பள்ளியில் அடுக்கி வைக்கப்பட்ட உடல்கள்; அச்சத்தில் நடுங்கும் குழந்தைகள் – அரசின் அதிரடி முடிவு

ஒடிஷாவில் 3 ரயில்கள் மோதிய விபத்து நேரிட்டு ஒரு வாரம் கடந்துவிட்ட பிறகும், அங்கே துயரம் கொஞ்சமும் குறையவில்லை.

அந்தத் துயரத்தோடு சேர்த்து, விபத்து நடந்த பகுதியில் வாழும் மக்களை இன்னொரு விஷயமும் தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது.

கடந்த 2ஆம் தேதி இரவு, மரண ஓலங்களும், உதவி கோரும் அழுகுரல்களுமாக விபத்து நடந்த இடம் மயானபூமியைவிடக் கொடூரமாக இருந்தது.

மீட்புப் படைகளும் அப்பகுதி மக்களும் சேர்ந்து பாதிப்புக்கு உள்ளானவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்களின் உடல்களை அருகிலிருந்த அரசுப் பள்ளியான பஹாநாகா மேல்நிலைப் பள்ளியில் வைத்திருந்தனர்.

இந்தக் கோர விபத்தின் தாக்கம் அப்பகுதியில் இருந்தவர்களை மீளமுடியாத அதிர்ச்சியிலும், துயரத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

சடலங்கள் வைக்கப்பட்ட பள்ளிக்கு வர அஞ்சும் குழந்தைகள்

இந்தத் துயர்மிகு சம்பவத்தின் வேதனைக்கு நடுவே, அதுதொடர்பான இன்னொரு விஷயமும் அந்த ஊர் மக்களைத் தூக்கமிழக்கச் செய்துகொண்டிருக்கிறது. இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அதே பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில் பெற்றோர் தயக்கம் காட்டுவதாகக் கூறப்பட்டது.

மாணவர்களும் அப்பள்ளியின் வளாகத்திற்கு மீண்டும் செல்ல அச்சம் கொண்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய பள்ளி மாணவர்கள் சிலர், "பயங்கரமான ரயில் விபத்துக்குப் பிறகு, எங்கள் பள்ளி முழுவதும் உடல்கள் நிறைந்திருந்தது. எங்கள் பள்ளி வளாகத்தில் சிதறியிருந்த அந்த உடல்களின் பயமுறுத்தும் காட்சிகளை மறக்க முடியாது," என்றனர்.

பாஹாநாகா பள்ளியில் 567 மாணவர்கள் படிக்கின்றனர். ரயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது.

இதில் உளவியல் ரீதியான பிரச்னைகள் இருப்பதாக ஆசிரியர்களும் தெரிவித்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரமிளா ஸ்வைன், "ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளிக்கு வரவே மாணவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களுடைய பயத்தைப் போக்க பூஜைகள் மற்றும் சில சடங்குகளை நடத்த பள்ளி நிர்வாகம் திட்டமிட்டது," என்றார்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளதால் விபத்தில் இறந்தவர்கள் முதலில் இந்தப் பள்ளி கட்டடத்தில் வைக்கப்பட்டு பின்னர் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான சடலங்கள் கிடந்த கட்டடத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயாராக இல்லை. குழந்தைகளும் அங்கு ஆன்மா இருப்பதாகக் கூறி அச்சத்தில் வர மறுக்கின்றனர்.

குழந்தைகளை பள்ளிக்கு வர வைக்க அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன?

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், “ரயில் விபத்திற்கு முன், குழந்தைகள் இந்தப் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்தார்கள். ஆனால் இந்த விபத்துக்குப் பிறகு குழந்தைகள் பள்ளிக்கு வர மறுக்கின்றனர்.

இங்கு இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆன்மா இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு ஒன்றும் இல்லை என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்கவேண்டும்,” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற பாலாசோர் மாவட்ட ஆட்சியர் தத்தாத்ராயா பௌசாஹேப் ஷிண்டே, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், பிற பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களைச் சந்தித்து பேசினார்.

பின்னர், ஏஎன்ஐ செய்தி முகமைக்குப் பேட்டியளித்த அவர், “மாநில அரசின் உத்தரவுப்படி, இந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டேன்.

எப்படியிருந்தாலும் இது பழைய கட்டடம் தான். அதுவும் ஆச்பெஸ்டாஸ் கூரையுடன் உள்ளது. மாணவர்கள் அச்சம் அடையாத வகையில், புதிய பள்ளி வளாகம் சீரமைக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்," என்று கூறினார்.

அதன்படி, பஹாநாகா மேல்நிலைப் பள்ளியின் சில பகுதிகளை இடித்து மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: