மாரடைப்பு வருவது எப்படி? அறிகுறிகளும் வராமல் தடுக்கும் வழிமுறைகளும்

    • எழுதியவர், அமீர் அஹ்மது
    • பதவி, பிபிசி உலக சேவை

உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். அது உங்கள் உடல் முழுவதற்கும் ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை ரத்தத்தின் மூலம் கொண்டு செல்கிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 கோடி மக்கள் உயிரிழக்க கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் (CVDs) எனப்படும் இதய நோய்கள்தான் இறப்புக்கான முக்கிய காரணம்.

ஐந்தில் நான்கு கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் மரணங்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன.

இதயநோய் மருத்துவர்களின் கூற்றுப்படி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் தினமும் செய்யக்கூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. ஆரோக்கியமான இதயம் என்பது நாம் ஓய்வாக இருக்கும் போது நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்கும்.

"நல்ல உணவு, உடற்பயிற்சி மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் இளம் வயதிலேயே இதயத்துக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பையும் குறைக்கலாம்," என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த இதயநோய் மருத்துவரான எவன் லெவின்.

ஆனால், இது ஆரோக்கியமான இதயம் உங்கள் மாரடைப்பு ஆபத்தைக் குறைக்கும் என சொல்லுமளவு எளிதானதா என்கிற கேள்வியும் உள்ளது

மாரடைப்பு என்றால் என்ன?

இதயத்துக்கான ரத்த ஓட்டம் திடீரென தடைபட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இதயத்துக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் போது, இதய தசைகள் சேதமடையலாம் அல்லது இறக்க தொடங்கலாம். உரிய சிகிச்சை இல்லாவிட்டால் இதயத்தின் தசைகள் மீட்டெடுக்க முடியாத சேதத்தைச் சந்திக்கலாம். இதயத்தின் ஒரு பெரும் பகுதி இதுபோல் சேதமடைந்தால், மரணத்தை விளைவிக்கும் வகையில் இதயம் துடிப்பது நின்றுவிடுகிறது (இது கார்டியாக் அரெஸ்ட் அல்லது மாரடைப்பு என அழைக்கப்படுகிறது).

மாரடைப்பு மரணங்களில் பாதி, அறிகுறிகள் ஏற்பட்ட முதல் மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் நிகழ்கின்றன. எனவே, மாரடைப்புக்கான அறிகுறிகள் மருத்துவ அவசரமாக கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்பது முக்கியம்.

பிளேக்ஸ் (plaques) எனப்படும் கொழுப்புப் பொருள்கள் இதய ரத்த நாளங்களில் தேங்கி, ரத்தம் எளிதில் பாய முடியாத அளவு அதனை குறுகலாக்கும் கரோனரி இதய நோய்தான் மாரடைப்புக்கு பொதுவான காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் சுமார் 805,000 பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதில், 605,000 பேர் முதல் முறையாக மாரடைப்பை அனுபவிக்கிறார்கள், 200,000 பேர் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, தோராயமாக ஒவ்வொரு 40 விநாடிக்கு ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு வரலாம் என்பதை ஒருவர் அறிவது எப்படி?

மாரடைப்பு பலவிதமான அறிகுறிகளுடன் ஏற்படலாம், இதில் மிகவும் பொதுவானது மார்பு வலி – ஆனால் இது ஒரு கூர்மையான வலியாக மட்டும் இல்லாமல் மார்பு முழுவதும் கடுமையான அழுத்தம் மற்றும் இறுக்கமாக இருக்கும்.

சில பெண்கள் இந்த மார்பு வலியோடு, கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வலியை உணரலாம்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த இதயவியல் மருத்துவர் ஐலின் பார்சேகியன், மாரடைப்பு தொடக்கத்தில் அஜீரணக் கோளாறு என தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம் எனக் கூறுகிறார். ஆனால், அஜீரணக் கோளாறு போலல்லாமல் இடது கை, தாடை, முதுகு மற்றும் வயிறு போன்ற உங்கள் உடலின் பிற பகுதிகளிலும் மாரடைப்பு பெரும்பாலும் வலியை ஏற்படுத்துகிறது.

தலைச்சுற்றல், அதிக வியர்வை, மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவையும் இதில் அடங்கும்.

மாரடைப்பு திடீரென ஏற்பட்டாலும், சமயங்களில் பலமணி நேரம் அல்லது பல நாட்களுக்கு முன்பே கூட எச்சரிக்கை அறிகுறிகள் தென்படலாம். ஓய்வு எடுத்தாலும் நெஞ்சுவலி சரியாகாவிட்டால் அது ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம்.

"மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, ரத்த ஓட்டம் சீரமைக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட இதய தசைகள் இறக்கத் தொடங்கலாம், அவசர மருத்துவ பணியாளர்கள் வரும்வரை ஒரு ஆஸ்பிரினை மெல்லும்படி நான் அறிவுறுத்துகிறேன்," என்கிறார் மருத்துவர் ஐலின் பார்சேகியன்.

உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று இதயநோய் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

"உங்கள் வயது, எடை, புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் உடல்நலம் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்களுக்கு எதிராக இருந்து, மார்பு அழுத்தத்தை உணர்ந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை அழையுங்கள்," என்கிறார் அமெரிக்க இதயநோய் நிபுணர் மருத்துவர் இவான் லெவின்.

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?

உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் ரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது உட்பட மாரடைப்பு அபாயத்தையும் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன.

ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்வதற்காக உங்கள் ரத்தத்தில் காணப்படுவதுதான் (கொழுப்பு) கொலஸ்ட்ரால். அதே நேரம், சில வகை கொழுப்பு அதிக அளவில் இருந்தால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

நமது இதயத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது தினசரி வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய ஒன்று என இதயநோய் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கொழுப்பு குறைவான, நார்ச்சத்து அதிகமுள்ள உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. அத்துடன் அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடும் என்பதால் தினசரி உட்கொள்ளும் உப்பின் அளவு 6 கிராமுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்பதால் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நிறை கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த உணவுகளில் இறைச்சி பை (meat pie), கேக்குகள், பிஸ்கட்கள், சாசேஜ்கள், வெண்ணெய் மற்றும் பனை எண்ணெய் உள்ள உணவுகள் அடங்கும்.

நிறைவுறாத கொழுப்புகள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது மற்றும் ரத்த நாள அடைப்புகளை நீக்க உதவக் கூடியவை என்பதால் சமச்சீரான உணவாக அவை சேர்க்கப்பட வேண்டும்.

இந்த உணவுகளில் எண்ணெய் மீன்கள், அவகேடோ, கொட்டைகள் மற்றும் காய்கறி எண்ணெய்கள் அடங்கும்.

ஆரோக்கியமான உணவை வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைப்பது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான எடை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

ஒரு நாளைக்கு தினமும் 30 நிமிடம் வீதம் வாரத்தில் ஐந்து முறை உடற்பயிற்சி செய்வதை இதயநோய் மருத்துவ நிபுணர் இவான் லெவின் பரிந்துரைக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு "எப்போதும்" புகைப்பிடிக்கவோ அல்லது வேப் (Vaping) செய்யவோ கூடாது என்பதுதான் அவரது மிக முக்கிய அறிவுறுத்தல்.

24,927 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சாதாரண சிகரெட்டுகளை மட்டும் புகைப்பவர்களுக்கு உள்ள இதய நோய் அபாயம் இ-சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கும் இருப்பதாக அமெரிக்க இதய சங்கம் தெரிவிக்கிறது. இருப்பினும் இ-சிகரெட்டுகளை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 30-60% குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, ஏற்கெனவே ஒரு மாரடைப்பை அனுபவித்தவர்களில், சுமார் ஐந்தில் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டாவது மாரடைப்புக்காக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் ஸ்வீடனின் லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகளுக்கு ஸ்டேடின்கள் மற்றும் எஸெடிமிப் (ezetimibe) மருந்துகளை பரிந்துரைப்பது இரண்டாவது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவும். இந்த இரண்டு மருந்துகளும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகள்.

"எல்டிஎல் (LDL) கொலஸ்ட்ரால் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவு இதய கோளாறுகளின் அபாயம் குறைகிறது என்பதை பல பத்தாண்டுகளின் தரவு காட்டுகிறது," என்கிறார் டாக்டர் ஐலின் பார்சேகியன்.

இளம் தலைமுறையினரிடம் மாரடைப்பு அதிகரிப்பு

மாரடைப்பு அபாயம் பொதுவாக வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, ஆனால் அமெரிக்க தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் (US National Center for Health Statistics) தரவுகள் இளைஞர்களிடையே மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

2019இல், 18 முதல் 44 வயது வரையிலானவர்களில் 0.3% பேர் மாரடைப்பை அனுபவித்தனர். 2023ஆம் ஆண்டு இது 0.5% ஆக உயர்ந்தது.

2019-ல் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 0.3% பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டில் இது 0.5% ஆக அதிகரித்திருந்தது.

இந்த அதிகரிப்புக்கு, இந்த வயதினரிடையே பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் அதிகரித்தது மற்றும் உடற்பயிற்சி இல்லாமை உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களைக் காரணமாக கூறுகிறார் மருத்துவர் இவான் லெவின்.

"நாம் அனைவரும் உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, ஆனால் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். கோவிட்டுக்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் நச்சான, அதிகம் நகரவே தேவையில்லாத உடல் இயக்கமே இல்லாத வாழ்க்கை முறைக்குள் செல்வது கவலை அளிக்கிறது," என்கிறார் அவர்.

இரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகளை உருவாக்கும் அத்திரோஸ்கிளிரோசிஸ் (atherosclerosis) உருவாக்குவதற்கு புகைப் பிடிப்பது ஒரு காரணியாக அறியப்படுகிறது, ஆனால் இளைஞர்கள் மீது வேப் (vapes) பயன்படுத்துவதன் அறியப்படாத தாக்கம் பற்றிய கவலைகளும் மருத்துவர் இவான் லெவின் போன்ற இதயநோய் நிபுணர்களுக்கு உள்ளது.

டாக்டர் ஐலின் பார்சேகியன் கூறுகையில் "பரம்பரை ஹைப்பர்லிபிடமியா (familial hyperlipidaemia) போன்ற மரபணு ஆபத்து காரணிகளும் இள வயதில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்கம் போன்ற சூழல்களும் இதற்கு பங்களிக்கின்றன என்று புரிந்து கொள்ளப்படுகிறது." என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு