துணிவு சினிமாவின் மையக் கதையில் என்ன சர்ச்சை? அந்தக் கதை எப்படி உருவானது?

பட மூலாதாரம், TWITTER/BONEYKAPOOR
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
அஜீத் நடித்து வெளிவந்திருக்கும் துணிவு திரைப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் மையக் கதை சொல்லவரும் விஷயம் சரியா என்ற விவாதமும் எழுந்திருக்கிறது.
வேதாளம், விவேகம் படங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை என மீண்டுவந்த அஜீத், வலிமை படத்தில் விமர்சன ரீதியாக ஒரு பின்னடைவைச் சந்தித்தார்.
இந்த நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் துணிவு திரைப்படத்தின் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும்கூட, வசூல் ரீதியாக இந்தப் படம் ஹிட் என்றே ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுசிறு எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும்கூட பெருமளவில் இந்தப் படம் குறித்து பாராட்டியே விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஆகவே, சமீப காலத்தில் வெளிவந்த அஜீத்தின் திரைப்படங்களிலேயே மிகப் பெரிய வெற்றிப்படமாக இந்தப் படம் அமையக்கூடும். மேலும், அவரது எதிர்காலத் திரைப்படங்கள் குறித்த ஒரு திசையையும் இந்தப் படம் சுட்டிக்காட்டுவதாகச் சொல்லலாம். வயதான தோற்றத்துடன் வந்தாலும், எடுத்துக்கொண்ட கதை, படத்தின் திரைக்கதை, பொருத்தமான நடிகர்கள், சிறப்பான பின்னணி இசை ஆகியவை ஒரு வெற்றிப்படத்திற்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இந்தப் படம் காட்டியிருக்கிறது.
முதலீடு குறித்த விமர்சனம்
இந்த நிலையில், இந்தப் படத்தின் அடிப்படையான கதை குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் கதைப்படி, யுவர் பேங்க் என்ற வங்கிக்குள் கொள்ளையடிக்க சில கொள்ளையர்கள் புகுகின்றனர். திடீரென உள்ளே நுழையும் கதாநாயகன் அவர்களை முறியடிக்கிறார். பிறகு, தானே அந்த வங்கியைக் கொள்ளையடிக்க வந்ததாகச் சொல்கிறார்.
பல திருப்பங்களுக்குப் பிறகு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நடக்கும் ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துவதோடு, அந்தப் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்வதாக கதை முடிகிறது.
இந்த நிலையில்தான் சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் மியூச்சுவல் ஃபண்ட்களில் ஏமாற்றுவேலைகள் நடக்க முடியுமா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. கடுமையான கண்காணிப்பின் கீழ் செயல்படும் மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டங்களில் அதுபோல ஏமாற்ற முடியாது என்றும் இந்தத் திட்டங்களைக் கண்காணிக்க The Association of Mutual Funds in India - AMFI என்ற அமைப்பு இருப்பதையும் பல முதலீட்டு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
ஏற்கனவே இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் சதவீதம் மிகக் குறைவு என்ற நிலையில், ‘பொன்ஸி’ திட்டங்களைப் போல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை சித்தரிப்பது தவறு என்கிறார்கள் அவர்கள்.
(சில வகை முதலீடுகளில், முதலீடு செய்பவர்களுக்கு முதலில் அதிக லாபம் கிடைக்கும். ஆனால், படிப்படியாக இந்த லாபம் குறைந்துகொண்டேவந்து, இறுதியில் முதலீடு செய்பவர்கள் தங்கள் பணத்தை இழப்பார்கள். இத்தகைய முதலீட்டுத் திட்டங்களையே 'பொன்ஸி' திட்டங்கள் என்கிறார்கள்).

பட மூலாதாரம், TWITTER/SURESHCHANDRAA
எங்கிருந்து வந்த கதை?
ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்களைக் கையாளும் நிறுவனங்கள் நினைத்தால், மிக மோசமான நிதி நிலையில் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து, அதன் மூலமாக மறைமுக லாபங்களைப் பெற முடியும் என்றும் நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவிலேயே சில சம்பவங்கள் நடந்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கோவிட் கால கட்டத்தில் இந்தியாவில் ஒரு வங்கி திவாலானது. இந்த மோசமான நிலையில், அந்த வங்கியின் டயர் ஒன் பத்திரங்களை இந்தியாவின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனம் ஒன்று சுமார் 2,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இதற்குப் பதிலாக, அந்த முதலீட்டு நிறுவனத்திற்கு அந்த வங்கி, 12,500 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்தது. முடிவில் அந்த வங்கியும் அந்த முதலீட்டு நிறுவனமும் திவால் நிலைக்குச் சென்றன. 2,500 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட டயர் ஒன் பத்திரத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்துபோனது. அதில் நேரடியாக பொதுமக்கள் முதலீடு செய்யவில்லையென்றாலும், மக்களின் பணம் மறைமுகமாக முதலீடு செய்யப்பட்டது.
(நீண்ட கால முதலீடுகளைத் திரட்டும் நோக்கத்தில், காலக்கெடு இன்றி வெளியிடப்படும் பத்திரங்களே டயர் ஒன் பத்திரங்கள் எனப்படுகின்றன. இந்தப் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அதனை விரும்பும் நேரத்தில் விற்கவும் முடியும்.)
இதுபோல பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும் என்கிறார்கள் முதலீட்டு ஆலோசகர்கள். இந்த எடுத்துக்காட்டுகளின் அடிப்படையிலேயே துணிவு படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
துணிவு படம் தற்போது உலகம் முழுவதும் வசூலில் 90 கோடி ரூபாயை நெருங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வார இறுதியில், இந்த தொகை கணிசமாக உயரும் என விநியோகிஸ்தர்களும் நம்புகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












