இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்; 'சிவப்பு கோடு' என ஜெய்சங்கர் குறிப்பிட்டது என்ன?
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் 'சிவப்பு கோடுகள்' மதிக்கப்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான நிலைப்பாடு ஒன்றை உருவாக்கி, புதிய வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிவப்பு கோடுகள் என ஜெய்சங்கர் குறிப்பிட்டது எதை? வர்த்தக ஒப்பந்தம் பற்றி அவர் கூறியது என்ன?
டெல்லியில் நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ஜெய்சங்கர் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள், அதில் உள்ள பதற்றங்கள் பற்றி பேசினார்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டமுடியாத சில சிக்கல்கள் உள்ளதாகவும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா குறிவைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
"அமெரிக்கா உலகின் மிகப்பெரிய சந்தையாக இருப்பதாலும், உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவை மிகப்பெரிய சந்தையாக பார்ப்பதாலும் அமெரிக்காவுடன் வர்த்தக புரிதலைக் கொண்டிருப்பது முக்கியம்" என்று ஜெய்சங்கர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் சிவப்பு கோடுகள் மதிக்கப்பட வேண்டும் என்றார்.
பிரச்சினைகள் இருப்பதை மறுக்க முடியாது என அவர் கூறியபோதும், அவற்றை பேச்சுவார்த்தையால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவர் வெளிப்படுத்தினார்.
சரி, ஜெய்ஷங்கர் குறிப்பிடும் சிவப்பு கோடுகள் என்பது என்ன?
இது குறித்து குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் இயக்குனர் அஜய் ஸ்ரீவாஸ்தவாவிடம் கேட்டபோது, "இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன, அவற்றுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை" என்று கூறுகிறார்.
அதாவது சில முக்கியமான பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க முடியாததையே சிவப்பு கோடுகள் என அவர் குறிப்பிடுகிறார்.
சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க நாடுகள் ஒப்புக்கொண்டாலும், வரி விலக்கு வழங்க முடியாத சில பொருட்களும் உள்ளன என்று அவர் கூறினார். இந்தியாவைப் பொறுத்தவரை, இவற்றில் விவசாய பொருட்களும் கலாசார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களும் அடங்கும்.
"கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் கோதுமையும் அரிசியும் இந்தியாவின் முக்கியப் பொருட்கள், இதில் அமெரிக்காவிற்கு எந்த சலுகையும் கொடுக்க இந்தியா தயாராக இல்லை" என ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார்.
"மத மற்றும் கலாசாரத் வரையரைக்குள் வரும் மற்றொரு பொருள் பால் பொருட்கள். கால்நடைகளுக்கு இறைச்சி உணவாக வழங்கப்பட்டிருந்தால், அத்தகைய பால் பொருட்கள் நம் நாட்டிற்கு வர முடியாது. இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சிவப்பு கோடுகளின் ஒரு பகுதியாகும்" என்றும் அவர் கூறுகிறார்.
வர்த்தக பேச்சுவார்த்தையின்போது இந்த சிவப்பு கோடுகள் பற்றி விவாதிக்கப்படும் எனக் கூறிய ஸ்ரீவாஸ்தவா, இறுதியில் அவை இரு நாடுகளாலும் மதிக்கப்படும் என்றும் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக பற்றாக்குறையை காரணமாகக் கூறி இந்தியா மீது 25 சதவீதம் வரி விதித்தார், அதன்பிறகு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் யுக்ரேன் போருக்கு நிதியளிப்பதாக கூறி ஆகஸ்ட் மாதம் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதும் இந்த Red Lines-ன் ஒரு பகுதியாக இருக்கும் என கூறுகிறார் ஸ்ரீவாஸ்தவா.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட 25 சதவீத வரி கைவிடப்படும் வரை இந்த இரு நாடுகளிடையே இடையே வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமில்லை என அவர் கூறுகிறார்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னிலையில் உள்ளன. ரஷ்ய-யுக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது.
இந்திய வர்த்தக அமைச்சக தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 35 சதவீதம் ரஷ்யாவிலிருந்து வந்தது, இது 2018 நிதியாண்டில் 1.3 சதவீதமாக மட்டுமே இருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



