புதின் வரும் வேளையில், அத்துமீறிய வட கொரியா, துப்பாக்கியால் சுட்ட தென் கொரியா - என்ன நடக்கிறது?

    • எழுதியவர், ஜன்லூகா அவக்னினா
    • பதவி, பிபிசி நியூஸ்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வரும் வேளையில், வட - தென் கொரிய எல்லையில் உள்ள ராணுவமற்ற மண்டலத்திற்குள்(Demilitarised Zone) வட கொரிய வீரர்கள் அத்துமீறியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

அவர்களை எச்சரிக்கும் வகையில் தென் கொரிய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வட கொரிய வீரர்கள் பின்வாங்கினர். அவர்கள் எல்லை மீறியது வேண்டுமென்றே நடந்தது அல்ல என்று தென் கொரியா நம்புகிறது.

எல்லையை பாதுகாக்கும் பணியில் இருந்த வீரர்கள் தற்செயலாக அந்த மண்டலத்திற்குள் பிரவேசித்திருக்கலாம் என்று நம்புவதாக தென் கொரியா கூறியுள்ளது. இது ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் ஆகும்.

எல்லையில் வேலி அமைக்கப்படவில்லை. அத்துடன், மரங்கள் அதிகமாக வளர்ந்திருப்பதால் வழிகாட்டி பலகைகள் மறைக்கப்பட்டுள்ளன.

"20 முதல் 30 வீரர்கள் இராணுவ எல்லைக் கோட்டிற்கு (MDL) 20 மீட்டர் உள்ளே இராணுவமற்ற மண்டலத்திற்குள் (DMZ) வந்தனர்" என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் (JCS) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வாரங்களில் இது இரண்டாவது நிகழ்வாகும். வட கொரிய துருப்புகள் பிகாக்ஸ் உள்ளிட்ட கருவிகளுடன் ஜூன் 9 அன்று தென் கொரியாவிற்குள் நுழைந்ததாக சியோல் கூறியது. ஒலிபெருக்கி எச்சரிக்கைகள் மற்றும் எச்சரிக்கை காட்சிகளுடன் தென் கொரியா எதிர்வினையாற்றியதும் வடகொரிய வீரர்கள் பின்வாங்கினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வட கொரியாவின் நோக்கம் என்ன?

வட கொரியா ஏப்ரல் மாதம் முதல் மரங்களை அழிக்கவும் கோட்டைகளை உருவாக்கவும் ராணுவமற்ற பிராந்தியத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான துருப்புக்களை அனுப்புவதாக தென் கொரிய கூட்டுப்படை கூறியுள்ளது.

கட்டுமான முயற்சிகளின் போது கண்ணிவெடி வெடித்ததால் வட கொரிய துருப்புகள் பல உயிரிழப்புகளை சந்தித்ததாக தென் கொரிய இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நாடுகளுக்கு இடையேயான சாலைகளில் புதிய கண்ணிவெடிகளை நிறுவுவதற்கு முன், வட கொரியா ஜனவரி மாதம் அந்தப் பகுதியில் உள்ள பழைய நிலைகளை மீட்டெடுப்பதை முடித்ததாக தென் கொரிய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

"இது வட கொரிய துருப்புகள் மற்றும் குடியிருப்பாளர்கள் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகத் தோன்றுகிறது, இதில் விலகலைத் தடுப்பதும் அடங்கும்" என்று தென் கொரியா கூறியுள்ளது.

ராணுவமற்ற மண்டலம் என்பது என்ன?

வட - தென் கொரியா இடையேள்ள ராணுவமற்ற மண்டலம் (DMZ) என்பது உலகின் மிக அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும், இது பனிப்போரின் எச்சமாக உள்ளது. மேற்கில் கியோன்கி-டோ (Gyeonggi-do) முதல் கிழக்கில் கங்வோன்-டோ (Gangwon-do) வரை, 160-மைல் (258km) நீளமுள்ள ராணுவமற்ற மண்டலம் (DMZ) கொரிய தீபகற்பத்தை இரண்டாகப் பிரிக்கிறது.

2023 இல் 196 பேர் வட கொரியாவிலிருந்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்றாலும், கிட்டத்தட்ட யாரும் இந்த எல்லையைத் தாண்டவில்லை. பெரும்பாலானவர்கள் சீனா வழியாகவே தென் கொரியாவிற்குள் செல்கிறார்கள்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு ரஷ்யாவுக்குப் பயணம் செய்த பின்னர், 24 ஆண்டுகளுக்கு பின்னர் வருகை தரும் ரஷ்ய அதிபர் புதினை வரவேற்க வட கொரியா தயாராகி வரும் நிலையில் இந்த அத்துமீறல் நிகழ்வு நடந்துள்ளது.

உக்ரைனில் நடக்கும் போருக்காக வடகொரியா ஏவுகணைகளை வழங்குவதால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஆழமான உறவு இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

வட கொரியா ரஷ்யாவிற்கு பீரங்கி மற்றும் பிற உபகரணங்களை உணவு மற்றும் இராணுவ உதவிக்கு ஈடாக வழங்குவதாக அமெரிக்காவுடன், தென் கொரியாவும் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சில வாரங்களாக வட - தென் கொரியாக்களுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கிம் ஜாங் உன் ஆட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வடக்கிற்கான பிரசார ஒளிபரப்பை தென் கொரியா மீண்டும் தொடங்கியதால், நூற்றுக்கணக்கான பலூன்களை எல்லைக்கு அப்பால் வடகொரியா அனுப்பியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)