத்தில் தவிக்கிறார்கள் என்று கூறினார் அவர்.
“நாங்கள் நாய்கள் மற்றும் பூனைகளைப் போல ஆகிவிட்டோம். அவற்றுக்குக்கூட செல்வதற்கு ஒரு இடம் இருக்கும். ஆனால் எங்களுக்கு அப்படியில்லை. நாங்கள் வீதிகளில் சிக்கித் தவிக்கிறோம்."
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இருந்து, இவர்களது வாழ்க்கையே சிதைந்து விட்டது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் குறைந்தது 1,200 மக்களைக் கொன்றுள்ளது, 240க்கும் மேற்பட்டவர்களை காஸாவுக்கு பணயக் கைதிகளாக அழைத்துச் சென்றுள்ளது.
அதிலிருந்து வாரக் கணக்கில் காஸாவின் வடக்குப் பகுதிக்குள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் தீவிர குண்டுவீச்சுத் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 15,800 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம்.
பாலத்தீன கைதிகளுக்கு மாற்றாக இஸ்ரேலிய பணயக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட ஏழு நாள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது மீண்டும் போர் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய காஸாவில் என் குடும்பம் இருக்க நான் இங்கு தனியாக கான் யூனிஸில் இருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பு வரை நல்ல சிக்னலுடன் கூடிய சாட்டிலைட் வாகனத்திற்கு இந்த இடம் மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது.
ஒரு பத்திரிக்கையாளராக இருப்பதற்கு நான் எப்போதும் பெருமையடைகிறேன். ஆனால், எனக்கான தேர்வுகள் தீர்ந்து வருகின்றன. வாழ்க்கை என்னை இறுக்கி கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு ஒரு முறையாவது எனது குடும்பத்தைப் பார்க்க மத்திய காஸா வரை என்னால் சென்று வர முடிந்தது. ஆனால் இப்போதோ இஸ்ரேலிய படை அங்கு செல்லும் ஒரு சாலையை முழுவதுமாக தாக்குதல் நடத்தி அடைத்துவிட்டது, மற்றொரு சாலையும் மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது.
எனது பூர்வீகம் வடக்குப் பகுதிதான். ஆனால், தெற்குப் பக்கம் பாதுகாப்பானது என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்தவுடன் எனது குடும்பத்தோடு தெற்குப் பக்கம் நோக்கி சென்றுவிட்டேன்.
தற்போதோ, கான் யூனிஸ் பகுதியில் ‘ஆபத்தான தரைவழித் தாக்குதலை’ நடத்த உள்ளதாகவும், தெற்கு நோக்கி எகிப்து எல்லைப் பகுதியில் உள்ள ரஃபாவுக்கு செல்லுமாறும் எங்களை எச்சரித்துள்ளது அது.
போர் ஆரம்பித்ததில் இருந்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் நடந்தவற்றைத் தாண்டி, முதன்முறையாக நான் முழுமையாகத் தொடர்பு இழந்ததைப் போல் உணர்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த மன உறுதியும் கட்டுப்பாடும் என்னிடமிருந்து துடைத்தெறியப் பட்டுவிட்டது.
நான் என் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான திட்டங்களை வைத்திருந்தேன். ஆனால் தற்போது ஒரு நிலையான முடிவெடுக்க முடியாமல் நொறுங்கிப் போயிருக்கிறேன்.
ரஃபாவுக்கு சென்று தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே என்னுடைய குடும்பம் நலமாக இருக்கும் என்று நான் நம்பிக் கொண்டிருப்பதா? அல்லது இந்த நிலை மோசமடைந்தால் செய்தியளிப்பதை நிறுத்திவிட்டு, அவர்களிடம் சேர்ந்தே இறந்துவிடலா என்று என் குடும்பத்திடம் செல்ல முயல்வதா?
இப்படியொரு மோசமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை யாருக்கும் ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)