'வாரத்திற்கு 2 அல்லது 3 பேர் மரணம்' - இந்த கிராமத்தில் என்ன நடக்கிறது? தலித் மக்கள் அச்சம்

- எழுதியவர், கரிகிபட்டி உமாகாந்த்
- பதவி, பிபிசிக்காக
ஆந்திர பிரதேசத்தின் குண்டூருக்கு அருகேயுள்ள துரகபளம் எனும் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழும் திடீர் மரணங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக இந்த மரணங்களால் அங்குள்ள தலித் சமூகத்தினர் கலங்கிப் போயுள்ளனர்.
குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி கூறுகையில், அந்த கிராமத்தில் எஸ்சி காலனியைச் சேர்ந்த 29 பேர், கடந்த ஐந்து மாதங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கிராமத்தினர் கூறுகின்றனர்.

இதுதொடர்பான தங்கள் கவலைகளை பிபிசியிடம் எஸ்சி காலனி பகுதியை சேர்ந்த மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களுள் இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அடங்குவர்.
இதுதொடர்பாக, சில தினங்களுக்கு முன்பு அரசு கருத்து தெரிவித்தது. கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து, அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்தது.
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி கொண்டவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றனர்.

பட மூலாதாரம், x.com/ncbn
'ஒரு வாரத்தில் கண்டறியப்படும்' - முதலமைச்சர் சந்திரபாபு
துரகபளம் கிராமத்தில் நிலவும் தற்போதைய சூழலை சுகாதார அவசரநிலையாக கருதி நடவடிக்கை எடுக்குமாறு, ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சர் சத்யகுமார் மற்றும் அதிகாரிகளுடன் அமராவதியில் அவசர கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தியுள்ளார்.
அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் 42 விதமான மருத்துவப் பரிசோதனைகளை நடத்த சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மரணத்தை ஏற்படுத்தும் நோய் என்ன என்பதை ஒரு வாரத்தில் கண்டறிய அறிகுறிகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த கிராமத்தில் யாரும் சமைக்க வேண்டாம் என்றும் எவ்வித உணவை உட்கொள்வதோ அல்லது நீரை பருகுவதோ கூடாது என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இன்னும் சில நாட்களுக்கு அங்குள்ள மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

'திடீரென இறந்தனர்' - கிராம மக்கள்
"இரு மாதங்களுக்கு முன்பு என் அம்மாவுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது, அவரை உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றேன், அவர் லேசான காய்ச்சல் தான் எனக்கூறி சில மருந்துகளை வழங்கினார். அதன்பின்னும் சரியாகாததால், அவரை குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
என் அம்மாவுக்கு தொற்று ஏற்பட்டிருந்தது, சிறுநீரகங்கள் செயலிழந்தன. உடனடியாக அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு 50,000 ரூபாய் செலவாகும். பணம் அதிகம் தேவைப்பட்டதால், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவையனைத்தும் சில நாட்களிலேயே நடந்து முடிந்துவிட்டன," என துரகபளம் எஸ்சி காலனியை சேர்ந்த விஜயராமராஜு பிபிசியிடம் கூறினார்.

"என் கணவரை அனுமதித்த பிறகு மருத்துவமனைக்கு சென்றோம், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே அவர் உயிரிழந்தார். அதன்பின், எங்கள் கிராமத்தில் பலரும் இறந்தனர். எனக்கும் உடல்நிலை சரியில்லை. கிராமத்தின் நிலையை கண்டு எனக்கு அச்சமாக இருக்கிறது," என, துரகபளத்தை சேர்ந்த தலித் பெண் குமாரி தன் கவலைகளை பிபிசியிடம் தெரிவித்தார்.
"கிராமத்தில் வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று பேர் இறக்கின்றனர், என்னுடைய தம்பியும் இறந்துவிட்டார். ஏன் இப்படி நடக்கிறதென தெரியவில்லை. இது மிகவும் அச்சமாக இருக்கிறது," என எஸ்சி காலனியை சேர்ந்த சீதம்மா பிபிசியிடம் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல்
எஸ்சி காலனியில் உள்ள பலரும் காய்ச்சல், மூட்டு வலி மற்றும் மற்ற பிரச்னைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரகபளம் எஸ்சி காலனியில் 230 வீடுகள் உள்ளன, தலித் சமூகத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இங்கு வசிக்கின்றனர்.
"கடந்த இரண்டு மாதங்களாக, எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் இறந்துள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கிறோம்," என அக்கிராமத்தை சேர்ந்த அனுஷா கூறுகிறார்.
"இங்கு நிலவும் சூழலால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது." என அவர் தெரிவித்தார்.

துரகபளம் கிராமத்தில் இத்தகைய திடீர் இறப்புகளை தொடர்ந்து, கிராம தேவாலயத்தில் சில தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவ முகாம் நடத்தியது.
சுகாதார அமைச்சர் சத்யகுமார், துறை ஆணையர் வீரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர், கிராம மக்கள் பலரும் ஏன் திடீரென மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து அறிய ரத்த மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
குண்டூர் மாவட்ட மற்றும் சுகாதார துறை அதிகாரி விஜயலஷ்மி பிபிசியிடம் கூறுகையில், துரகபளம் கிராமத்துக்கென தனியே செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுகாதார ரீதியிலான தகவல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் கூறினார்.

தண்ணீர் மாசுபாடு காரணமா?
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நக்கா ஸ்ரீநிவாஸ் உட்பட கிராமத்தினர் பலரும், சில ஆண்டுகளாக அக்கிராமத்தில், குறிப்பாக தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அருகிலுள்ள குவாரியிலுள்ள குளம் ஒன்றிலிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் மாசடைந்திருப்பதாகவும் அதனாலேயே தற்போதைய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
"திறந்த குவாரியில் உள்ள குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பது பெரும் தவறு. அந்த மாசடைந்த தண்ணீரை பயன்படுத்தியதாலேயே இச்சூழல் ஏற்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்," என ஸ்ரீநிவாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பிபிசியிடம் பேசிய மண்டல மேம்பாட்டு அதிகாரி (MPDO) ஸ்ரீநிவாஸ் கூறுகையில், "அந்த தண்ணீர் இப்போது பயன்படுத்தப்படுவது இல்லை" என்றார்.
குவாரியில் உள்ள குளத்திலிருந்து அக்கிராமத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுவது சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தற்போது கிராம மக்கள் ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

'மதுவும் காரணமாக இருக்கலாம்': எம்எல்ஏ
பிரதிபாடு எம்எல்ஏ பர்லா ரமஞ்ஜனெயலு பிபிசியிடம் கூறுகையில், ஆரம்பத்தில் இந்த இறப்புகள் ஆல்கஹாலால் ஏற்பட்டதாக நம்பப்பட்டதாகவும் எனினும் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
"கிராமத்தில் உள்ள சிலர் மதுவுக்கு அடிமையானவர்கள், அதிகமாக குடிப்பார்கள். தற்போது நிறுத்தப்பட்டு விட்டாலும், மலிவான மதுபானங்கள் முன்பு இங்கு கிடைத்தன. முன்பு அதை குடித்ததன் விளைவுகள் இப்போது தெரியலாம்." என அவர் கூறினார்.
"இந்த கிராமத்தில் 5,600 பேர் இருந்தால், எல்லோருமா பாதிக்கப்பட்டுள்ளனர்? சிலர் மட்டுமே பாதித்திருப்பதால், அது மதுவினால் கூட இருக்கலாம். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னரே காரணம் தெரியவரும்," என அவர் தெரிவித்தார்.,

'அறிக்கை வருவதற்கு முன்பு கூற முடியாது' - சுகாதார ஆணையர்
சுகாதார ஆணையர் வீர பாண்டியன் ஊடகங்களிடம் கூறுகையில், அனைத்து கோணங்களிலும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் தண்ணீர் மாசுபாடு அல்லது ஆல்கஹால் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதையும் விசாரித்துவருவதாகவும் கூறினார்.
"பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பு வரை எதையும் தெளிவாக கூற முடியாது. இறந்த 29 பேரில் 8 பேர் பெண்கள். தண்ணீரை பரிசோதித்ததில் அதில் எந்த மாசுபாடும் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே இறுதி அறிக்கை வருவதற்கு முன்னால் நம்மால் முடிவுக்கு வர முடியாது," என அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Kalyan
மருத்துவர்கள் கூறுவது என்ன?
குண்டூரில் உள்ள தோல் மருத்துவர் கல்யாண், துரகபளத்தை சேர்ந்த இரு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். புர்கோல்டெரியா சூடோமல்லெய் (Burkholderia pseudomallei) எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஆபத்தான தொற்றாக கருதப்படும் மெலியோய்டோசிஸ் அவர்களுக்கு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
ரத்தத்தில் பாக்டீரியா தொற்று உள்ளதா என்பதை பரிசோதித்ததில் இது தெரியவந்ததாக கூறினார்.
கல்யாண் கூறுகையில், நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற நாள்பட்ட நோய்களை கொண்டவர்களுக்கே இது அதிகமாக ஏற்படும் என அவர் தெரிவித்தார். காய்ச்சல், இருமல், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் இருந்து, அது காசநோய் இல்லை என்பது தெரியவந்தால், அவர்களுக்கு இந்த தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். தன்னிடம் வந்த இரு நோயாளிகளில் ஒருவருக்கு தொற்று மோசமானதால் இறந்ததாக அவர் கூறினார்.
எனினும், குண்டூர் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி விஜயலஷ்மி பிபிசியிடம் கூறுகையில், 29 பேரின் ரத்தப் பரிசோதனையில் மெலியோய்டோசிஸ் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
'ஆராய குழு': அமைச்சர் சத்யகுமார்
துரகபளத்தில் ஏற்படும் இந்த திடீர் இறப்புகளை அடையாளம் காண்பதிலும் அதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுவதிலும் தாமதம் இருந்தது உண்மைதான் என அமைச்சர் சத்யகுமார் ஒப்புக்கொள்கிறார்.
கிராமத்துக்கு சென்றபோது ஊடகங்களிடம் பேசிய அவர், இத்தகைய தகவல் குறைபாட்டுக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












