நெல்லின் ஈரப்பதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? அதில் சிக்கல் எழுவது ஏன்?

நெல் ஈரப்பதம், குறுவை பயிர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17% முதல் 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், மத்திய அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இந்த விவகாரத்தில் நெல் ஈரப்பதம் என்றால் என்ன, அதைத் தீர்மானிப்பதிலும், கடைபிடிப்பதிலும் உள்ள சிக்கல்கள் என்ன என்பன போன்ற கேள்விகள் பொது மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றன. அவை குறித்து இங்கு விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

நெல் ஈரப்பதம் என்றால் என்ன?

இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, நெல்லை இரண்டு மணிநேரம் 130 முதல் 133 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பத்தில் சூடாக்கும்போது, அவற்றில் ஏற்படும் எடைக் குறைப்பே, பயிரின் ஈரப்பதமாகக் கணக்கிடுப்படுகிறது.

நெல் கொள்முதல் செய்யப்படும்போது அதில் அதிகபட்சமாக 17% வரை ஈரப்பதம் இருக்கலாம் என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்திய உணவுக் கழகத்தின்படி, அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கொள்முதல் செய்வதற்கும், அதற்கு அடுத்த நடவடிக்கைகளுக்கும் நெல் தரமற்றதாகக் கருதப்படும்.

ஆனால், தமிழ்நாடு அரசு இந்த அளவை 22 சதவிகிதமாக உயர்த்துமாறு கோரியுள்ளது.

"நெல் கொள்முதல் செய்யப்படும்போது பொதுவாக 25% ஈரப்பதம் இருக்கக்கூடும். கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 24 மணிநேரத்தில் நெல்லை உலர்த்த வேண்டும். நெல் உலர்த்துவதில் தாமதம், அல்லது முறையாக உலர்த்தவில்லை என்றால், நெல்லின் தரம் குறையக் கூடும்" என்று சர்வதேச அரிசி ஆய்வு நிறுவனம் (International Rice Research Institute) கூறுகிறது.

இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை காலத்தில் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லில் ஈரப்பதம் 17%க்கும் அதிகமாக இருக்கும் என்பதால், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மற்றும் மாநில அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, நெல்லை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு தமிழகம் வந்திருந்தது. ஆய்வு செய்துவிட்டுத் திரும்பிய அவர்கள், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று நிராகரித்தனர்.

நெல் ஈரப்பதம், குறுவை பயிர்

ஈரப்பதம் அதிகமாக இருந்தால் என்ன பாதிப்பு?

நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால்,

  • நெல் பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாகும்
  • நெல் கருப்பு நிறத்திற்கு மாறக்கூடும்
  • நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியின் அளவு குறையும்

இதனால், நெல்லின் தரம் பாதிக்கப்படும். அதில் இருந்து கிடைக்கப்படும் அரிசியின் தரமும் குறைவாக இருக்கும்.

"நூறு கிலோ நெல்லில் இருந்து சுமார் 45 கிலோ அல்லது 50 கிலோ அரிசி கிடைக்கும். ஆனால் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியின் அளவு குறையும், அரிசியின் தரமும் குறையும்.

உதாரணமாக ஆறு மாதங்கள் வரை தரத்துடன் இருக்க வேண்டிய அரிசியில், சில வாரங்களிலேயே வண்டு, புழு வரலாம். அதிலிருந்து வாடை வரலாம்" என்கிறார் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக உள்ள கோபிநாத்.

நெல் ஈரப்பதம் எப்படி அளவிடப்படுகிறது?

"நெல் அல்லது வேறு எந்த தானியமாக இருந்தாலும், அதை இரண்டு மணிநேரம் 130 முதல் 133 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்கும் போது, தானியங்களில் ஏற்படும் எடைக் குறைப்பே, அந்தப் பயிரில் உள்ள ஈரப்பதமாகக் கணக்கிடப்படுகிறது.

அதாவது பயிரின் வேதிம வடிவமைப்பை மாற்றாமல் எந்த அளவு தண்ணீரை அதிலிருந்து வெளியேற்ற முடிகிறதோ, அதுவே பயிரின் ஈரப்பதம்" என்று இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.

"நெல் உமி நீக்கி அதிலிருந்து அரிசி எடுக்க, நெல்லின் ஈரப்பதம் சுமார் 14% முதல் 15% வரை இருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் போது 17% என்ற அளவில் இருந்தால், ஆலைகளில் உலர வைக்கும் இயந்திரங்களைக் கொண்டு ஈரப்பதத்தைக் குறைத்து, அதைப் பயன்படுத்த முடியும். நெல் கொள்முதல் செய்யும்போது ஈரப்பதம் 22% ஆக இருந்தால், அதைக் குறைப்பது சிரமமாக இருக்கும்" என்கிறார் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி கோபிநாத்.

நெல் ஈரப்பதம், குறுவை பயிர்

குறுவை பயிரில் ஏன் ஈரப்பதம் அதிகமாக உள்ளது?

குறுவை நெல் இயல்பாகவே ஈரப்பதம் அதிகம் கொண்டதாக இருக்கும் என்று திருவாரூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும் விவசாயியுமான தங்க ஜெயராமன் தெரிவிக்கிறார்.

"சம்பா அறுவடை நடக்கும்போது மழைக்காலமாக இருக்காது. ஆனால் குறுவை பயிர் பருவமழைக் காலத்தில்தான் அறுவடை செய்யப்படும். வட கிழக்குப் பருவமழை தொடங்குகிற அக்டோபர் மாதத்தில் அறுவடை செய்வதால், மழைக்கு முன்பே விவசாயிகள் நெல் கடைப் பச்சையாக (அதாவது, நெல் பயிரின் அடி பாகத்தில் சில பகுதிகள் பச்சையாக இருந்தாலும் கூட, அதை அறுவடை செய்துவிடுவார்கள்) இருந்தாலும் எடுத்து விடுவார்கள். நெல் தாளும் காய்ந்திருக்காது.

எனவே குறுவை நெல்லை உடனே விற்பதற்குத்தான் விவசாயிகள் முயல்வார்கள். குறுவை நெல்லின் தன்மையே ஈரப்பதம் அதிகம் இருப்பதுதான். எனவே 17 சதவிகித ஈரப்பதம் என்பது குறுவை சாகுபடிக்குப் பொருத்தமானதல்ல" என்கிறார் அவர்.

நெல் ஈரப்பதம், குறுவை பயிர்

பட மூலாதாரம், JAYARAMAN

படக்குறிப்பு, திருவாரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும் விவசாயியுமான தங்க ஜெயராமன்

குறுவை நெல்லை உலர வைப்பதில் உள்ள சவால்கள் என்ன?

அறுவடை செய்த நெல்லை களத்தில் போட்டு உலர வைப்பார்கள். ஆனால், குறுவை அறுவடைக் காலத்தில் களம் காய்ந்திருக்காது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

"கடந்த காலங்களில் விவசாய தொழிலாளர்களைக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக அறுவடை செய்வார்கள். எனவே, ஒவ்வொரு பகுதியாக உலர்த்துவதற்குக் கொண்டு வரப்படும். ஆனால் இப்போது நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை நடப்பதால் ஒரே நேரத்தில் ஊர் முழுவதும் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. இதனாலும் காய வைப்பதற்கு இடம் பற்றாக்குறையாகிறது," என்கிறார் கோபிநாத்.

நெல் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற பிறகும் பாதுகாப்பாக வைப்பது சாத்தியமில்லை என்கிறார் பேராசிரியர் ஜெயராமன்.

"அடிபட்டறை' எனப்படும் நெல் குவியலின் அடிப்பகுதி கருப்பு வண்ணமாக மாற வாய்ப்புள்ளது. எனவே, இதைத் தவிர்க்க நெல் குவியலை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 150 மூட்டை நெல் இருந்தால் அதை கிளறிப் போடுவதற்கு 3-4 பேர் தினமும் வேலை பார்க்க வேண்டும்.

அதற்கு ஒரு நாளுக்கு ரூ.700 வரை கூலி தர வேண்டும். கொள்முதல் நடக்கும் வரை இந்தச் செலவை விவசாயிகள் தாங்க வேண்டும். குறுவை பயிர் உடனே கொள்முதல் செய்யப்படாவிட்டால் 'பாடு' (சேதாரம்) அதிகமாகிவிடும்" என்று அவர் விளக்கினார்.

கொள்முதல் நிலையங்களில் உலர்த்துவதற்கான கருவிகள் இல்லை

நெல் உலர்த்துவதற்கான கருவிகள் உள்ளன. அவை நெல் அரவை ஆலைகளில் (மில்) உள்ளன. ஆனால் கொள்முதல் நிலையங்களில் உலர்த்துவதற்கான கருவிகள் இருப்பதில்லை என்று பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் உலர்த்தலுக்கான கருவிகள் இருப்பது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும், ஈரப்பதம் தொடர்பான பிரச்னைக்கான தீர்வாகவும் அமைந்திடும் என்கிறார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

"உலர்த்துதல் கருவிகள் வேண்டும் என்ற கோரிக்கையை சமீபத்தில் வந்த மத்திய குழுவிடமும் வைத்துள்ளோம். அவ்வப்போது மாநில அரசிடமும் வைத்து வருகிறோம். சில ஆயிரம் கோடிகள் செலவு செய்தால் மாநிலத்தில் பல இடங்களில் உலர்த்தும் கருவிகளை நிறுவிட முடியும்" என்கிறார்.

பேராசிரியர் ஜெயராமனின் கூற்றுப்படி, உள்ளூரில் நெல் உலர்த்தும் கருவிகள் இல்லாதது விவசாயிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

அதுகுறித்துப் பேசிய அவர், "டெல்டா மாவட்டங்களில் இந்த முறை 6 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. ஆனால் தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் விவசாயிகளுக்கு எளிதாக அணுகும் விதத்தில் உலர்த்தும் வசதிகள், இயந்திரங்கள் கிடையாது.

உதாரணமாக தஞ்சாவூரில் நீடாமங்கலத்தில் அறுவடை செய்கிற நெல்லை ரயில் மூலம் திருச்சி அல்லது சேலத்தில் உள்ள ஆலைகளுக்குக் கொண்டு சென்றுதான் உலர்த்திட முடியும். இதற்குப் பதிலாக அறுவடை செய்யும் இடத்தில் இருந்தே அதை அரிசியாக மாற்றி, தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். இவ்வாறு செய்து எடை குறைப்பதால் போக்குவரத்துச் செலவும் குறையும்," என்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பருவ கால விவரிப்பு தொடர்பான பிரச்னை

ஈரப்பத அளவை தமிழ்நாட்டின் அறுவடைக் காலத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்திட வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர்.

"மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பருவ காலங்களையும் ஒரே மாதிரியாக அணுகுகிறது. வட இந்தியாவில் காரிஃப், ராபி ஆகிய பருவகாலங்கள் பின்பற்றப்படுகின்றன. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.

அப்படித்தான் நமது குறுவை சாகுபடிக்கான ஈரப்பதம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், நமது பருவநிலைக்கு ஏற்ப மாறுபட்ட அணுகுமுறையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று பி.ஆர்.பாண்டியன் கூறுகிறார்.

"வட இந்தியாவில் காரிஃப் பருவத்திற்கான விதைத்தல் மே மாதத்திலேயே தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த நீர் கடைமடைக்கு வருவதற்கு 10 நாட்கள் எனக் கணக்கிட்டால் நம்முடைய பயிரிடல் அதன் பின்னரே தொடங்கும்.

எனவே நம் அறுவடை பருவமழைக் காலமான அக்டோபருக்கு செல்வது தவிர்க்க முடியாதது. இந்தக் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே நம்முடைய கொள்முதலுக்கு 17 சதவிகிதம் ஈரப்பதம் நிர்ணயிப்பது பொருத்தமானதல்ல" என்று பேராசிரியர் ஜெயராமன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு