பாதி விலையில் வேளாண் இயந்திரங்கள் வாங்கலாம் - யாருக்குக் கிடைக்கும்?

தமிழகத்தில் பெரும்பாலான சிறு குறு விவசாயிகள் சந்திக்கும் பிரச்னை, வேலையாட்கள் கிடைக்காதது.

இந்தப் பிரச்னைக்கான தீர்வு, உழுதல், நடவு செய்தல், அறுவடை செய்தல், மற்றும் இதர வயல் வேலைகளை இயந்திரங்கள் கொண்டு செய்வது.

ஆனால், சிறு குறு விவசாயிகளால் இந்த இயந்திரங்களை விலை கொடுத்து வாங்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்காக, தமிழக அரசு செயல்படுத்தி வரும் ஒரு திட்டம்தான் ‘வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்’.

இத்திட்டத்தின் கீழ், சிறு குறு விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்க 50% வரை மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

யாரெல்லாம் இந்த மானியத்திற்குத் தகுதியானவர்கள்? இந்த மானியத்தை எப்படிப்பெறுவது?

யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்?

2.5 எக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் குறு விவசாயிகள் என்றும் 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள் என்றும் வகைப்படுத்தப்படுவர்.

இவர்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வேளாண் இயந்திரங்கள் வாங்க, இவர்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது.

அதேபோல், பெண் விவசாயிகளுக்கும் 50% மானியம் வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கூடுதல் 20% மானியம் வழங்கப்படும்.

இதர விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்படும்.

அதேபோல், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க இயந்திரங்கள் வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது. வட்டார அளவிலான இயந்திர வாடகை மையங்கள் அமைக்க 40% மானியமும், கிராம அளவிலான வாடகை மையங்கள் அமைக்க 80% மானியமும் வழங்கப்படுகின்றன.

என்னென்ன இயந்திரங்கள் வாங்க மானியம் பெறலாம்?

இத்திட்டதின் கீழ், வயலை உழுவதிலிருந்து, நடவு, அறுவடை, மற்றும் அறுவடைக்குப் பின்னான செயல்பாடுகள் வரை தேவையான இயந்திரங்கள் வாங்க மானியம் பெறலாம்.

வேளாண்மைப் பொறியியல் துறை வெளியிட்டிருக்கும் தகவலின்படி, கீழ்கண்ட கருவிகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

  • டிராக்டர்கள்
  • பவர் டில்லர்
  • தானியங்கி நெல் நாற்று நடவு இயந்திரம்
  • தானியங்கி குழி தோண்டும் கருவி
  • விசை களையெடுக்கும் கருவி
  • புதர் அகற்றும் கருவி
  • தட்டை வெட்டும் கருவி
  • பலவகையான இயந்திரமாக்கப்பட்டக் கலப்பைகள்
  • உரமிடும் கருவிகள்
  • கதிரடிக்கும் இயந்திரம்
  • அறுவடை இயந்திரம்
  • கரும்பு சோகை தூளாக்கும் கருவி
  • தென்னை ஓலை தூளாக்கும் கருவி
  • வைக்கோலைக் கூட்டும் கருவி மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரம்
  • கரும்பு கட்டை சீவும் கருவி

மானியம் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

வேளாண் பொறியியல் துறை அதிகரிகள் அளித்த தகவலின் படி, இந்த மானியங்கள் பெற தமிழக அரசின் ‘உழவன்’ செயலியில் பதிய வேண்டும்.

மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியை தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து, அதில் தங்கள் சுயவிவரத் தகவல்களைப் பதிவி செய்து புதிய கணக்கைத் தொடங்க வேண்டும்.

பின்னர், அதில் ‘மானியத் திட்டங்கள்’ எனும் பகுதிக்குச் சென்று, எந்தத் துறையின் கீழ், எந்தத் திட்டத்தின் கீழ், என்ன வகை இயந்திரங்கள் வாங்க மானியம் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில்,

துறை – ‘வேளாண் பொறியியல் துறை’

திட்டம் – ‘வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்’

என்று தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின் ஆதார் எண், பண்ணை நிலம் பற்றிய தகவல்கள், மற்றும் புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்ற வேண்டும். பின்னர் அதிகாரிகள் இந்த ஆவணங்களின் அசலையும் சரிபார்ப்பார்கள்.

‘விவசாயிகள் பாதி விலை மட்டும் கட்டினால் போதும்’

இந்தத் திட்டம் பற்றிப் பேசிய வேளாண் பொறியியல் துறை அதிகாரி ஒருவர், முதலில் விவசாயிகள் முழுத்தொகையையும் செலுத்தி இயந்திரங்கள் வாங்கியபின், மானியத் தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது, என்றார்.

“ஆனால் இந்த வருடத்திலிருந்து, விவசாயிகள் மானியம் போக மீதி விலையை மட்டும் கொடுத்தால் போதும். அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் இயந்திரங்கள் வாங்க மீதிப் பணத்தை அரசாங்கம் நேரடியாகச் செலுத்திவிடும்,” என்றார்.

மேலும், இந்த வருடம், நிலத்தைப் பதப்படுத்தல், விதை தூவுதல், உரம் இடுதல் போன்ற செயல்களுக்குப் பயன்படும் இயந்திரமான ‘பவர் டில்லர்’ வாங்க 5,000 சிறு-குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: