சிஎஸ்கே வெற்றிகரமான உத்தியை மாற்றியது ஏன்? இனி அனைத்து பிரச்னைகளும் தீருமா?

சிஎஸ்கே ஜென் ஸி அணியாக மாறியது ஏன்?இனி அனைத்து பிரச்னைகளும் தீருமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்

ஐபிஎல் 2026 ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடந்து முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு அணியும் அடுத்த சீசனுக்கான தங்கள் அணியைத் தயார் செய்திருக்கின்றன.

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வீரர்களை வாங்கியது. ஏலத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு இருந்த பிரச்னைகள் அனைத்தையும் அந்த அணி சரிசெய்திருக்கிறதா?

சிஎஸ்கே வாங்கிய வீரர்கள்

  • கார்த்திக் சர்மா
  • பிரசாந்த் வீர்
  • ராகுல் சஹர்
  • அகீல் ஹொசைன்
  • மேட் ஹென்றி
  • மேத்யூ ஷார்ட்
  • ஸாக் ஃபோக்ஸ்
  • சர்ஃபராஸ் கான்
  • அமன் கான்

விக்கெட் கீப்பர் பேட்டரான கார்த்திக் சர்மாவுக்கும், இடது கை பேட்டிங் மற்றும் இடது கை ஸ்பின் வீசும் பிரசாந்த் வீருக்கும் தலா 14.2 கோடி கொடுத்திருக்கிறது சூப்பர் கிங்ஸ்.

விக்கெட் கீப்பர் பேட்டரான கார்த்திக் சர்மாவுக்கு இப்போது 19 வயதுதான் ஆகிறது. உள்நாட்டு டி20 போட்டிகளில் சிறப்பான ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். பிரசாந்த் வீர், 2025 உத்தர பிரதேச டி20 லீக்கில் பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

ஜடேஜா, அஷ்வின் போன்ற ஸ்பின்னர்கள் வெளியேறியதால் ராகுல் சஹர், அகீல் ஹொசைன் இருவரையும் வாங்கியிருக்கிறார்கள்.

வேகப்பந்துவீச்சை பலப்படுத்த மேட் ஹென்றி, ஸாக் ஃபோக்ஸ் ஆகியோரை வாங்கியிருக்கிறார்கள். ஆல்ரவுண்டர்கள் அமன் கான், மேத்யூ ஷார்ட் ஆகியோர் பேக் அப் வீரர்களாக செயல்படக்கூடும்.

இவர்கள் போக இந்திய மிடில் ஆர்டர் பேட்டர் சர்ஃபராஸ் கானையும் வாங்கியிருக்கிறது சூப்பர் கிங்ஸ்.

சிஎஸ்கே ஜென் ஸி அணியாக மாறியது ஏன்?இனி அனைத்து பிரச்னைகளும் தீருமா?

பட மூலாதாரம், Getty Images

மாறியிருக்கும் அணுகுமுறை

சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதுமே அனுபவத்தை பிரதானப்படுத்தும் அணியாகவே அறியப்பட்டிருக்கிறது. வயது அதிகமான வீரர்களாக இருந்தாலும் அனுபவ வீரர்களை விரும்பி வாங்குவார்கள். இதற்காகப் பலமுறை அந்த அணி விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறது. கடந்த 2025 சீசனில் அந்த அணி தடுமாறியபோது இது பற்றி அதிகமாகவே விமர்சிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் அதுபற்றிப் பேசியிருந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங், "எனக்கு ஒரு வீரரின் வயது என்ன என்பதைப் பற்றி கவலையில்லை. அனுபவம் எங்களுக்குக் கடந்த காலத்தில் எப்போதுமே உதவியிருக்கிறது" என்று கூறியிருந்தார்.

ஆனால், தற்போது நடந்து முடிந்திருக்கும் இந்த ஏலம் அவர்கள் அந்த அணுகுமுறையில் இருந்து விலகி புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதைக் காட்டியிருக்கிறது.

மிகப் பெரிய தொகையோடு சென்ற சூப்பர் கிங்ஸ், அதை பெரிய வீரர்களுக்குச் செலவு செய்யாமல், கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் என இரண்டு இளம் இந்திய வீரர்களில் பெருமளவு முதலீடு செய்தது.

ரசிகர்கள், விமர்சகர்கள் என சிலருக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், மாறிவரும் ஐபிஎல் அரங்கில் இளம் வீரர்கள் மீது முதலீடு செய்வது முக்கியம் என்பதை சூப்பர் கிங்ஸ் புரிந்திருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.

"கடந்த ஆண்டு சீனியர்கள் சறுக்கியதும், அதேசமயம் மாத்ரே, ப்ரெவிஸ், ஊர்வில் போன்ற இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாடும், அணுகுமுறை மாற்றத்துக்கான தேவையை சூப்பர் கிங்ஸுக்கு உணர்த்தியிருக்கவேண்டும்" என்று பிபிசி தமிழிடம் கூறினார் கிரிக்கெட் வல்லுநரும், வர்ணனையாளருமான நானீ.

ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, அனிகேத் வர்மா, பிரியான்ஷ் ஆர்யா என கடந்த ஆண்டு இளம் வீரர்கள் தங்கள் அணியின் முக்கிய அங்கமாக விளங்கினார்கள். அது இளம் வீரர்கள மீதான முதலீட்டின் அவசியத்தை அனைத்து அணிகளுக்குமே உணர்த்தியிருக்கிறது.

கார்த்திக் மற்றும் பிரசாந்த் இருவரையும் வாங்க மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என பல அணிகள் போட்டியிட்டது இந்த அணுகுமுறை மாற்றத்தை உணர்த்துகிறது.

ஐபிஎல் ஏலம் - சிஎஸ்கே

பல அணிகள் இதை முன்பே செய்திருந்த நிலையில், சிஎஸ்கே கடந்த ஆண்டு வரை அனுபவத்தையே நம்பியிருந்தது. இப்போது அதை மாற்றியிருக்கிறது.

இந்த ஏலத்துக்குப் பின் அதைப் பற்றிப் பேசிய சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளெமிங், "இந்த விளையாட்டு மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், நாங்கள் அதோடு சேர்ந்து மாற சற்று தாமதமாகியிருக்கலாம். சில நேரங்களில் வெற்றியைக் கொடுத்த கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் பிடித்துக்கொண்டே இருப்போம். ஆனால், இப்போது மாற்றை நோக்கி நகரவேண்டும் என்பதை அறிந்துகொண்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியை கடந்த சீசனின் பாதியிலேயே செய்துவிட்டோம். அது நாங்கள் அந்தப் பாதையில் தொடர உதவியது" என்று கூறினார்.

நெருக்கடி இருக்குமா?

சூப்பர் கிங்ஸ் இரண்டு இளம் வீரர்களுக்குப் போயிருப்பதை ஒருசிலர் வரவேற்றிருக்கும் நிலையில், இந்த முடிவு எந்த அளவுக்கு பிரச்னைகளை சரிசெய்ய உதவியிருக்கிறது என்று பலரும் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் அனிருதா ஶ்ரீகாந்த், "கார்த்திக், பிரசாந்த் என இரண்டு பேருமே பெரும் தொகை பெற்றிருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், இந்த பெரும் தொகை அவர்களுக்குப் பெரிய நெருக்கடியைக் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், அவர்கள் இருவரையுமே அணியில் ஆடவைக்க முடியாது. அப்படி ஆடவைத்தால் அது அணியின் ஒட்டுமொத்த பேலன்ஸுக்கு உதவாது" என்று கூறினார்.

ஐபிஎல் ஏலம் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அணுகுமுறை மாறவேண்டிய அவசியத்தை தற்போது உணர்ந்திருப்பதாகக் கூறினார் பிளெமிங்

அதேபோல், தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசிய இன்னொரு சிஎஸ்கே முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினும் அதையே கூறினார். "இருவருமே மிக மிகத் திறமையான வீரர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என்று கூறிய அவர், "ஆனால், இவர்களிடமிருக்கும் எதிர்பார்ப்பு என்ன? கார்த்திக் சர்மா தோனியின் இடத்தை நிரப்புவார் என்றும், பிரசாந்த் வீர், ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்புவார் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அது அவர்கள் மீது அதீத நெருக்கடியை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

அவருமே அவர்கள் இருவருமே பிளேயிங் லெவனில் ஆட முடியாது என்றும், பெரும்பாலும் பிரசாந்த் வீர் அணியில் இடம்பெறலாம் என்றும் கூறினார்.

அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருப்பதால் அவர்களால் நெருக்கடியை சமாளித்து சோபிக்க முடியும் என்கிறார் நானீ.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இவர்கள் இருவருக்கும் சிஎஸ்கேவை விட ஒரு சரியான இடம் வேறு கிடையாது. இவர்கள் தோனி இல்லாதபோது இவ்வளவு பெரிய தொகைக்கு வந்திருந்தால் நிச்சயம் நெருக்கடியை உணர்ந்திருக்கலாம். ஆனால், தோனி இருக்கும்போது அது அப்படியிருக்கப்போவதில்லை. களத்தில், டிரஸ்ஸிங் ரூமில் அவர்கள் தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளப்போகிறார்கள். அவர் பார்க்காத சூழ்நிலையோ, நெருக்கடியோ இல்லை. நிச்சயம் அவர்கள் இருவரையும் தோனி சிறப்பாகக் கையாண்டு தயார் செய்துவிடுவார்" என்று கூறினார்.

ஐபிஎல் ஏலம் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

பந்துவீச்சில் முழுமையாகத் தீராத பிரச்னை

சிஎஸ்கேவுக்கு டெத் பௌலிங் தான் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதப்படுகிறது. முந்தைய சீசன்களில் பதிரனா அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டார். அவர் தற்போது இல்லாதபட்சத்தில் அங்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.

"இந்த ஏலத்தில் சிஎஸ்கே அவர்களின் டெத் பௌலிங் பிரச்னையை சரிசெய்யவில்லை. ஹென்றி பிளேயிங் லெவனில் ஆடினாலுமே கூட அவர் 'நியூ பால் ஸ்பெஷலிஸ்ட்' தான். ஒருவேளை அகீல் ஹொசைனை ஆடவைத்து, அவரை பவர்பிளேவில் பந்துவீசவைத்தால், எல்லிஸின் 3 ஓவர்களை டெத்தில் பயன்படுத்தலாம்" என்று பிபிசி தமிழிடம் கூறினார் நானீ.

மேலும், "ஒருவேளை குர்ஜப்னீத் சிங்கை நம்பிக் களமிறக்கினால், அவரால் கூட அந்த இடத்தை நிரப்பமுடியும். ஸ்லோயர் பால்கள், யார்க்கர்களை நன்கு வீசக்கூடியவர். நன்கு உயரமானவர் வேறு. நடராஜனைப் போல் அவரால் செயல்படமுடியும்" என்றும் அவர் கூறினார்.

ஒருவேளை சூப்பர் கிங்ஸ் முஸ்தாஃபிசுர் ரஹ்மானை வாங்கியிருந்தால், அது சூப்பர் கிங்ஸின் டெத் ஓவர் பிரச்னைகளை சரிசெய்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

"முஸ்தஃபிசுரை வாங்கியிருந்தால், அவர் அந்த டெத் ஓவர் பிரச்னையை சரிசெய்திருப்பார். அப்படி நடந்திருந்தால் இது மிகச் சிறந்த ஏலமாக மாறியிருக்கும்" என்றும் அவர் கூறினார்.

ஐபிஎல் ஏலம் - சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடியிருந்தார் முஸ்தஃபிசுர்

தன் யூடியூப் சேனலில் பேசும்போது அதே கருத்தைக் கூறிய அனிருதா ஶ்ரீகாந்த், "சூப்பர் கிங்ஸ் முஸ்தஃபிசுருக்குப் போயிருந்தால், பெரிய சிக்கல் சரிசெய்யப்பட்டிருக்கும். அவர்கள் அந்த வேகப்பந்துவீச்சாளரை வாங்க விரும்பினார்கள். ஆனால், போதுமான தொகை இல்லை. ஒருவேளை, அந்த இரண்டு இளம் வீரர்களுக்குப் பதிலாக, ஒருவரை மட்டும் பெரிய தொகைக்கு வாங்கியிருந்தால், முஸ்தஃபிசுரை வாங்கியிருக்கமுடியும். அங்குதான் அவர்கள் தவறவிட்டார்கள்" என்று கூறினார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நம்பிக்கை தரக்கூடிய சில வீரர்களை வாங்கியிருந்தாலும், சூப்பர் கிங்ஸ் முழுமையாக தங்கள் பிரச்னைகளை தீர்த்ததா என்பது இனிதான் தெரியும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு