You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வந்தார் ராகுல் காந்தி - இனி என்ன நடக்கும்?
ராகுல் காந்தி மக்களவை உறுப்பினராக மீண்டும் தொடர மக்களவைச் செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
‘மோதி’ குடும்பப் பெயர் தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இருப்பினும் இந்தத் தண்டனையை கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து அவர் பதவியில் நீடிக்க மக்களவைச் செயலகம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கான அறிவிப்பை நாடாளுமன்றச் செயலகம் வெளியிட்டிருக்கிறது.
இதன் காரணமாக நாளை நடைபெற உள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம், அதற்கு பிரதமர் மோதி அளிக்க உள்ள விளக்கம் ஆகிய நிகழ்வுகளில் ராகுல் காந்தி பங்கேற்க வாய்ப்புள்ளது.
மணிப்பூர் விவகாரம், நம்பிக்கை இல்லாத் தீர்மானம், ஹரியான வன்முறை ஆகிய முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டு வரும் நிலையில் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருவது முக்கியத்துவம் பெறுகிறது.
உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
தனது தீர்ப்பில் சூரத் நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம் குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குற்றத்தை ஈடுசெய்ய முடியாத, ஜாமீன் பெறக்கூடிய மற்றும் அடையாளம் காணக்கூடிய வழக்குகளில், விசாரணை நீதிபதி அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான காரணங்களை வழங்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை விளக்க உயர்நீதிமன்றம் பல பக்கங்கள் செலவழித்தும், இந்த அம்சங்கள் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று உச்ச நீதிமன்ற் கூறியிருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "சத்தியம் எப்போதும் வெல்லும், இன்று இல்லையென்றால் நாளை வெல்லும், நாளை இல்லையென்றால் அடுத்த நாளில் வெல்லும். மக்களின் ஆதரவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.
ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோதி உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஊடகங்களிடம் பேசும்போது, நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் எங்களின் சட்டப் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி மீதான வழக்கின் பின்னணி என்ன?
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி கர்நாடகாவின் கோலாரில் ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது, தன்னுடைய பேச்சில் "எப்படி திருடர்கள் அனைவருக்கும் மோதி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது," என்று நீரவ் மோதி, லலித் மோதி போன்றோரைக் குறிப்பிட்டு ராகுல் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக வழக்கறிஞரும் சூரத் மேற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான புர்னேஷ் மோதி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நான்கு ஆண்டுகள் நடந்த வழக்கின் விசாரணையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம், “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500-இன் படி ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது,” எனத் தீர்ப்பளித்தது.
எனினும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதேநேரத்தில் சூரத் நீதிமன்ற தீர்ப்பு வெளியான அடுத்த நாளே ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனினும், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறிய குஜராத் உயர்நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை சரியானதுதான் என்று கூறியது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில்தான் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனி என்ன நடக்கும்?
எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டு விட்டதால், இன்று அவர் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறார்.
இதன் காரணமாக நாளை நடைபெற உள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம், அதற்கு பிரதமர் மோதி அளிக்க உள்ள விளக்கம் ஆகிய நிகழ்வுகளில் ராகுல் காந்தி பங்கேற்க வாய்ப்புள்ளது.
மணிப்பூர் விவகாரம், நம்பிக்கை இல்லாத் தீர்மானம், ஹரியான வன்முறை ஆகிய முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டு வரும் நிலையில் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருவது முக்கியத்துவம் பெறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்