பிரதமரின் புதிய இல்லத்திற்கான செலவு எவ்வளவு? பிபிசி கேள்விக்கு மத்திய அரசு பதில்

    • எழுதியவர், ஜுகல் புரோஹித் மற்றும் அர்ஜுன் பர்மர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்கள்

இந்தியப் பிரதமர் விரைவில், புது தில்லியின் மையப்பகுதியில், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அருகில் உள்ள ஒரு புதிய அலுவலக வளாகத்தில் இருந்து பணியாற்றத் தொடங்குவார்.

இந்த வளாகம் 'சேவா தீர்த்' (Seva Teerth) என்று அழைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமரின் புதிய இல்லம் இந்த இடத்திற்கு மிக அருகிலேயே கட்டப்படவுள்ளது. இந்த இரு கட்டடங்களும் அரசின் லட்சியத் திட்டமான 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டம் 2026-ஆம் ஆண்டு நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் என்று அரசே தனது அறிக்கையில் தெரிவித்திருந்தாலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் முழுமையான செலவுகள் குறித்த விவரங்களை வழங்க அரசு மறுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் செலவு அதிகரித்தது குறித்து இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அரசு அறிக்கை ஒன்றை அளித்திருந்த நிலையில், இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

ஜிஎஸ்டி அதிகரிப்பு, எஃகு விலை மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் இல்லம் ஆகியவற்றின் செலவுகள் அதிகரித்துள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்தது.

பிரதமரின் புதிய இல்லம் குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன.

செலவுகள் அதிகரித்திருப்பதை ஒப்புக்கொண்ட போதிலும், முன்னதாகக் கூறப்பட்ட 20,000 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் திட்டத்தின் மொத்தச் செலவு எவ்வளவு என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை.

தற்போதைய நிலவரத்தை தெரிந்துகொள்ள, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் (ஆர்டிஐ) கீழ் பிபிசி விண்ணப்பித்தது.

ஆர்டிஐ மூலம் பிபிசி கேட்டது என்ன?

முதல் பகுதியில், சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடர்பான விரிவான தகவல்கள் கேட்கப்பட்டன. இதுவரையிலான திட்ட மதிப்பீடுகள், செப்டம்பர் 30, 2025 வரை செய்யப்பட்ட மொத்தச் செலவு, அங்கீகரிக்கப்பட்ட டெண்டர்களின் பட்டியல், பணிகளின் பெயர்கள், டெண்டர்களை வென்ற ஒப்பந்ததாரர்கள்/நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு பணிக்கான செலவு ஆகியவை அடங்கும்.

இந்தத் திட்டம் முடிவடையக் கூடிய உத்தேசத் தேதியை அறியவும் நாங்கள் முயன்றோம்.

இரண்டாவது பகுதியில், பிரதமரின் புதிய இல்லத்தின் நிலை, பணிகள் மற்றும் வசதிகள் குறித்த தகவல்கள் கோரப்பட்டன.

இறுதிப் பகுதியில், குடியரசுத் துணைத் தலைவர் இல்லம் குறித்தும் இது போன்ற தகவல்கள் கோரப்பட்டன.

பிரதமர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத வகையிலான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் பிபிசி குறிப்பிட்டிருந்தது.

அரசு வழங்கிய தகவல்கள் என்ன?

ஆரம்பத்தில், இந்த விண்ணப்பம் குறித்து அனைத்து பொதுத் தகவல் அதிகாரிகளுக்கும் தெரிவித்த மத்திய பொதுப்பணித் துறை (CPWD- சிபிடபிள்யூடி), தொடர்புடைய தகவல்களைப் பகிருமாறு கேட்டுக் கொண்டது.

தகவல்கள் அவர்களிடம் இல்லையென்றால், விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

"அனைத்து சென்ட்ரல் விஸ்டா திட்டங்களையும்" மேற்பார்வையிடும் மத்திய பொதுப்பணித் துறை, அக்டோபர் 24, 2025 தேதியிட்ட தனது பதிலில், திட்டச் செலவு, முடிவடையும் தேதி மற்றும் விடப்பட்ட டெண்டர்கள் தொடர்பான கேள்விகள் "இந்த அலுவலகத்திற்கு உரியவை அல்ல" என்று தெரிவித்தது.

பிரதமரின் இல்லம் தொடர்பான கேள்விகளுக்கு, "எந்தப் பணிகள் குறித்த விவரங்கள் கோரப்பட்டுள்ளனவோ, அவை 'ரகசியப் பிரிவை' சேர்ந்தவை, எனவே தகவல்களை வழங்க முடியாது" என்று சிபிடபிள்யூடி பதிலளித்தது.

இந்தப் பதிலைப் பெற்ற சில நாட்களுக்குள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் பிபிசி மேல்முறையீடு செய்து, எங்களின் ஆரம்பக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.

மேல்முறையீட்டிற்குப் பதிலளித்த சிபிடபிள்யூடி-இன் சுதிர் குமார் திவாரி, டிசம்பர் 2, 2025 அன்று, ஒட்டுமொத்தத் திட்டம் தொடர்பான தகவலுக்கான கோரிக்கை 'தெளிவற்றது' என்று தெரிவித்தார்.

பிரதமரின் இல்லம் குறித்த தகவலைப் பொறுத்தவரை, "உங்களது ஆர்டிஐ விண்ணப்பம் சட்டத்தின் 8(1)(a) பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படும் பிரிவில் வருகிறது, இதன் காரணமாகக் கோரப்பட்ட தகவல்களைப் பகிரங்கப்படுத்த முடியாது" என்று அவர் கூறினார்.

"இந்தத் தகவலை வெளியிடுவது இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும். தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவது நாட்டின் வியூக நலன்கள் மற்றும் சர்வதேச உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடியரசுத் துணைத் தலைவர் இல்லம் தொடர்பான எந்தக் கோரிக்கைக்கும் பதில் அளிக்கப்படவில்லை.

திட்டம் பற்றி இதுவரை தெரிய வந்துள்ளது என்ன?

திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், "பிரதமரின் தற்போதைய இல்லம் சென்ட்ரல் விஸ்டாவிற்கு வெளியே லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது. தெற்கு பிளாக் பின்புறம் உள்ள ஏ மற்றும் பி பிளாக்குகளில் தற்போதுள்ள குடிசைப் பகுதிகளை அகற்றிய பின், பிரதமரின் புதிய இல்லத்தைக் கட்ட முன்மொழியப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்த புதிய இல்லம் முழுமையாகச் செயல்படும் வகையில் அனைத்துத் தேவையான வசதிகளுடன் இருக்கும். சிறப்புப் பாதுகாப்புப் படைக்காக (எஸ்பிஜி) பிளாட் எண் 30-இல் கூடுதல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து முக்கியப் பிரமுகர்களின் அலுவலகங்களும் இல்லங்களும் ஒரே இடத்தில் இருப்பது, அதிக உள்கட்டமைப்புத் தேவைகளைக் குறைத்து, நகரின் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்தும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் இல்லத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அரசு கூறியிருந்தாலும், பிரதமரின் இல்லத்தின் நிலை குறித்து இன்னும் தெளிவு இல்லை.

பிரதமர் அலுவலகம் குறித்து அரசு கூறுகையில், "அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஹைதராபாத் ஹவுஸ் போன்ற ஒரு மாநாட்டு கட்டமைப்பு ஆகியவையும் பிரதமர் அலுவலகத்துடன் ஒரே வளாகத்தில் அமையும். இவை அனைத்தும் சேர்ந்து 'எக்ஸிகியூட்டிவ் என்க்ளேவ்' (Executive Enclave) என அழைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது 'செயலில் உள்ள திட்டம்' என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் "எம்.பி-க்களுக்கான புதிய நாடாளுமன்ற அறைகள், சென்ட்ரல் விஸ்டா அவென்யூ மற்றும் பொது மத்திய செயலகத்தின் 10 கட்டடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து மேம்பாட்டு மற்றும் மறுமேம்பாட்டுப் பணிகள்" அடங்கும்.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை 'தலைமுறைகளுக்கான உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டம்' என்று அரசு விவரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு