குஜராத்தை வென்று சிஎஸ்கே அணியை முந்திய மும்பை - புள்ளிப் பட்டியலில் என்ன மாற்றம்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், நிதிஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மும்பை அடைந்த தொடர் தோல்விகளை விட ரசிகர்களை அதிகம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மும்பை அணி வீரர்கள் களத்தில் வெளிப்படையாக தங்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிக்காட்டியது தான்.
கடந்த போட்டியில் பும்ரா ஆட்டத்திற்கு நடுவிலேயே கோபமாய் தரையை உதைத்தபடி பாண்டியாவிடமிருந்து விலகிச் சென்றார். பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத ஆற்றாமையில் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தார் திலக் வர்மா. ரன் எடுக்க முடியாமல் தன்னைத் தானே கடிந்துகொண்டார் சூர்யகுமார்.
'வெற்றி பெற சில கடினமான முடிவுகளை எடுக்கவும் தயங்கமாட்டேன்' என கோபமாய் சொன்னார் பாண்ட்யா.
'மும்பை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமென்றால் மும்பை வீரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக பாண்டியா எங்கெல்லாம் தவறுகள் நடக்கிறது என கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனே கண்டறிய வேண்டும்' என மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே வெளிப்படையாக சொல்லுமளவிற்கு வீரர்களிடையிலான ஒருங்கிணைப்பு மோசமாக இருந்தத . எஞ்சிய ஒன்பது போட்டிகளில் ஏழில் வெற்றி பெறவேண்டும் என்கிற நெருக்கடியான நிலையில் நேற்று களமிறங்கியது மும்பை.
எதிர் புறம், பெரிதாய் குழப்பங்களோ மாற்றங்களோ இல்லாமல் சீராக ஆடிவரும் அணி குஜராத் டைட்டன்ஸ். அதிரடி சிக்ஸர்கள் ஆடும் பேட்ஸ்மேன்கள் இல்லை. ஆனாலும் பவர் ப்ளேயில் ரன்ரேட் குறையாது. டி20க்கென பெயர்போன வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. ஆனாலும் விக்கெட்கள் விழுந்தபடி இருக்கும். அலட்டிக் கொள்ளாமல் ஆடி புள்ளிகளை சேர்த்து ப்ளே ஆ ஃப்பிற்கும் தகுதி பெற்றுவிடுவார்கள்.
இப்படியான இரு அணிகளுக்கு இடையில்தான் நேற்று போட்டி.
மும்பை அணியில் இரு மாற்றங்கள்
'இன்றைய தேதியில் இந்தியாவில் ஆமதாபாத்தைவிட பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் வேறு இல்லை' என முன்னாள் இந்திய வீரர் அஷ்வின் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். டாஸ் வென்ற சுப்மன் கில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். அவர் அணியில் எந்த மாற்றமும் இல்லை. மும்பை அணியில் கடந்த தடவையே பாண்டியா சொன்னதுபோல ரோஹித்திற்கு ஓய்வு கொடுத்திருந்தார்கள். விதர்பாவிற்காக ஆடி ரன்கள் குவித்த டேனிஷ் மாலேவருக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆட்டும் பொறுப்பு.
நெட் பவுலராக இருந்த க்ரிஷ் பகத்தின் திறமையை கண்டு அவரை மும்பை அணி நேற்றைய போட்டியில் ஆட வைத்துவிட்டது. நீண்ட இடைவேளைக்குப் பின் ஒரே அணியில் இரு இந்திய வீரர்கள் ஒரே போட்டியில் அறிமுகமானார்கள்.
மாலேவரால் முதல் போட்டியில் சோபிக்க முடியவில்லை, ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ரபாடா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடந்த ஆட்டத்தில் கற்றுக்கொண்ட பாடத்தின்படி நமன் தீரை முன்கூட்டியே மூன்றாவது இடத்தில் களமிறக்கியது மும்பை. வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்து கணக்கைத் தொடங்கினார் நமன். சென்ற போட்டியில் சதமடித்த டி காக்கும் ரபாடாவின் அடுத்த ஓவரில் அவுட்டாக அதற்கு பின் களமிறங்கிய சூர்யகுமாரும் ரபாடா வீசிய 150 கி.மீ வேக பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்து வெளியேறினார். பவர்பிளே முடிவில் 46/3 என்கிற மோசமான சூழலுக்கு மீண்டும் வந்தது மும்பை.

பட மூலாதாரம், ANI
மீட்டெடுத்த திலக், சாதித்த மிடில் ஆர்டர்
ஐந்து போட்டிகளில் நான்கில் மும்பை தோல்வியடைய முக்கியமான காரணம் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே ஃபார்மில் இல்லாததுதான். அந்த பொறுப்பை உணர்ந்து நமன் தீரும் திலக் வர்மாவும் மிக கவனமாக ஆடினார்கள். தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய நமன் தீர் அதன்பின் வேகம் குறைத்து ஒருகட்டத்தில் பிரசித் கிருஷ்ணா பந்தில் வெளியேறினார். இந்த இரண்டு சீசன்களில் ஷார்ட் பால்கள் அதிகம் வீசி விக்கெட்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் பிரசித் கிருஷ்ணா. அவர் எடுத்தது மொத்தம் 24 விக்கெட்கள்.
ஒருமுனையில் விக்கெட்கள் மளமளவென சரிவதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மறுமுனையில் திலக் வர்மா தீர்க்கத்துடன் ஆடினார். பிரசித் கிருஷ்ணா வீசிய 15வது ஓவரில் மட்டும் 17 ரன்கள். ரஷித் கான் வீசிய 17வது ஓவரில் 12 ரன்கள். அசோக் சர்மா வீசிய 18வது ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸ், இரண்டு பவுண்டரி என 26 ரன்கள்.
20வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஐ.பி.எல்லில் தன் முதலாவது சத்தத்தை பதிவு செய்தார் திலக். முதல் 22 பந்துகளில் அவர் எடுத்த ரன்கள் 19. ஸ்ட்ரைக் ரேட் 86. அடுத்த 23 பந்துகளில் அவர் எடுத்த ரன்கள் 82. ஸ்ட்ரைக் ரேட் 357.
ஐ.பி.எல் வரலாற்றில் கடைசி 6 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்கிற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் திலக். மும்பை ஸ்கோர் 20 ஓவர்களில் 199/5.

பட மூலாதாரம், ANI
மீண்டெழுந்த மும்பை பவுலிங்
பும்ரா போன்ற பவுலர் அணியில் இருக்கும் போது ஏன் அவரை முதல் ஓவர் போட வைக்க பாண்டியா மறுக்கிறார் என கடந்த போட்டிக்கு பின் பல முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பினார்கள். அணி நிர்வாகமும் அதே கேள்வியை கேட்டதோ என்னவோ இந்த முறை முதல் ஓவர் பும்ரா. முதல் பந்திலேயே பாயிண்ட்டில் கேட்ச் கொடுத்து சாய் சுதர்ஷன் அவுட். இந்த சீசனில் பும்ரா எடுக்கும் முதல் விக்கெட் இது. 153 பந்துகளுக்கு பின் அவர் கணக்கில் ஒரு விக்கெட் வரவு.
அடுத்த ஓவரிலேயே பட்லரை காலி செய்தார் கேப்டன் பாண்டியா. ஒரு பெரிய இடைவேளைக்குப் பின் மும்பைக்காக களம் கண்ட அஷ்வனி குமார் தன் பங்கிற்கு கில்லை பெவிலியன் அனுப்பினார். பவர் பிளே முடிவில் குஜராத் அணியின் ஸ்கோர் 45/3. இரு அணிகளுக்கும் பவர் பிளேயில் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஆனாலும் குஜராத்திற்கு தேவை ஒரு திலக் வர்மா. களத்தில் இருந்தது எல்லாருக்கும் பிடித்த க்ளென் பிலிப்ஸும் திறமைவாய்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும். ஒரே ஓவரில் இருவரையும் அவுட்டாக்கி அனுப்பினார் சான்ட்னர்.

பட மூலாதாரம், ANI
ஸ்கோர் 8 ஓவர் முடிவில் 56/5. திவேதியா, தமிழக வீரர் ஷாருக் என இரண்டு பினிஷர்கள் களத்தில் இருந்தனர். தேவை 72 பந்துகளில் 144 ரன்கள். ஓவருக்கு 12 ரன்கள் குறையாமல் அடிக்கவேண்டும். ஆனால் அதிரடியாக ஆட கையில் விக்கெட்கள் இல்லை. சான்ட்னரும் கஸன்ஃபரும் மிடில் ஓவர்களில் ரன் எடுக்கவிடாமல் இன்னும் அழுத்தத்தை கொடுக்க, திவேதியாவும் அடிக்க முற்பட்டு அவுட்டானார்.
எஞ்சிய பேட்ஸ்மேன்களை அஷ்வனி குமார் அடுத்து அடுத்து பெவிலியனுக்கு அனுப்ப, குஜராத் அணியின் டெயில் எண்ட் வீரர்களால் சம்பிரதாய பேட்டிங் மட்டுமே செய்யமுடிந்தது. மிகுந்த சிரமத்தோடு மூன்று இலக்க எண்ணைத் தோட்ட குஜராத் சரியாக நூறு ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடந்த சீசனில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்திய அஷ்வனி குமார் இந்த ஆட்டத்திலும் அதே 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
குஜராத் எடுத்த மொத்த ரன்களைவிட தனியாளாய் திலக் வர்மா ஒரு ரன் அதிகம் எடுத்திருந்தார். இப்படி ஒரு அணியின் மொத்த ஸ்கோரை வீட்டா எதிரணி வீரர் அதிக ரன்கள் எடுப்பது ஐ.பி.எல்லில் இது இரண்டாவது முறை. முதல் முறை இந்த சாதனையை செய்தது கே.எல்.ராகுல். திலக் தான் ஆட்டநாயகன்.

பட மூலாதாரம், ANI
சிஎஸ்கே அணியை முந்திய மும்பை - புள்ளிப் பட்டியலில் என்ன மாற்றம்?
மும்பை அணிக்கு மிகத் தேவையாய் இருந்த வெற்றி. அதுவும் 99 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி. நெட் ரன்ரேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸை தாண்டி ஏழாவது இடத்தில் அமர்ந்தது மும்பை. புள்ளிப்பட்டியலில் தற்போது முதலிடம் பஞ்சாபிற்கு. இரண்டாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பஞ்சாபை பின்னுக்குத் தள்ளி முதலிடம் செல்ல முடியும். ராஜஸ்தானுக்கும் அப்படியே.
ஹைதராபாத், டெல்லி, குஜராத் ஆகிய மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் நடுவே வீற்றிருக்கின்றன. மும்பை, சென்னை, லக்னோ ஆகிய அணிகள் தலா நான்கு புள்ளிகளோடு கடைசிக்கு முந்தைய மூன்று இடங்களில். இவர்களைவிட ஒரு புள்ளி குறைவாகப் பெற்று கொல்கத்தா கடைசி இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் தவிர ஏனைய அணிகளுக்கு இடையில் அதிகபட்சம் இரண்டு புள்ளிகள்தான் வித்தியாசம் என்பதால் இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் எல்லா அணிகளுக்கும் முக்கியம்.

பட மூலாதாரம், ANI
இந்த ஒரு ஆட்டம் மும்பைக்கு மிகவும் தேவையாய் இருந்த தன்னம்பிக்கையை அளிக்கும். அதே உத்வேகத்தோடு அவர்கள் சேப்பாக்கத்தில் சென்னையோடு மோதுவார்கள். அதேசமயம் , ஹைதராபாத்திடம் மிக குறுகிய வித்தியாசத்தில் நழுவ விட்ட வெற்றி, ஆயுஷ் மாத்ரேவின் காயம், ருத்துராஜின் ஃபார்ம் என ஏராளமான கேள்விகளோடு மும்பையை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை. கடந்த சில சீசன்களாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட போட்டிகளில் சென்னையே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதே முனைப்பு அடுத்த ஆட்டத்திலும் இருந்தால் மட்டுமே எல் க்ளாசிகோவில் சென்னை அணி வெற்றிபெறமுடியும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































