கதவு கைப்பிடியை தொட்டதும் 'ஷாக்' அடிக்கிறதா? அது ஏன் தெரியுமா?

    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி தமிழ்

இரு தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது தற்செயலாக அவரின் கையைத் தொட நேர்ந்தது. அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

ஒருமுறை அலுவலக உணவகத்தின் கதவைத் திறக்கும்போதும் இதேபோன்று சில விநாடிகளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது நினைவில் வந்து சென்றது.

உங்களில் பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஒருவரைத் தொடுவதன் மூலமோ, கதவைத் திறப்பதன் மூலமோ வேறு சில செயல்பாடுகள் மூலமோ நமது உடலில் மின்சாரம் சிறிய அளவில் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்படக்கூடும்.

ஆனால், அதற்கான காரணம் என்ன என்பது பற்றி என்றாவது ஆராய்ந்துள்ளீர்களா?

நிலை மின் தூண்டல்

நம் உடலும், நம்மைச் சுற்றியுள்ள அனைத்துமே அணுக்களால் ஆனவை என்கிறார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் கருவியல்துறை பேராசிரியரான முனைவர் ஜி சக்திவேல்.

"அணுவில் புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் ஆகியவை உள்ளன. அணுவில் புரோட்டானும் எலெக்ட்ரானும் சமமாக இருப்பதை நியூட்ரல் என்று கூறுகிறோம். சில நேரங்களில் அணுக்களில் சமமற்ற நிலை ஏற்படும். இதைத்தான் நிலைமின் தூண்டல் என்று அழைக்கிறோம்,” என்றார்.

ஷாக் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

ஒருவரைத் தொடும்போதோ, ஒரு பொருளைத் தொடும்போதோ நமது உடலில் அதிர்ச்சி (Shock) ஏற்படும் ஏன்?

ஒருவரையோ, ஒரு பொருளையோ தொடும்போது, மின் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த நேர்மறை மின்னூட்டம் கொண்ட ஒரு பொருளுக்குப் பயணிக்கும் எலெக்ட்ரான்களின் மின்னோட்டடமே அதற்குக் காரணம் என்று சக்திவேல் குறிப்பிடுகிறார்.

“அணுக்களில் சமமின்மை ஏற்படும்போது எலெக்ட்ரான் வெளியே செல்ல முயற்சி செய்யும். அவ்வாறு ஒருவரிடம் கூடுதல் எலெக்ட்ரான் இருந்தால் அது நெகட்டிவ் சார்ஜ்.

இந்த எலெக்ட்ரான் இடம் மாறும்போதுதான் நமது உடலில் மிகச் சிறிய அளவில் ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது," என விளக்குகிறார் சக்திவேல்.

அதேபோல், "எந்தளவு எலெக்ட்ரான் இடம் மாறுகிறது என்பதைப் பொறுத்து நமது உணர்வில் வித்தியாசம் இருக்கும். குறைந்த அளவில் எலெக்ட்ரான் இடம்பெயரும்போது ஊசி குத்துவது போன்று இருக்கும். அதிகளவில் எலெக்ட்ரான் இடம்பெயரும்போது ஷாக் அடித்தது போன்ற உணர்வு இருக்கும்.”

மின்னல் ஏற்படுவது இதற்குச் சரியான உதாரணம். மேகங்களை காற்று தீண்டுவதால்தான் மின்னல் ஏற்படுகிறது.

அதேபோல், நாம் டிவியை ஆன் செய்யும்போதும் அணைக்கும் போதும் திரையின் அருகே சென்று கைகளை வைத்தால் நம் கையிலுள்ள முடிகள் ஈர்க்கப்படுவதை உணரலாம். இதுவும் நிலைமின் தூண்டலுக்கான உதாரணம்தான்.

பருவ காலமும் இதற்கு முக்கிய காரணம்

பருவ காலத்திற்கும் நிலைமின் தூண்டலுக்கு அதிக தொடர்பு இருக்கிறது என்கிறார் சக்திவேல்.

“பொதுவாக குளிர்காலத்தில் அல்லது நம்மை சுற்றி வறண்ட காலநிலை நிலவும் போது உடலில் மின்னூட்டம் உருவாகிறது. காற்று வறண்டு இருப்பதால், நமது சருமத்தின் மேற்பரப்பில் எலெக்ட்ரான்கள் எளிதாக உருவாகி விடுகின்றன.

கோடையில் காற்றின் ஈரப்பதம் எலெக்ட்ரான்களை அழித்து விடுகிறது என்பதால் நிலைமின் தூண்டலை அரிதாகவே நாம் உணர்கிறோம்.”

நிலைமின் தூண்டல் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

உடலில் இவ்வாறு சிறியளவில் எலெக்ட்ரான் வெளியேறுவதால் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் இதுகுறித்துப் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை.

அதேவேளையில், இது உங்களை அசௌகரியமாக உணர வைத்தால், சில நடவடிக்கைகள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்று சக்திவேல் கூறுகிறார்.

  • ஒருசில இடங்களில், இவ்வாறு உடலில் சிறிய அளவில் ஷாக் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படாமல் இருக்க ஈரப்பதமூட்டி(humidifier) பயன்படுத்தப்படுகிறது.
  • தடிமனான காலணிகளை அணியக்கூடாது. வீட்டில் இருக்கும்போது முடிந்த அளவு வெறும்காலில் நடப்பது நல்லது
  • நைலான் மற்றும் பாலிஸ்டர் ஆடைகளை அணிவதைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணியலாம்.
  • தற்போது சந்தைகளில் நிலைமின் தூண்டல் எதிர்ப்பு கருவிகள் (Antistatic device) அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதைப் போன்ற நிலைமின் தூண்டல் எதிர்ப்பு பேண்ட், நிலைமின் தூண்டல் எதிர்ப்பு ஷூ, நிலைமின் தூண்டல் எதிர்ப்பு ஆடைகள், நிலைமின் தூண்டல் கால்மிதிப்பான் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: