ரெட்ரோ பட விழாவில் சர்ச்சையில் சிக்கிய விஜய் தேவரகொண்டா - போலீசில் புகார்

    • எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா மீது ஹைதராபாத்தில் உள்ள இரண்டு காவல் நிலையங்களில் சமீபத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

விஜய் தேவரகொண்டா, பழங்குடி மக்களை அவமதிக்கும் கருத்துக்களைப் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி பழங்குடியின உரிமை அமைப்புகளின் தலைவர்கள் சார்பில் இந்த புகார்கள் கொடுக்கப்பட்டன.

இந்த சர்ச்சை குறித்து விஜய் தேவரகொண்டா தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன?

சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படத்தின் ஒரு நிகழ்வு ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது பழங்குடியின மக்களை அவமதிக்கும் கருத்துக்களை கூறியதாக விஜய் தேவரகொண்டா மீது ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று, பழங்குடியின வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கிஷன் ராஜ் சௌஹான், ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் விஜய் தேவரகொண்டா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் பெறப்பட்டுள்ளது என்றும் இது குறித்து வழக்குப் பதிவு செய்வது குறித்து சட்ட ஆலோசனை பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.ஆர்.நகர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தேசிய பஞ்ஜாரா மிஷன் இந்தியாவின் (NBMI) மேட்சல் மாவட்டத் தலைவர் ரவிராஜ் ரத்தோட் கீசரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

"பழங்குடியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

சம்பந்தப்பட்ட இந்த புகாரை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும், வழக்குப்பதிவு செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் கீசரா சர்க்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

விஜய் தேவரகொண்டா கூறியது என்ன?

விஜய் தேவரகொண்டா ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று, 'ரெட்ரோ' படத்திற்காக நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

"காஷ்மீர் மக்கள் நம்மைப் போன்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'குஷி' படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அவர்களுடன் (காஷ்மீர் மக்கள்) எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றன.

தனது சொந்த நாட்டு மக்களை பாகிஸ்தானால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, ஆனால் அவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துகிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், பாகிஸ்தானை இந்தியா தாக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தான் மக்களே வெறுப்படைந்து தங்கள் அரசை தாக்கி விடுவார்கள்", என்று விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டார்.

மேலும்,'' அவர்கள் குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல், 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் போல நடந்துக்கொள்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.'' என கூறினார்

இந்த கருத்து, பழங்குடி மக்களின் உணர்வுகள் புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

'யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை'

இது குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா, ''ரெட்ரோ படத்தின் நிகழ்ச்சியில் நான் தெரிவித்த கருத்துகள் சிலரது மனதை புண்படுத்தியதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவரையோ குறிப்பாக பழங்குடியினரை புண்படுத்துவது அல்லது அவர்களை இலக்காக கொண்டு தாக்கிப் பேசுவது எனது நோக்கமல்ல.

நான் ஒற்றுமையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நான் பயன்படுத்திய "tribe" என்ற சொல், வரலாற்று ரீதியாக அகராதியில் உள்ள அர்த்தத்திலேயே பயன்படுத்தினேன்.

அது ஒருபோதும் பழங்குடியினரை குறிக்கவில்லை. என் கருத்துகளால் யாராவது புண்பட்டிருந்தால் நான் வருந்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.