இஸ்ரேலின் 'இரும்பு டோம்' அமைப்பை ஊடுருவி தாக்கிய இரான் - நிலவரம் என்ன?

காணொளிக் குறிப்பு,
இஸ்ரேலின் 'இரும்பு டோம்' அமைப்பை ஊடுருவி தாக்கிய இரான் - நிலவரம் என்ன?

இஸ்ரேல் - இரான் இடையேயான மோதல் 4வது நாளை எட்டியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.

திங்களன்று இரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மூன்று நாட்களாக இரான் நடத்திவரும் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் தேசிய அவசரகால சேவை தெரிவித்துள்ளது.

மறுபுறம், நான்கு நாட்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் 90 சதவீதம் பேர் பொதுமக்கள் என்றும் இரான் கூறுகிறது.

இந்த தாக்குதல்களின் தொடக்கப் புள்ளி என்ன? தற்போது எத்தகைய கட்டத்தை நோக்கி இந்த விவகாரம் நகர்ந்துள்ளது?

கடந்த வெள்ளியன்று இரானின் அணு சக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சமீபத்திய பதற்றங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

Operation Rising lion என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஹொசைன் சலாமி, இரானின் 6 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு பேசும்போது, "இரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இஸ்ரேலின் தற்காப்புக்காக இது மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கை ஆபத்தை முற்றிலும் நீக்கும் வரை, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" என்றார்.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக True promise 3 என்ற பெயரில் இஸ்ரேஸ் மீது இரான் தாக்குதலை தொடுத்தது.

இரானின் ஏவுகணைகளில் சிலவற்றை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பான Iron Dome இடைமறித்து அழித்தபோதிலும், சில ஏவுகணைகள் இந்த பாதுகாப்பு அரணை கடந்து இஸ்ரேலை தாக்கி சேதம் ஏற்படுத்தியது.

இரு தரப்புக்குமான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என இரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் எச்சரித்திருந்தார்.

இரானின் பதில் தாக்குதலுக்கு ஆதரவாக, அந்நாட்டில் பலர் பேரணி சென்றனர்.

இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் 4வது நாளை எட்டியுள்ளது. இரான் புரட்சிக்கர காவல்படையின் உளவுப்பிரிவுத் தலைவர் முகமது காஸிமி உள்ளிட்டோர் ஞாயியன்று நடப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

திங்களன்று இஸ்ரேலின் மீது இரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஹைஃபா, டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இரானின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலில் சிக்கியுள்ளனர்.

இரானின் தாக்குதல் காரணமாக டெல் அவிவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மறுபுறம், இஸ்ரேலின் தாக்குதலால் டெஹ்ரானில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவசரகாலத்தில் தங்குவதற்கு எவ்வித தங்குமிடமும் இல்லை என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். பலரும் டெஹ்ரானைவிட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர். இதனால் அங்குள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு