'தூத்துக்குடி, தென்காசியைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்' - என்ன நடந்தது?

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பணியாற்றிவந்த ஐந்து தமிழர்கள் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கடத்தப்பட்டவர்களில் இரண்டு பேர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் 27 வயதான தளபதி சுரேஷ். இவர் கடையநல்லூர் அருகேயுள்ள கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர், 36 வயதான இசக்கிராஜா. இவர் முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர்.

மற்ற மூன்று பேரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஓட்டப்பிடாரம் நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுதுரை, கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த புதியவன், கலப்பை பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து ஆகியோர் அந்த மூவர்.

இவர்கள் அனைவருமே மாலியில் உள்ள கோப்ரி என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டுவந்த மின்சாரத் திட்டம் ஒன்றில் பணியாற்றிவந்தனர். இவர்கள் ஐந்து பேரும் வியாழக்கிழமையன்று கடத்தப்பட்டனர்.

ஏற்கனவே மாலியில் பணியாற்றிவிட்டு தற்போது ஊருக்குத் திரும்பியுள்ள ஜோசப், தனக்கு முதலில் தகவல் வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"அங்கு என் மாமா பணியாற்றி வருகிறார். அவர் வியாழக்கிழமையன்று இரவில் எனக்கு போன் செய்தார். இதுபோல ஆட்களைப் பிடித்துச் சென்றுவிட்டதாக அவர் சொன்னார். இந்தத் தகவல் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கும் என்ற காரணத்தால் நான் அவர்களிடம் சொல்லவில்லை. நாளிதழ்களில் செய்தி வந்ததைப் பார்த்ததும்தான் அவர்களுக்கு இது குறித்துத் தெரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது. இப்போது மொத்தம் ஐந்து பேர் கடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கடத்தியவர்கள் யார், அவர்கள் கோரிக்கை என்ன என்பதெல்லாம் தெரியவில்லை" என்று ஜோசப் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவர், மாலியின் கோப்ரியில் சர்வேயராகப் பணியாற்றிவிட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஊர் திரும்பியிருக்கிறார்.

இந்தக் கடத்தல் எப்படி நடந்தது?

கடத்தல் தொடர்பாக மாலியில் இருந்து ஜோசப்பிற்குத் தகவல் தெரிவித்த மோகன்ராஜிடம் கேட்டபோது, அவர் அன்று இரவு நடந்த நிகழ்வுகளை விவரித்தார்.

"கோப்ரி என்ற கிராமத்தில் மின் தொடரமைப்புப் பணிகளைச் செய்துவந்தோம். மொத்தம் 18 தமிழர்கள் அந்த முகாமில் இருந்தோம். வியாழக்கிழமையன்று இரவு ஒன்பது மணி இருக்கும். இசக்கிராஜாவும் சிவபாலனும் ஒரே வீட்டில் இருந்தார்கள். இசக்கிராஜா வெளியில் உட்கார்ந்திருந்தார். அப்போது துப்பாக்கியுடன் சிலர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து இறங்கினார்கள்.

இசக்கிராஜாவைப் பிடித்து 'உங்கள் தலைவர் யார்' எனக் கேட்டிருக்கிறார்கள். அவர் மேல் அறைக்கு அழைத்துச் சென்று சிவபாலனைக் காட்டியிருக்கிறார். அவரையும் பிடித்துக்கொண்டார்கள். அதற்குப் பிறகு விளக்குகள் எரிந்த அடுத்த அறைக்குச் சென்றவர்கள் அங்கிருந்த சுரேஷ், பேச்சிமுத்து, பொன்னுத்துரை, புதியவன் ஆகியோரைப் பிடித்தனர்.

எல்லோரையும் பிடித்துக்கொண்டு வெளியில் வந்தபோது, ஒரு வாகனம் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் சாவி என்னிடம் இருந்தது. சிவபாலனிடம் அந்தச் சாவியை வாங்கிவரும்படி சொன்னார்கள்.

என்னுடைய வீடு அங்கிருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்தது. அவர் வந்து கதவைத் தட்டி விஷயத்தைச் சொன்னதும், அந்த வீட்டிலிருந்த நான், சிவபாலன், மேலும் நான்கு பேரும் பின்னால் இருந்த வேலி வழியாக வெளியேறிவிட்டோம். அருகிலிருந்த வீடுகளில் இருந்தவர்களையும் எச்சரித்து வெளியேற்றிவிட்டோம்.'' என்றார் மோகன்ராஜ்.

சிவபாலன் திரும்ப வராத நிலையில், மீதமிருந்த ஐந்து பேரின் சட்டையையும் கழற்றி, அவர்களது கைகளைக் கட்டி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள். எல்லாம் 15 நிமிடத்திற்குள் நடந்துவிட்டது என்கிறார் மோகன்ராஜ்.

''அவர்களில் ஒருவர் மட்டும் எந்திரத் துப்பாக்கி வைத்திருந்தார். மற்றவர்கள் கைத்துப்பாக்கிதான் வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் போனில் சிக்னல் இல்லை என்பதால் உடனடியாக யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் அரபியும் ஆங்கிலமும் கலந்து பேசினார்கள். எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கோரிக்கை என்ன என்பதெல்லாம் தெரியவில்லை" என்கிறார் மோகன்ராஜ்.

இந்த மின் தொடரமைப்புப் பணிகளை மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் செய்துவருகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் கோப்ரியில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஒப்பந்ததாரராக பணியாற்றிவந்தார். அவர் மூலமாக தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எட்டு மாதங்களுக்கு முன்பாக அங்கு வேலைக்குச் சென்றனர்.

'ஊருக்குத் திரும்புவதாக இருந்தது'

"இங்கே இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் வேலைபார்த்துவந்தோம். வேலை முடியும் கட்டத்தை நெருங்கிவிட்டதால் எல்லோரும் நாடு திரும்பிவிட்டார்கள். நாங்களும் இந்த மாத இறுதியில் ஊருக்குத் திரும்புவதாக இருந்தது. அதற்குள் இப்படி நடந்துவிட்டது" என்கிறார் மோகன்ராஜ்.

கடத்தியவர்கள் யார், அவர்கள் கோரிக்கை என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்கிறார் மோகன்ராஜ். தலைநகர் பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். கடத்தப்பட்டவர்கள் தவிர்த்த மீதமுள்ளவர்கள் பமாகோவில் ஒரு முகாமில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடத்தப்பட்ட தகவல்கள் இப்போதுதான் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர்களை மீட்டுத்தர வேண்டுமென கோரியுள்ளனர்.

2012ஆம் ஆண்டிலிருந்தே மாலி, நைஜர் உள்ளிட்ட நாடுகள் அல் - காய்தா மற்றும் ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களை எதிர்கொண்டுவருகின்றன.

இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கையால் நாட்டின் பல இடங்களில் எரிபொருள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த வெளிநாட்டுப் பணியாளர்களை வைத்து மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் வெளிநாட்டவர் கடத்தப்படுவது அங்கு இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது.

தற்போதைய சம்பவத்தில் கடத்தப்பட்டவர்களை மீட்டுத்தரும்படி இந்திய வெளியுறவுத் துறையிடம் கேட்டிருப்பதாக தமிழ்நாடு அயலக தமிழர்கள் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "மாலியில் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்களை உடனடியாக மீட்டுத்தர ராஜ்ஜிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். வெளியுறவுத் துறையின் செயலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், பிற சர்வதேச ஏஜென்சிகளுடன் சேர்ந்து இவர்களை பத்திரமாக மீட்பதற்கான உதவிகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு