You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - சீனா நெருங்கி வருவதில் உள்ள மிகப்பெரிய சவால்
- எழுதியவர், விகாஸ் பாண்டே
- பதவி, இந்தியா ஆசிரியர்
- எழுதியவர், ஸ்டீபன் மெக்டொனல்
- பதவி, சீனா செய்தியாளர்
இந்தியாவின் பார்வை
சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு குறுகிய கால, ஆனால் மோசமான மோதலில் ஈடுபட்டன.
இந்த மோதலில் மூன்றாவது நாடு ஒன்றுக்கு மறைமுக தொடர்பு இருந்தது- அது சீனா. பாகிஸ்தானின் ஆயுதப் படைகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகள் உள்ளிட்ட உபகரணங்களை பெருமளவில் பயன்படுத்தின.
இந்திய நிலைகள் குறித்து சீனா பாகிஸ்தானுக்கு "நேரடி தகவல்களை" வழங்கியதாக, டெல்லியில் உள்ள மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியா பகிரங்கமாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை, ஆனால் இந்தியா சீனாவுடன் உறவுகளை இயல்பாக்கும் பாதையில் தொடர வேண்டுமா என்று பலரையும் கேள்வி எழுப்ப வைத்தது.
ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்தில், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தொலைதூரத்தில் உள்ள வாஷிங்டன் டி.சி.யில் எடுக்கப்பட்ட முடிவுகளால் ஆசியாவின் இரு பெருநாடுகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகள் வேகமடைந்துள்ளன.
டிரம்ப் நிர்வாகம் இந்தியாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகளுக்கு 50% வரி விதித்து, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுத்ததற்காக டெல்லி தண்டிக்கப்படுவதாக கூறியது.
இந்த நம்பகமான கூட்டாளியின் திடீர் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கு இரண்டு தெளிவான தேர்வுகள் இருந்தன.
முதலாவது, அழுத்தத்துக்கு அடிபணிந்து ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது. ஆனால், ரஷ்யா "எல்லா காலங்களிலும்" நல்ல கூட்டாளியாக இருப்பதாலும், அழுத்தத்துக்கு அடிபணிவது இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வலிமையான தலைவர் என்ற பிம்பத்துக்கு பொருந்தாததாலும், இந்தியா அதை மறுத்துவிட்டது.
இரண்டாவது, நிலைப்பாட்டில் உறுதியாக நின்று மாற்று வாய்ப்புகளைத் தேடுவது. இந்தியா தற்போதைக்கு இதை தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
உங்கள் அண்டை நாடு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமும், உலகளாவிய உற்பத்தி மையமாகவும் இருக்கும்போது, மற்ற இடங்களைத் தேடுவது நடைமுறைக்கு உகந்ததாகும்.
இந்த பின்னணியில், நரேந்திர மோதி தியான்ஜினில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.
இரு தரப்புகளின் அறிக்கைகளிலும் விரிவான விவரங்கள் இல்லை, ஆனால், 2.8 பில்லியன் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக தங்கள் முரண்பாடுகளை களைய ஒத்துழைப்பதாக உறுதியளித்தன.
இந்த சந்திப்பின் உடனடி முடிவாக, இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது மற்றும் விசா வழங்கல் செயல்முறையை எளிதாக்குவது ஆகியவை உள்ளன.
ஆனால், "யானை மற்றும் டிராகன்" (இந்தியா மற்றும் சீனா) ஒன்றிணைவதாக உறுதியளித்தாலும், இரு நாடுகளும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு முன் பெரிய தடைகளை நீக்க வேண்டியுள்ளது.
இந்தியா - சீனா நெருங்கி வருவதில் உள்ள மிகப்பெரிய சவாலாக எல்லைப் பிரச்னை இருக்கிறது. நரேந்திர மோதி 2014இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியா-சீனா உறவில் தனிப்பட்ட கவனம் செலுத்தி, 2018 வரை அண்டை நாட்டுக்கு ஐந்து முறை பயணம் செய்தார்.
ஆனால், 2020 எல்லை மோதல் இந்த வேகத்தைத் தடை செய்தது, நரேந்திர மோதி மீண்டும் சீனாவுக்கு பயணிக்க ஏழு நீண்ட ஆண்டுகள் ஆகியுள்ளன.
இரு நாடுகளும் தங்கள் எல்லைப் பிரச்னைகளை எவ்வாறு கையாள்கின்றன என்பதே உறவுகள் மேலும் முன்னேற்றம் அடைவதற்கு திறவுகோலாக இருக்கும்.
இரு நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான படைகள் இன்னும் சர்ச்சைக்குரிய எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன - ஆனால், இந்த நிலைமையை தணிப்பதற்கு அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
இந்த வார இறுதி சந்திப்புக்குப் பிறகு, சீன மற்றும் இந்திய அறிக்கைகள் எல்லையில் அமைதியை பேணுவது மற்றும் "முரண்பாடுகளை சண்டைகளாக மாற்றாமல்" இருப்பது பற்றி பேசின.
இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை, 99 பில்லியன் டாலர்களுக்கு (73 பில்லியன் பவுண்டுகள்) மேல் உயர்ந்து வருவது ஒரு பிரச்னையாக உள்ளது.
இரு நாடுகளும் பல துறைகளில் ஒருவருக்கொருவர் உயர் வரிகள் மற்றும் கட்டணங்களை விதித்துள்ளன.
சீனா இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் கொண்ட சந்தையை சீன பொருட்களுக்கு திறக்க விரும்பும், ஆனால் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாமல் டெல்லி அதைச் செய்ய தயங்கும்.
கடந்த ஆண்டு கசானில் நரேந்திர மோதி, ஷியை சந்தித்தபோது தொடங்கிய சீனாவுடனான நட்பான அணுகுமுறை, டிரம்ப் வரிகளால் வேகமடைந்திருக்கலாம், ஆனால் இந்தியாவின் நிதர்சன நிலைமைகள் மாறவில்லை.
நரேந்திர மோதி-ஷி சந்திப்பு இந்தியாவின் "மூலோபாய சுயாட்சி" கொள்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது, ஆனால் இது இந்தியாவுக்கு மேலும் புவிசார் அரசியல் சவால்களை ஏற்படுத்தும்.
இந்தியா இந்த ஆண்டு பிற்பகுதியில் குவாட் (ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கியது) உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மன்றம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு ஒரு சவாலாகக் கருதப்பட்டது.
இந்த மாநாட்டில் டிரம்ப் கலந்துகொள்வாரா என்பது தெளிவாகவில்லை, ஆனால், அவர் கலந்துகொண்டு சீனாவுக்கு எதிராக ஏதாவது கூறினால், டெல்லி-பீஜிங் இடையேயான புதுப்பிக்கப்பட்ட ஒத்திசைவு உடனடியாக சோதிக்கப்படும்.
இந்தியா சீனாவுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும் கருதப்படும் பல பன்முக மன்றங்களில் உள்ளது.
அடுத்த சில மாதங்களில் டெல்லி தனது மூலோபாய சுயாட்சியை எவ்வாறு கையாள்கிறது என்பது இந்தியா-சீனா உறவுகளின் திசையை பெரிதும் பாதிக்கும்.
தற்போதைக்கு, இந்தியா-அமெரிக்கா உறவுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. ஒரு டிரம்ப் உதவியாளர் சமீபத்தில் ரஷ்யா-யுக்ரேன் மோதலை "நரேந்திர மோதியின் போர்" என்று அழைத்தார்.
மே மாதத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் நிறுத்தம் ஏற்பட்டதில் டிரம்ப் எந்தப் பங்கும் வகிக்கவில்லை என்று டெல்லி தொடர்ந்து மறுத்து வருகிறது - இது அமெரிக்க அதிபருக்கு ஒரு தொடர்ச்சியான எரிச்சலாக மாறியுள்ளது.
இருப்பினும், இந்தியா அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி வரிகளை விதிக்காமல், மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு கதவைத் திறந்து வைத்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.
சீனாவுடன் நெருக்கமாகச் செல்வது அமெரிக்காவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகளுக்கு உதவுமா அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தக் கேள்வி வரவிருக்கும் மாதங்களில் டெல்லியிலும் அதற்கு அப்பாலும் புவிசார் அரசியல் விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தும்.
சீனாவின் பார்வை
நரேந்திர மோதியைச் சந்தித்தபோது, ஷி ஜின்பிங், இந்தியா-சீனா உறவுகளை குறிக்க தனக்கு பிடித்தமான முழக்கத்தைப் பயன்படுத்தினார்: "டிராகனும் யானையும் ஒன்றிணைய வேண்டும்."
"இந்த மாற்றத்தின் காலகட்டத்தில்," உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் நண்பர்களாகவும், நல்ல அண்டை நாடுகளாகவும் இருப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோதியின் பயணம், இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு 50% வரை வரி விதித்த டொனால்ட் டிரம்பின் வரி விதித்ததுடன் ஒத்துப்போகிறது.
இது நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்துவதால், இந்தியா மற்ற வணிக கூட்டாளிகளைத் தேடும்.
இதை விட சிறந்த இடத்தைத் தேட வேண்டாம் என்று ஷி கூறலாம், ஏனெனில், பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றங்களைத் தொடர்ந்து சேதமடைந்த இந்தியா-சீனா உறவுகளை மீண்டும் கட்டமைக்க அவரது நிர்வாகம் முயற்சிக்கிறது.
அவர்களின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளைப் பார்த்தால், தியான்ஜின் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் நரேந்திர மோதியின் பங்கேற்பு பலனளித்திருப்பதாக தெரிகிறது.
ஷியிடம் நரேந்திர மோதி கூறியதாக வெளியிடப்பட்ட கருத்துகள், மறுபுறம் இருந்து வந்தவற்றை விட மிகவும் குறிப்பிட்டவையாக இருந்தன.
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் தங்கள் பதற்றமான உறவை சரிசெய்ய ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு இப்போது உள்ளது.
டொனால்ட் டிரம்பின் வரி தாக்குதல் இந்தியாவை அமெரிக்காவிலிருந்து விலக்கியிருக்கிறது என்றும், இந்த பெரிய பொருளாதார போட்டியாளருக்கு மற்ற கூட்டாண்மைகள் தேவை என்றும் சீனாவின் அதிபர் அறிவார்.
கணிசமான தடைகள் இன்னமும் இருக்கின்றன.
இந்தியாவின் முக்கிய விரோதியான பாகிஸ்தானுக்கு சீனாவின் ஆதரவு, எல்லா வகையான தொடர்புகளும் தேக்கநிலையில் இருப்பது, இரு அரசாங்கங்களின் கோபமான பேச்சுகள் (பல ஆண்டுகளாக) உள்ளிட்டவை ஆசிய பெருநாடுகளுக்கு இடையே சந்தேகத்துக்கிடமான சூழலை உருவாக்கியுள்ளது, மற்றும் அவர்களின் உயரமான மலை எல்லைப் பிரச்னை இரு தரப்பிலும் தேசியவாத உணர்வுகளைத் தூண்டியிருக்கிறது.
எவ்வாறாயினும், கடைசி விஷயத்தை பொறுத்தவரை இந்த சந்திப்பு அழுத்தத்தை குறைத்திருப்பதாக தெரிகிறது.
கடந்த வியாழக்கிழமை, சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான சர்ச்சை நிறைந்த எல்லையில் மோதல்களை நிறுத்துவதற்காக இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பற்றி பேசினார்.
"இரு தரப்புக்கும் வெற்றி தரும் ஒத்துழைப்பு" மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவது பற்றி பேசினார்.
தற்போது நரேந்திர மோதி சீனாவில் இருப்பதன் குறியீட்டு முக்கியத்துவத்தையும், டிரம்ப் வரிகள் நடைமுறைக்கு வரும்போது அவர்கள் கைகுலுக்கி அருகருகே நிற்கும் படங்கள் ஒரு வலிமையான பிரசார கருவியாக இருக்கும் என்பதையும், இது ஒரு பன்முக கூட்டமாக இருப்பதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் ஷி அறிவார்.
இவர்கள் இருவருடன் விளாடிமிர் புதினுடன் மட்டுமல்லாமல், துருக்கி (நேட்டோ உறுப்பினர்), சௌதி அரேபியா (அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி), இரான் (அமெரிக்காவின் முக்கிய எதிரி), மற்றும் கத்தார், எகிப்து, பாகிஸ்தான் போன்ற பிற எஸ்சிஓ நாடுகளும் இணையும்.
இவை அனைத்தும் தலைநகர் பீஜிங்கின் மையத்தில் ஒரு பிரமாண்டமான ராணுவ வலிமையை காட்சிப்படுத்தும் அணிவகுப்பை சீனா நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு