You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு முடிவால் என்ன நடக்கும்? சுற்றுச்சூழல் நிபுணர்கள் தகவல்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ், சென்னை
மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைய உள்ள பகுதியை மறு ஆய்வு செய்யுமாறு இந்திய புவியியல் துறைக்கு (Geological survey of india) மத்திய சுரங்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
முதலமைச்சரின் கடிதத்தைத் தொடர்ந்தே மத்திய சுரங்க அமைச்சகம் இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஏல அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடர உள்ளதாக, டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு போராட்ட குழு அறிவித்துள்ளது.
அரிட்டாபட்டியில் இந்திய புவியியல் துறை மறு ஆய்வு நடத்துவதால் என்ன நடக்கும்? சூழலியல் நிபுணர்கள் கூறுவது என்ன?
- மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக 12 ஆண்டுகளாகப் போராடும் மக்கள் - தீர்வு என்ன?
- அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் - முழு விவரம்
- திபெத்தில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டம் - இந்தியாவுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்ன?
- தமிழக பொருளாதாரத்தை மன்மோகனின் தாராளமய கொள்கைகள் ஒட்டுமொத்தமாக மாற்றியது எப்படி?
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில், வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக மத்திய அரசு அறிவித்தது.
இதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் 7 ஆம் தேதி வெளியானது. மதுரை நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதற்கு அந்த பகுதியில் வாழும் மக்களும், தமிழ்நாடு அரசும், சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'திட்டம் நடைமுறைக்கு வந்தால் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி முழுமையாக அழியும்' எனக் கூறி மதுரை மாவட்டத்தில் அமைப்புகள் பலவும் போராட்டத்தில் இறங்கின.
தமிழ்நாடு அரசு விளக்கம்
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விளக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக, மத்திய அரசு தேர்வு செய்தாலும் இது தொடர்பாக அந்நிறுவனத்திடம் இருந்து எந்த விண்ணப்பமும் வரவில்லை. அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை," எனக் கூறப்பட்டிருந்தது.
"அப்படியே அனுமதி கேட்டு வந்தாலும் விண்ணப்பத்தை நிராகரிப்போம்" என தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்திருந்தார்.
"மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால் அதை ரத்து செய்வதற்கு மாநில அரசு வலியுறுத்தும்" என்று கூறிய பொன்முடி, இயற்கை வளங்களை காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்
மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்யக் கோரி, பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார்.
நவம்பர் 29-ஆம் தேதி எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், "பிரதமர் உடனே தலையிட்டு மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்," என வலியுறுத்தினார்.
கனிமங்களின் சுரங்க உரிமையை மத்திய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்த ஸ்டாலின், "நாட்டின் நலன்களுக்காக முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது," என்று கூறி துரைமுருகனின் கோரிக்கையை மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் நிராகரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ள கிராமங்களின் பல்லுயிர்ப் பெருக்க சூழலை சுட்டிக் காட்டியிருந்த ஸ்டாலின், இப்பகுதியில் சுரங்கத் தொழிலை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும், சுரங்க அனுமதியை ரத்து செய்யுமாறு மத்திய சுரங்க அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறும் பிரதமரை வலியுறுத்தியிருந்தார் ஸ்டாலின்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 9-ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய சுரங்க அமைச்சகம் சொன்னது என்ன?
கனிம சுரங்க எல்லைகளை மாற்றி அமைப்பது தொடர்பாக இந்திய புவியியல் துறைக்கு மத்திய சுரங்க அமைச்சகம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, டிசம்பர் 24-ஆம் தேதியன்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) வெளியிட்ட செய்திக் குறிப்பு, தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
டங்ஸ்டன் ஏலம் குறித்த விளக்கம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், "சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம்-1957 திருத்தப்பட்டு, புதிய சட்டம் 2023 ஆகஸ்ட் 17 அன்று அமலுக்கு வந்தது. சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி 'D'-ல் 'முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்கள்' தொடர்பான சுரங்க குத்தகைகள் மற்றும் கூட்டு உரிமங்களை ஏலம் விடுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் 11D என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக," கூறியுள்ளது.
இதன் அடிப்படையில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி உள்பட தமிழகத்தின் முக்கியமான கனிமத் தொகுதிகளை ஏலம் விடுவது குறித்து மத்திய சுரங்க அமைச்சகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை கேள்விக்கு உட்படுத்தியிருந்ததாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
"மாநில அரசு எதிர்க்கவில்லை"
முக்கியமான கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும்" என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் கோரியதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய சுரங்க அமைச்சகம், "2021-2023-ஆம் ஆண்டில் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதற்கு மாநிலத்திற்கு அதிகாரம் இருந்த போது, தமிழ்நாடு அரசு எதையும் செய்யவில்லை," என குறிப்பிட்டுள்ளது.
நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி உட்பட மூன்று முக்கியமான கனிமத் தொகுதிகள் ஏலத்துக்கு விடப்படுவதாக கூறி இந்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் மாநில அரசுக்கு மத்திய சுரங்கத்துறை ஆணையர் தகவல் அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியின் பரப்பளவில் சுமார் 10 சதவீதம் (193.215 ஹெக்டேர்) பல்லுயிர் பெருக்க தலமாக உள்ளதைப் பற்றி மாநில அரசு தெரிவித்தாலும், தொகுதியை ஏலம் விடுவதற்கு எதிராக பரிந்துரைக்கவில்லை' எனவும் மத்திய சுரங்க அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
2024 பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது முதல் 2024 நவம்பர் மாதம் ஏல முடிவு அறிவிக்கப்படும் வரையில் ஏலத்தைப் பற்றிய எந்த எதிர்ப்பையும் கவலையையும் மாநில அரசு தெரிவிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பல்லுயிர் பாரம்பரிய தலம் என்ற அடிப்படையில் டங்ஸ்டன் தொகுதியை (Block) புவியியல் துறை மறுபரிசீலனை செய்து எல்லையை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய சுரங்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
அதுவரை, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியை ஏலம் எடுத்த ஏலதாரருக்கு ஒப்பந்த கடிதம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தமிழக அரசை மத்திய சுரங்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
மத்திய சுரங்க அமைச்சகத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், தி.மு.க அரசின் நாடகங்களை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
ஏலம் தொடங்கிய பத்து மாதங்களில் ஒருமுறை கூட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே நேரம், மத்திய சுரங்கத்துறையின் அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தங்களின் கோரிக்கையை ஏற்று சுரங்க ஏலத்தை நிறுத்தி, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மறுஆய்வு முடிவால் என்ன நடக்கும்?
ஆனால், மறு ஆய்வு நடத்துவது தொடர்பாக மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
"பல்லுயிர்ப் பெருக்க மண்டலத்தைத் தவிர்த்து வேறு பகுதிகளில் சுரங்கம் தோண்டப்பட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் நிபுணரும் வழக்கறிஞருமான வெற்றிச்செல்வன். இவர், இதுபோன்ற சூழலியல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் வாதாடிய அனுபவம் கொண்டவர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை 2000 ஹெக்டேர் பரப்பளவில் நிறைவேற்ற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், அரிட்டாபட்டியில் உள்ள பல்லுயிர்ப் பெருக்க மண்டலம் என்பது 193 ஹெக்டேர் பரப்பில் வருகிறது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என அறிவிக்கப்பட்டால், அதற்கு அருகில் 10 கி.மீட்டர் வரையில் இதன் தாக்கம் (Buffer Zone) இருக்கும் என்பதால் அதனையும் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அரிட்டாபட்டியில் 193 ஹெக்டேரை சுற்றியுள்ள பத்து கி.மீ அளவிலான பரப்பைக் கணக்கிட்டால் சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவில் இந்த திட்டம் அமைய வாய்ப்பில்லை. மீதம் உள்ள 1500 ஹெக்டேரை கனிம சுரங்கத்துக்குப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.
அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகள் புராதன சின்னங்கள் நிறைந்துள்ள பகுதியாக உள்ளதால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனிமங்களை வெட்டி எடுக்கும் போது மற்ற பகுதிகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
"பாறைகளை வெடிவைத்துத் தகர்க்கும் போது மற்ற பகுதிகளில் சூழல் சீர்கேடு ஏற்படும். இந்த திட்டம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் வாய்ப்பு உள்ளதால் அரிட்டாபட்டியை சுற்றியுள்ள ஏழு மலைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்" என்கிறார் வெற்றிச்செல்வன்.
சுரங்க சட்டத் திருத்தம் பிரிவு 11(D)-ஐ சுட்டிக்காட்டிய வெற்றிச்செல்வன், "இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு முதல்கட்ட உரிமையை வழங்கியுள்ளது. அதற்கான ஒப்புதல் கடிதத்தை மத்திய அரசு வரையறுத்துள்ள நிபந்தனைகளின்படி மாநில அரசு கொடுக்க வேண்டும்" என்கிறார்.
"வனத்துறை நிலம் என்ற அடிப்படையில் பல்லுயிர்ப் பெருக்க மண்டலமான அரிட்டாபட்டி மட்டுமே வரும். மற்ற இடங்களில் கனிமம் எடுப்பதற்கு அனுமதி கொடுக்க வாய்ப்புகள் உள்ளன" எனவும் அவர் கூறுகிறார்.
"மேலூர் தாலுகாவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தமிழக அரசு சட்டம் இயற்றினால் மட்டுமே இப்பகுதியை பாதுகாக்க முடியும்" எனவும் அவர் கூறுகிறார்.
தொடரும் போராட்டம்
டங்ஸ்டன் தொகுதியை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சுரங்கத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக் குழு ஆலோசித்து வருகிறது.
பிபிசி தமிழிடம் டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ் பேசினார். "மக்கள் போராட்டம் என்பது பல்லுயிர்ப் பெருக்க தலத்தைப் பாதுகாப்பதற்காக மட்டும் இல்லை. இந்த திட்டம் வந்தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள், அழகர் கோவில் மலை, விவசாயம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்னிறுத்தி போராடி வருகின்றோம். மத்திய அரசு ஏலத்தை ரத்து செய்யும் வரையில் போராட்டம் தொடரும்" என்று அவர் கூறினார்.
"வீண் முயற்சி" - துரைமுருகன் விளக்கம்
மாநில அரசின் மீதான மத்திய சுரங்க அமைச்சகத்தின் குற்றச்சாட்டுக்கு துரைமுருகன் அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்தார்.
முதலமைச்சரின் கடிதத்துக்குப் பின்னரே சுரங்கத்துறை அமைச்சகம் திட்டத்தை மறுஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள துரைமுருகன், 'சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வதாரம் கருதி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தையே மத்திய அரசு கைவிட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
மத்திய சுரங்க அமைச்சகத்தின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அவர், 'டங்ஸ்டன் தொகுதியை ஏலம் விடுவதால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என மத்திய அமைச்சருக்கு கடந்த 2023 அக்டோபர் மாதம் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளேன்' எனக் கூறியுள்ளார்.
'மத்திய கனிமவளத் துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தில் நிலம் தொடர்பான விவரம் எதுவும் இல்லை' எனக் கூறியுள்ள துரைமுருகன், ' அரிட்டாபட்டியில் பல்லுயிர்த் தலம் உள்ளது. அதை தெரிந்தே மத்திய அரசு ஏலம் விட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது குறித்து பதில் அளித்துள்ள துரைமுருகன், "தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். ஏன் என்றால் அது வீண் முயற்சிதான் (futile exercise)" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)