You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கூடுதல் ஊதியம் முதல் கிராஜுவிட்டி வரை' - புதிய தொழிலாளர் சட்ட விதிகளின் எளிய விளக்கம்
இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் சட்ட விதிகளை கொண்டு வந்துள்ளது.
ஓராண்டு பணி செய்தாலே கிராஜுவிட்டி பெற தகுதி, மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம், பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற அனுமதி போன்றவை இந்த சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக இந்த சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. மறுபுறம் இது தொழிலாளர்களுக்கு எதிரானது என தொழிற்சங்கங்கள் விமர்சிக்கின்றன.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு சட்ட விதிகள் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, தொழிலாளர் ஊதியச் சட்ட விதி 2019, தொழில்துறை தொடர்புகள் சட்ட விதி 2020, சமூகப் பாதுகாப்புச் சட்ட விதி 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்ட விதி 2020 ஆகியவை நவம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
என்ன உள்ளது?
பழைய தொழிலாளர் சட்டங்களுடன் புதிய தொழிலாளர் சட்ட விதிகளை ஒப்பிட்டு, அதன் பலன்கள் என கூறி மத்திய அரசு ஓர் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,
1) அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி நியமன கடிதங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2) நிரந்தர தொழிலாளர்களுக்கு நிகராக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் விடுமுறை, மருத்துவ மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்டவை நீட்டிக்கப்பட்டுள்ளன
3) நாற்பது வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனை
4) Gig Workers, தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
எனினும் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்ச தொழிலாளர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டால்தான் வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ மருத்துவ சலுகை, பணிக்கொடை வழங்கப்படும் போன்ற நிபந்தனை தளர்த்தப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
5) பணியாளர்கள், பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து பணிக்கொடை அதாவது கிராஜுவிட்டி பெறுவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதி திருத்தப்பட்டு ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
6) சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை வாங்கினால், அவர்களுக்கு அதற்கான கூடுதல் ஊதியத்தை வழங்க வேண்டும்.
7) ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும்.
8) பெண்கள் இரவு பணிகளில் பணியாற்ற இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஒப்புதலுடன் அனைத்து இரவு பணிகளிலும் அவர்களை பணியமர்த்தலாம் என கூறப்பட்டுள்ளது.
9) பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவும், ஆட்குறைப்பு செய்யவும், நிறுவனத்தையும் மூடவும் நிறுவனங்கள் அரசின் முன் அனுமதியை பெறுவதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலில் குறைந்தபட்சம் 100 ஊழியர்கள் இருந்தாலே அரசின் அனுமதி பெற வேண்டும் என்று விதி இருந்தது. அது தளர்த்தப்பட்டு, தற்போது குறைந்தபட்சம் 300 ஊழியர்கள் என்று மாற்றப்பட்டுள்ளது.
10) வேலை தொடர்பான அரசின் விதிமுறைகள் தொகுப்பு, தற்போது வீட்டில் இருந்து பணி செய்வதை வெளிப்படையாக அனுமதிக்கிறது, இது நிறுவனத்துக்கும் ஊழியருக்கும் இடையிலான ஒத்திசைவான ஒப்பந்தத்தை பொருத்து அமையும். ஒரு நிறுவனத்தில் பணியாளர்களை எப்படி நடத்த வேண்டும், வேலை இடத்தில் என்னென்ன விதிகள் இருக்க வேண்டும் என்பதற்கான அரசின் விதிகளே இந்த விதிமுறைகள் தொகுப்பு.
இந்த விதிமுறைகள் தொகுப்பு முதலில் குறைந்தபட்ச 100 ஊழியர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு கூட பொருந்தும் என்று விதி இருந்தது. சுமையை குறைப்பதற்காக 300 ஊழியர்கள் என்று உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
அதாவது விதிமுறைகள் தொகுப்பு 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கே பொருந்தும்.
11) Fixed Term Employment என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நிறுவனம் மற்றும் ஊழியருக்கு இடையிலான நேரடி ஒப்பந்தத்தின் மூலம் பணி நியமனம் நடைபெறும். நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போன்ற குறைந்தபட்ச வேலை நேரம், ஊதியம் போன்றவை இவர்களுக்கும் வழங்கப்படும்
12) வேலை நிறுத்தம் என்பதன் வரையறை மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. நிறுவனத்தில் 50% மேலான ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்தால் அது வேலை நிறுத்தமாக கருதப்படும் என்று புதிய விதிகள் கூறுகின்றன. ஏற்கெனவே இருந்த விதிகளின் கீழ் இது வேலை நிறுத்தப் போராட்டமாக கருதப்படவில்லை.
தொழிற்சங்கங்கள் போராட்டம்
தொழிலாளர் அமைப்புகள், இந்த தொழிலாளர் சட்ட விதிகள் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை அதிகரிக்கும், மேலும் முதலாளிகளின் அழுத்தத்தில் இது தயார் செய்யப்பட்டுள்ளது என கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி, இந்த சட்ட விதிகள் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுப்பதாக குற்றஞ்சாட்டுகிறது.
பல தொழிலாளர் அமைப்புகள் நவம்பர் 26 அன்று நாடு முழுவதும் இந்த தொழிலாளர் சட்ட விதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்றவை டிசம்பர் 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு