'தேர்தல் ஆணையம் எனக்கு அங்கீகாரம்' - அன்புமணி அறிவிப்பு: ராமதாசுக்கு என்ன வாய்ப்பு?

பாமக அதிகாரம் யார் கையில்? ராமதாஸ் முன்பு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், PMK/X

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் எனக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. மாம்பழம் சின்னத்தையும் ஒதுக்கிவிட்டனர். வேட்பாளர்களுக்கான ஏ படிவம், பி படிவம் ஆகியவற்றில் நானே கையெழுத்திடுவேன். அதை யாரும் மாற்ற முடியாது" என பா.ம.க தலைவர் அன்புமணி கூறியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

பிகார் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி மாம்பழம் சின்னத்தை தவறான வழியில் அன்புமணி அபகரித்துவிட்டதாக, ராமதாஸ் தரப்பில் குற்றம் சுமத்துகின்றனர்.

அன்புமணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் சட்டமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில் ராமதாஸ் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் புதன்கிழமையன்று (நவம்பர் 12) நடந்தது.

அப்போது பேசிய அன்புமணி, "தென்மாவட்டம், மேற்கு மாவட்டம் உள்பட அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைப் பார்க்க வேண்டும். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். நமக்கு என்ன நல்லதோ அதைச் செய்யப் போகிறேன்" எனக் கூறினார்.

'நமக்குத்தான் மாம்பழ சின்னம்'

"அடுத்த மூன்று மாதங்களுக்கு தி.மு.கவை தவிர வேறு எந்த டார்கெட்டும் நமக்கு இல்லை" எனப் பேசிய அன்புமணி, "என்னை கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மாம்பழம் சின்னத்தையும் ஒதுக்கிவிட்டனர், யாரும் எதுவும் செய்ய முடியாது" எனத் தெரிவித்தார்.

தேர்தலின்போது கட்சி சார்பில் வேட்பாளர்களுக்குக் கொடுக்கப்படும் ஏ படிவம், பி படிவம் ஆகியவற்றில் கையெழுத்திடுவதற்கு தனக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளதாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.

"அதை யாரும் மாற்ற முடியாது. நீதிமன்றம் சென்றாலும் எதுவும் ஆகப்போவது இல்லை. அதைப் பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை." எனவும் அன்புமணி தெரிவித்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் கட்சிக்கும் ராமதாஸுக்கும் உண்மையாக உழைத்து வருவதாகவும் தனது பேச்சின்போது அவர் குறிப்பிட்டார்.

பாமக அதிகாரம் யார் கையில்? ராமதாஸ் முன்பு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், PMK

'2026 ஆகஸ்ட் வரை அங்கீகாரம்'

அன்புமணியை கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியுள்ளதாக கடந்த செப்டம்பர் 15 அன்று செய்தியாளர்களிடம் பா.ம.க செய்தித் தொடர்பாளர் கே.பாலு தெரிவித்தார். "இந்த அங்கீகாரம், 2026 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும்" எனவும் அவர் கூறினார்.

மறுநாள் (செப்டெம்பர் 16) தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி கடிதம் ஒன்றை அளித்தார். அதில், 'கட்சியின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களையும் அதில் அவர் இணைத்திருந்தார்.

இந்த நிலையில், 'வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் படிவத்தில் நானே கையெழுத்திடுவேன்' என அன்புமணி கூறியுள்ளதற்கு ராமதாஸ் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

'போட்டியிடாத பிகாருக்கு மாம்பழ சின்னம்'

"பா.ம.க-வின் தலைவராக தற்போது அன்புமணி இல்லை. வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் படிவம் ஏ, பி ஆகியவற்றிலும் அவர் கையெழுத்திட்டுக் கொடுக்க முடியாது" எனக் கூறுகிறார், பா.ம.க தேர்தல் பணிக்குழு செயலாளர் சதாசிவம்.

"சட்டமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக அங்கீகாரம் இல்லாத கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்கலாம். தமிழ்நாடு பொதுத் தேர்தலை ஒட்டி நவம்பர் 11 முதல் சின்னம் கோருமாறு தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை ஏற்று மாம்பழ சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் நாங்கள் கடிதம் கொடுத்துள்ளோம்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிகார் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதி மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்பினர் பெற்றுக் கொண்டதாகக் கூறும் சதாசிவம், "அது பிகார் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். போட்டியிடாத பிகாருக்கு மாம்பழ சின்னம் கோரினர். சின்னத்தை வாங்கிவிட்டு ஏன் போட்டியிடவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.

பாமக அதிகாரம் யார் கையில்? ராமதாஸ் முன்பு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், DrRamadoss/X

'250 பக்கம்... 23 வகையான ஆவணம்'

"அன்புமணி தரப்பில் ஏமாற்று அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். பிகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எங்கள் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறிவிட்டது" என்கிறார், சதாசிவம்

"மருத்துவர் ராமதாஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் 250 பக்கக் கடிதத்தை கொடுத்துள்ளோம். அத்துடன் தேவைப்படும் ஆவணங்களையும் இணைத்துள்ளோம். இதே கடிதத்தை தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திலும் கொடுத்துள்ளோம்" எனக் கூறுகிறார் பா.ம.க எம்.எல்.ஏ அருள்.

'கடிதம் அனுப்பினோம்; சின்னம் கிடைத்தது' - கே.பாலு

பிபிசி தமிழிடம் இதை மறுத்துப் பேசிய அன்புமணியின் ஆதரவாளரும் பா.ம.க செய்தித் தொடர்பாளருமான கே.பாலு, "எங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது. பிகார் தேர்தலுடன் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய தேர்தல்களுக்கும் சேர்த்து மாம்பழ சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளனர்" எனக் கூறுகிறார்.

பாமக அதிகாரம் யார் கையில்? ராமதாஸ் முன்பு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
படக்குறிப்பு, கே.பாலு

பிகார் தேர்தலைக் கணக்கு காட்டி வாங்கிவிட்டதாக ராமதாஸ் தரப்பு கூறும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, "இது வழக்கமாக நடக்கும் பணி என்பதால் எங்கள் தரப்பில் கடிதம் அனுப்பினோம். சின்னமும் கிடைத்தது" என்கிறார்.

"இதனால் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் எந்தவித குழப்பமும் வரப் போவதில்லை. கட்சியில் உள்ள 99 சதவிகிதம் பேர் அன்புமணியின் பக்கம் உள்ளனர். இதில் எந்தவித பிரச்னையும் இல்லை" எனக் கூறுகிறார்.

பாமக அதிகாரம் யார் கையில்? ராமதாஸ் முன்பு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், PMK

ராமதாஸின் உரிமை என்ன ஆகும்?

"அன்புமணி தரப்புக்கு சின்னம் கிடைத்துள்ளதால் பா.ம.க மீதான ராமதாஸின் உரிமை என்ன ஆகும்?" என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி அன்புமணியிடம் பா.ம.க உள்ளது. ஒரு கட்சியின் சின்னத்தை முடக்கும் வேலையை தேர்தல் ஆணையம் செய்வதில்லை. மாறாக சின்னத்தின் பயன்பாட்டு உரிமையை மட்டும் தற்காலிகமாக ரத்து செய்கிறது" எனக் கூறுகிறார்.

கடந்த செப்டெம்பர் மாதம் சட்டமன்ற பா.ம.க தலைவராக ஜி.கே.மணியை நீக்கிவிட்டு தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரனை நியமிக்குமாறு சட்டமன்ற செயலரிடம் அன்புமணி தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரில் மூன்று பேரின் ஆதரவு அன்புமணிக்கு உள்ளதாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.பாலு தெரிவித்தார்.

இதை மேற்கோள் காட்டிப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "சின்னத்துக்கு உரிமை கோருவதில் பெரும்பான்மை பலம் முக்கியமானது. சட்டமன்ற உறுப்பினர்கள் அன்புமணி பக்கம் சற்று கூடுதல் எண்ணிக்கையில் உள்ளனர். கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் அவர் பக்கமே அதிகளவில் உள்ளனர்" என்கிறார்.

"அன்புமணி யாரையெல்லாம் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களாக நியமித்தாரோ அந்தப் பட்டியல் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. ஆனால், தங்கள் தரப்பில் இருந்து ஒரு பட்டியலை மருத்துவர் ராமதாஸ் தரப்பு அளித்தது. ஆனால், அதன் பேரில் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது" எனக் கூறுகிறார்.

பாமக அதிகாரம் யார் கையில்? ராமதாஸ் முன்பு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

"உள்கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறும் ஷ்யாம், "கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தில் அந்தப் பதவிக்கு எந்த அங்கீகாரமும் இல்லை. கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளை மட்டுமே பார்ப்பது வழக்கம்" என்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ராமதாஸ் முன்னுள்ள வாய்ப்பு என்ன?

"அன்புமணியை கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அவரின் கட்டுப்பாட்டில் பா.ம.க நிர்வாகிகள் பெருமளவு உள்ளனர். அதேநேரம், ராமதாஸ் பக்கம் வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்ளனர்" என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

தி.மு.க எதிர்ப்பை அன்புமணி முன்னிறுத்தி வருவதாகக் கூறும் ரவீந்திரன் துரைசாமி, "திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே தாம் பலம் பொருந்திய நபராக இருப்பதாக ராமதாஸ் கருதுகிறார். மாம்பழம் சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் தனிச் சின்னத்தில் அவர் நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார்.

"திமுக கூட்டணியில் ராமதாஸ் அங்கம் வகிக்கும் பா.ம.க இடம் பெற்றால் அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உள்ளது. இதனால் தேர்தலின்போது என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பது முக்கியமானது" எனவும் ரவீந்திரன் துரைசாமி குறிப்பிட்டார்.

"பா.ம.க மீதான உரிமையை நிலைநிறுத்துவதற்கு ராமதாஸ் தரப்புக்கு ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா?" என, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் கேட்டபோது, "சட்டமன்றத் தேர்தல் முடிவில் அன்புமணியைவிட ராமதாஸ் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

அதோடு, "இரு தரப்புக்கும் இடையே பிரச்னை தீவிரமாக உள்ளதால் வரும் காலங்களில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு" எனவும் ஷ்யாம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு