You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடன் கொடுக்க மறுத்த வங்கியிலேயே கொள்ளை - ரூ.13 கோடி தங்கத்தை கிணற்றில் பதுக்கிய உசிலம்பட்டி சகோதரர்கள்
கர்நாடக மாநில வங்கியில் கொள்ளையடித்த தங்கத்தை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் பதுக்கி வைத்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 மாதங்களுக்குப் பின்னர் சகோதரர்கள் போலீஸாரிடம் சிக்கியது எப்படி? திசை தெரியாமல் சென்ற விசாரணையில் முக்கிய திருப்பம் எப்படி நடந்தது என்பது குறித்து அதிர்ச்சி தரும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2024 அக்டோபர் 28 ஆம் தேதி, திங்கள்கிழமை. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு கர்நாடக மாநிலம், தாவனகரே மாவட்டத்தில் உள்ள நியாமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
வங்கிக் கிளையின் ஜன்னல் உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த சுமார் 17 கிலோ தங்க நகைகள் கொள்ளை போயிருந்தன. இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக, திங்கள்கிழமையன்று (மார்ச் 31) தாவனகரே போலீஸார் தெரிவித்துள்ளனர்.
'இது அவர்களின் முதல் குற்றம். சிறு தடயம் கூட இல்லாமல் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்' எனக் கூறுகிறார் தாவனகரே கிழக்கு மண்டல ஐ.ஜி ரவிகாந்தே கவுடா.
எஸ்.பி.ஐ வங்கி நகைக் கொள்ளை சம்பவத்தில் என்ன நடந்தது? 5 மாதங்களுக்குப் பிறகு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைதானது எப்படி?
கர்நாடக மாநிலம், தாவனகரே மாவட்டத்தில் உள்ள நியாமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடந்தது.
வங்கியின் இரும்பு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கேஸ் கட்டர் மூலம் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைத்துள்ளனர். அங்கிருந்த சுமார் 17 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளதை ஊழியர்கள் அறிந்தனர்.
வங்கியின் சிசிடிவி காட்சிகள் அடங்கிய டிவிஆர் பெட்டியை எடுத்துச் சென்றதோடு, கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் தடயங்கள் எதுவும் கிடைக்காமல் இருப்பதற்காக மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவிவிட்டுச் சென்றுள்ளதையும் வங்கி ஊழியர்கள் கவனித்துள்ளனர்.
தகவல் அறிந்து வங்கிக்கு வந்த சன்னகிரி காவல் உள்கோட்ட ஏஎஸ்பி சாம் வர்கீஸ் மற்றும் எஸ்.பி உமா பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். வங்கிக் கொள்ளை தொடர்பாக நியாமதி காவல்நிலையத்தில் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கொள்ளைக் கும்பலைப் பிடிப்பதற்காக எஸ்.பி உமா பிரசாந்த் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வங்கியில் இருந்து 8 கி.மீ தொலைவு மற்றும் 50 கி.மீ சுற்றளவில் உள்ள சிசிடிவி காட்சிகள், கொள்ளை நடந்த நேரத்தில் செல்போன் டவர்களில் பதிவான எண்கள் ஆகியவற்றை வைத்து தாவனரே போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
"தடயமே இல்லாமல் கொள்ளை"
இதேபோன்ற கொள்ளைச் சம்பவம் பத்ராவதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையிலும் நடந்திருந்ததால், 'வடமாநில கொள்ளைக் கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம்' என காவல்துறை கருதியுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த ஆண்டு நவம்பர் முதல் 2025 பிப்ரவரி வரை உத்தரப் பிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் ஐந்து தனிப்படைகள் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியுள்ளன.
"கொள்ளை தொடர்பாக கடந்த ஐந்து மாதங்களாக எந்த தடயமும் கிடைக்கவில்லை. கைரேகை உள்பட எந்த அடையாளத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை" எனக் கூறுகிறார், தாவனகரே கிழக்கு மண்டல ஐ.ஜி ரவிகாந்தே கவுடா.
செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். "கொள்ளை போன நேரத்தில் பதிவான செல்போன் எண்களை ஆராய்ந்தபோது ஒரு எண் மீது சந்தேகம் எழுந்தது. அதன்பிறகு ஒருவர் பின் ஒருவராக சிக்கினார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.
கைதான உசிலம்பட்டி சகோதரர்கள்
இந்த வழக்கில் நியாமதியில் வசிக்கும் மஞ்சுநாத் என்ற நபர் மீது காவல்துறைக்கு முதலில் சந்தேகம் எழுந்துள்ளது. அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அஜய்குமார், விஜயகுமார், பரமானந்தம் ஆகியோரின் பெயர்களை கூறியுள்ளார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஜயகுமாரும் அஜய்குமாரும் சகோதரர்கள் எனவும் கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இவர்களின் உறவினர் பரமானந்தம், நியாமதி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், அபிஷேக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கூறிய ஐ.ஜி ரவிகாந்தே கவுடா, கொள்ளையடிக்கத் தேவையான கேஸ் கட்டர், தொப்பி, கையுறை ஆகியவற்றை நியாமதி மற்றும் ஷிவமோகா பகுதியில் இவர்கள் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறினார்.
"கடன் கொடுக்காததால் கொள்ளை"
தொடர்ந்து கொள்ளை வழக்கில் கைதான விஜயகுமாரின் பின்னணி குறித்தும் செய்தியாளர் சந்திப்பின்போது ரவிகாந்தே கவுடா தெரிவித்தார்.
தனது தந்தையுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நியாமதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ள விஜயகுமார், கடந்த ஆண்டு எஸ்.பி.ஐ வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனது உறவினரின் பெயருக்குக் கடன் கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்பிறகே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்து, சில மாதங்களாக இணையதளங்கள் மூலமாக அதற்குரிய பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட தொப்பி, கையுறை, கேஸ் சிலிண்டர், ஹைட்ராலிக் கட்டர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை சவலங்கா ஏரியில் அவர்கள் வீசியுள்ளதும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிணற்றில் 17 கிலோ தங்கம்
மஞ்சுநாத்தை தொடர்ந்து கைதான சகோதரர்களிடம் போலீஸார் விசாரணையை நடத்தியுள்ளனர். அப்போது, உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள கருப்பன்பட்டி கிராமத்தில் உள்ள தங்களின் கிணற்றில் நகைகளைப் பதுக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, தமிழ்நாட்டு காவல்துறையின் உதவியுடன் கருப்பன்பட்டியில் உள்ள விஜயகுமாரின் சகோதரிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது, சாக்கு மூட்டைக்குள் தங்க நகைப் பெட்டியை வைத்து, கல்லைக் கட்டி கிணற்றில் வீசப்பட்டிருந்த சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ தங்க நகைகளை பாதுகாப்பாக மீட்டதாக செய்தியாளர் சந்திப்பின் போது ரவிகாந்தே கவுடா ஐ.பி.எஸ் தெரிவித்தார்.
"தங்க நகைகளை வைப்பதற்கான பெட்டியை விலைக்கு வாங்கி அதில் நகைகளை வைத்துள்ளனர். 35 அடி ஆழமுள்ள கிணற்றில் அந்தப் பெட்டியை போட்டு வைத்துள்ளனர்" எனக் கூறுகிறார் ஐ.ஜி ரவிகாந்தே கவுடா.
20 அடி ஆழம் அளவுக்கு தண்ணீர் உள்ள அந்தக் கிணறு கைப்பிடி இல்லாத பயன்பாடில்லாத கிணறு எனவும் அது கைதான நபர்களின் உறவினர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்துள்ளது எனவும் ரவிகாந்தே கவுடா குறிப்பிட்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட நகையில் அரை கிலோ நகைகளை மட்டும் விற்று பணம் திரட்டியதாகவும் அந்தப் பணத்தை தன்னுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முக்கியமான இந்த வழக்கில், குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்து மக்களின் நகைகளை மீட்ட தனிப்படையில் இருந்த பத்து பேருக்கு முதலமைச்சர் பதக்கமும் பணப் பரிசும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.ஜி ரவிகாந்தே கவுடா தெரிவித்தார்.
"வங்கி ஜன்னலில் சிறிய துளையைப் போட்டு 17 கிலோ தங்கத்தையும் கொண்டு வந்துள்ளனர். அவர்களின் முதல் குற்றம் இது. ஆனால், குற்றத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் போன்று துல்லியமாக செய்துள்ளனர். கைது செய்யாமல் இருந்திருந்தால் பெரிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பார்கள்" எனக் கூறுகிறார் ரவிகாந்தே கவுடா ஐ.பி.எஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு