You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதிய வங்கதேசத்துடனான தோல்வி
ஒரு நாள் போட்டியில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்று. வங்கதேச அணிக்கு எதிரான இந்தியாவின் புள்ளி விவரங்கள் பெருமளவு இந்தியாவுக்குச் சாதகமாகவே இருக்கின்றன.
ஆனால் இப்படிப் பலம்வாய்ந்த அணியாக இருந்தபோதுதான் வங்கதேசம் இந்தியாவை வீழ்த்தி கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுவரை மோதியுள்ள 39 போட்டிகளில் 31 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. ஆனால் வங்கதேசம்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்த அணி. இந்தியக் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் எழுதப்படுவதற்குக் காரணமானதும் வங்கதேசம்தான்.
தோனி தலைமையிலான புதிய கிரிக்கெட் வரலாறு இந்தியாவில் உருவாவதற்கும் வங்கதேசத்துடனான போட்டி ஒன்றுதான் காரணம்.
அது 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி. கோப்பையை வெல்வதற்கான நம்பிக்கையுள்ள அணிகளுள் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி கோப்பையை தூக்கி வரும் உத்வேகத்துடன்தான் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணித்திருந்தது.
அந்த உலகக் கோப்பைத் தொடர் தர வரசையில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கையுடன் ஆறாம் இடத்தில் இந்தியாவும் ஒரு குழுவில் இடம்பெற்றிருந்தன. இலங்கையை வெல்வது கடினம் என்ற நிலையில், பெர்முடாவையும், வங்கதேசத்தையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு இருந்தது.
சச்சின், கங்குலி, யுவராஜ், சேவக், டிராவிட் என நட்சத்திரங்களைக் கொண்டிருந்தது இந்தியாவின் அணி. இளம் அதிரடி வீரராக தோனி நம்பிக்கையளித்திருந்தார்.
இந்தியாவுக்கு முதல் போட்டியே வங்கதேசத்துடன்தான். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் அந்தப் போட்டி நடந்தது.
பெரிய பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்த இந்திய அணி அந்தப் போட்டியில் வெறும் 191 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. கங்குலி 66 ரன்களும், யுவராஜ் 47 ரன்களும் எடுத்தார்கள். மற்ற யாரும் குறிப்பிடத் தகுந்த ரன்களை எடுக்கவில்லை.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அந்தப் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சும் மிக மோசமாக இருந்தது. வீரேந்திர சேவக், யுவராஜ், சச்சின் உள்பட 7 பேர் இந்தியாவுக்காக பந்துவீசினார்கள். ஆனாலும் 191 ரன்களுக்குள் வங்கதேசத்தை முடக்க முடியவில்லை.
முஷ்ஃபிகுர் ரஹீமும், ஷாகிப் அல் ஹசனும் அரைச் சதம் அடித்து வங்கதேசத்தின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்தியாவுக்கு உலகக் கோப்பை வரலாற்றில் மிக மோசமான தோல்வியாக அமைந்த இந்தப் போட்டி, முதல் சுற்றிலேயே வெளியேறுவதற்கும் காரணமாக அமைந்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் மிகச் சுருக்கமாக இந்திய அணியின் பயணம் முடிந்ததும் இந்தத் தொடரில்தான்.
இந்தத் தொடருக்குப் பிறகு ராகுல் டிராவிட்டின் கேப்டன்சி மீதான கடுமையான விமர்சனங்கள் எழுந்து, படிப்படியாக அவரது கிரிக்கெட் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.
அதே நேரத்தில் டி20 அணிக்கான கேப்டன் பதவி தோனியிடம் வந்து, பிறகு முழுநேர கேப்டன் பதவியும் அவருக்கே உரியதானது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)