You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணாமலை தருமபுரி கிறிஸ்தவ தேவாலயத்தில் என்ன செய்தார்? எதிர்ப்பும், வழக்கும் ஏன்?
தருமபுரியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயன்றதாகவும் கூறி பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அங்கே என்ன நடந்தது?
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் யாத்திரை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த யாத்திரை கடந்த ஜனவரி 8ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இரு இடங்களிலும் நடப்பதாக இருந்தது.
இதற்காக அண்ணாமலை சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்தின் பொம்மிடி வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் உள்ள பி.பள்ளிப்பட்டியில் இருக்கும் புனித லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அண்ணாமலை அன்று மாலை 5.50 மணி அளவில் அவர் ஆலயத்திற்கு வந்து லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், குறுக்கிட்டு அவரைத் தடுத்து நிறுத்தினர்.
"எங்கள் மக்களைக் கொன்றார்கள், எங்கள் தேவாலயங்களை இடித்தார்கள்" என்று சில இளைஞர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
அவர்களிடம் சென்று பேசிய அண்ணாமலை, "அண்ணே, நான் சர்ச்சுக்கு வருவதில் என்ன பிரச்னை?" என்று கேட்டார். "அங்கு நடந்தது மத பிரச்னை அல்ல. இரு பழங்குடியினர் இடையிலான பிரச்னை. நீதிமன்ற உத்தரவின் பேரில் புதிதாக ஒரு சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து கொடுத்ததை மற்றொரு பிரிவினர் எதிர்த்தார்கள்.
இரு பிரிவுகளிலுமே இந்துக்களும் இருக்கிறார்கள், கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். இதில் மத அரசியல் செய்யக்கூடாது. இதில் மத அரசியல் செய்வது யார் எனப் புரிந்துகொள்ள வேண்டும். சண்டை நடந்தது அவர்களுக்குள். இதில் மாநில அரசுக்கு என்ன தொடர்பு?
உயர் நீதிமன்ற ஆணையின்படி இது அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு முழு துணை ராணுவப் படையும் உள்ளே சென்றது. எல்லோரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். 2009இல் இலங்கையில் ராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையில் பிரச்னை நடந்தது. 1,60,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்றைக்குப் பேசுபவர்கள் எங்கே போனார்கள்? ஆகவே மதத்தை கோவிலுக்குள்ளும் தேவாலயங்களுக்கு உள்ளும் கொண்டு வராதீர்கள்," என்றார்.
அதற்குப் பதிலளித்த இளைஞர், "மதத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. யார், என்ன என்ற சுய அறிவோடு பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய பதில் நிறைய படிச்சிட்டேன். மத்திய அரசு அவர்களைத் தடுக்கவில்லை," என்றார்.
இதையடுத்து, "அரசியல் கட்சி ஆளும் தி.மு.க.காரன் பேசுற மாதிரி பேசக்கூடாது" என்றார் அண்ணாமலை. இதற்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில், கோபமடைந்த அண்ணாமலை, "சர்ச் உங்க பேரில் இருக்கா? எல்லா மக்களுக்கும் உரிமை இருக்குல்ல. தடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. 10,000 பேரைக் கூட்டி வந்து தர்ணா பண்ணா என்ன பண்ணுவீங்க," என்று கேள்வியெழுப்பினார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதற்குப் பிறகு லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவித்த அண்ணாமலை, தேவாலயத்திற்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். இந்தக் காட்சிகள் எல்லாம் வீடியோவாக பதிவு செய்யபட்டன, பின்னர் சமூக ஊடகங்களில் பரவின.
இதற்குப் பிறகு இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ட்வீட்டில், "இன்றைய தினம், தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள, தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும், நலமுடன் வாழ அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டோம்," என்று கூறி, புகைப்படங்களையும் பகிர்ந்தார்.
இதற்குப் பிறகு பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பொம்மிடி காவல்துறையில், புகார் அளித்தார். அந்தப் புகாரில், 10,000 பேருடன் வந்து தர்ணா செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு அண்ணாமலை மிரட்டியதாக புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியைக் குலைக்கத் தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் எல்லோரும் வரலாம் என்ற நிலையில், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வருவதற்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கும் இளைஞர் கார்த்திக்கிடம் பேசினோம்.
அவர், "கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் எல்லோரும் வரலாம் என்பது உண்மைதான். தேவாலயத்தில் இருந்து யாரும் அவரை அழைக்கவில்லை. உடன் இருக்கும் சிலர் ஏற்பாடு செய்துதான் அவர் வந்தார்.
ஆனால், பிற மாநிலங்களில், குறிப்பாக மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடக்கும்போது பா.ஜ.க. எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பதால் அதைப் பற்றிக் கேட்டோம். அதனால்தான் அவர் வரக்கூடாது என்று சொன்னோம். இதை அரசியல் ரீதியாகச் செய்யவில்லை. இப்போது அவர் பேசிய வார்த்தைகளை வைத்து அவர் மீது புகார் கொடுத்திருக்கிறேன்," என்று தெரிவித்தார்.
ஆனால், கடவுளை வழிபடச் சென்றவரைத் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழிபடச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அராஜகம் என்கிறார் பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி.
"எல்லோருக்கும் சென்று வழிபடக் கூடிய பொதுவான ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் யாரையும் வரக்கூடாது எனத் தடுப்பது அராஜகம். அப்படித் தடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், வழிபடச் சென்றவர் மீது நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம்?
அண்ணாமலை கிறிஸ்தவ மதத்தைப் போற்றத்தானே அங்கே சென்றார்! ஆனால், அவர் மீது எதற்காக வழக்குப் பதிந்திருக்கிறார்கள்? உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தை அழிப்பேன் என்கிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?" எனக் கேள்வி எழுப்புகிறார் நாராயணன் திருப்பதி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)