காணொளி: அணு ஆயுத விவகாரம்; இரான் மீது மீண்டும் தடை அமலாகிறதா?

காணொளிக் குறிப்பு, காணொளி: அணு ஆயுத விவகாரம்; இரான் மீது மீண்டும் தடை அமலாகிறதா?
காணொளி: அணு ஆயுத விவகாரம்; இரான் மீது மீண்டும் தடை அமலாகிறதா?

இரான் மீது 2015-ஆம் ஆண்டு அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் இணைந்து விதித்த பொருளாதாரத் தடை மீண்டும் அமலாகும் சூழல் நிலவுகிறது.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, மத்திய கிழக்குக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார்.

இரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக புதன்கிழமை நியூயார்க்கில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோங்குடன் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? இரான் மீது மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படுமா? அவ்வாறு விதிக்கப்பட்டால் என்னென்ன தடைகள் அமலாகும்? சுருக்கமாகப் பார்க்கலாம்.

மசூத் பெசெஷ்கியன் - இம்மானுவேல் மாக்ரோங் சந்திப்பு

ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோங்கை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பின் இரான் மீதான சர்வதேசத் தடையை அமல்படுத்துவதைத் தடுக்க தற்போதும் வாய்ப்பிருப்பதாக இம்மானுவேல் மாக்ரோங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறினார்.

இரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதாகக் கூறிய அவர், ஒரு ஒப்பந்தம் இப்போதும் சாத்தியமாகும், நாம் விதித்துள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வது இரானைப் பொறுத்தது என்றார்.

பேச்சுவாத்தைக்கு தயாரான அமெரிக்கா

கான்கார்டியா (Concordia) உச்சி மாநாட்டில் பேசிய மத்திய கிழக்குக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் "இரானை காயப்படுத்த எந்த விருப்பமும் இல்லை" எனக் கூறினார் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது.

இரான் விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு காண முயன்று, மீண்டும் தடைகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகக் கூறினார் அவர்.

அவ்வாறு செய்ய முடியாவிட்டால், தடைகள் அமலாகும் என்றும் விட்காஃப் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

முன்னதாக, ஐநா பொதுக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் பற்றி பேசுகையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் இரான் மிகவும் ஆபத்தான ஆயுதத்தை வைத்திருக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.

ஜூன் மாதம் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு முன் இந்த இரு நாடுகளிடையே இது தொடர்பாக ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.

இரான் நிலைப்பாடு

டிரம்ப் உரையாற்றிய அடுத்த நாள் ஐநா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இரான் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க முயன்றதில்லை என்றும், இனி ஒருபோதும் உருவாக்கப்போவதில்லை என்றும் கூறினார்.

செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களிடம் பேசிய இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, இரானுக்கு "அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் இல்லை", ஆனால் "யுரேனியத்தை செறிவூட்டுவதை நிறுத்தப் போவதில்லை" என்று கூறியுள்ளார்.

"அமெரிக்காவுடன் பேசுவதில் எந்த நன்மையும் இல்லை, மாறாக அது தீங்கு விளைவிக்கும்" என்றும் கூறினார் அவர்.

அமலாகும் தடை?

2010 ஆம் ஆண்டு முதல் இரான் தனது அணு திட்டத்தை அணுகுண்டை உருவாக்கும் நோக்கத்துக்காக பயன்படுத்துவதாக சந்தேகித்ததால், அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

2015-ஆம் ஆண்டில் இரான் மற்றும் உலகின் அப்போதைய ஆறு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகியவை பல ஆண்டு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கூட்டு விரிவான செயல் திட்டம் எனப்படும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தன.

இதன் மூலம், சர்வதேச அணுசக்தி முகமைக்கு இரானின் அனைத்து அணு நிலையங்களை அணுகவும், சந்தேகத்துக்குரிய இடங்களை ஆய்வு செய்யவும் இரான் அனுமதி வழங்கியது. இதனால் இந்த தடைகள் நீக்கப்பட்டன.

2018-ல் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிய டிரம்ப், புதிய மற்றும் விரிவான ஒப்பந்தத்துக்கு இரானை கட்டாயப்படுத்த "அதிகபட்ச அழுத்த" பிரசாரத்தின் ஒரு பகுதியாக மீண்டும் பொருளாதார தடைகளை இரான் மீது விதித்தார்.

2015-ல் மேற்கொண்ட ஒப்பந்தத்தைப் பின்பற்றவில்லை என இரான் மீது புதிய தடைகள் விதிப்பதற்கான 30 நாள் நடைமுறையை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த ஆண்டின் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கின. இது செப்டம்பர் 27-ஆம் தேதி முடிவடையவுள்ளது.

என்னென்ன தடைகள் விதிக்கப்படும்?

இந்தத் தடை மீண்டும் விதிக்கப்பட்டால், 2006 முதல் 2010 வரை கொண்டுவரப்பட்ட ஆறு தீர்மானங்கள் மூலம் ஐநா பாதுகாப்பு சபையால் விதிக்கப்பட்ட தடைகள் மீண்டும் கொண்டு வரப்படும்.

அதன்படி, யுரேனியம் செறிவூட்டல் மற்றும் மறு செயலாக்கம் தடை, அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப மாற்றங்களுக்கான தடை, இரானியர்கள் மற்றும் இரானிய நிறுவனங்களின் சொத்து முடக்கம் மற்றும் இரானியர்கள் பயணத்துக்கான தடை, தடை செய்யப்பட்ட பொருட்களைக் கண்காணிப்பதற்காக இரானிய விமானம் மற்றும் சரக்குக் கப்பலை பரிசோதிக்க உலக நாடுகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் ஆயுதத் தடை போன்ற தடைகள் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு