You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்: பாகிஸ்தான் கூறும் காரணம் என்ன?
இரான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இரண்டு நாட்கள் கழித்து, இன்று காலை, பாகிஸ்தான் இரான் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் அணு ஆயுதங்கள் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சிக்கலாகி வருகிறது. இரானில் ஆயுதக்குழுவினர் பதுங்கியிருக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது.
பாகிஸ்தான் இரானில் நடத்திய தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாக இரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எல்லைப் பகுதியில், பயங்கரவாதிகள் தஞ்சமடைய இடம் கொடுத்திருப்பதாக இரு நாடுகளுமே ஒருவரையொருவர் பல காலமாக குற்றம் சாட்டிவருகின்றனர். பாகிஸ்தானுடனான எல்லையில் சரவன் நகரில் பல குண்டு வெடிப்புகளின் சத்தம் கேட்டதாக புதன்கிழமை மாலை இரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்களை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
“இன்று காலை, பாகிஸ்தான் இரானின் சிஸ்தான்-பலுச்சிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்கள் மீது திட்டமிடப்பட்ட மற்றும் குறிப்பிட்ட துல்லியமான ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டது.
'மர்க் பார் சர்மாச்சார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் புலனாய்வு தகவல்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரான் நடத்திய தாக்குதல்களை மிகக் கடுமையாக பாகிஸ்தான் விமர்சித்திருந்தது. அதன் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள ஆயுதக்குழுகளை இலக்காகக் கொண்டே தனது தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் கூறியது.
ஆனால் அதை மறுத்த பாகிஸ்தான், இரண்டு குழந்தைகள் உட்பட தனது குடிமக்கள் இந்தத் தாக்குதலில் பலியானதாகக் கூறியது.
இரானில் தீவிரவாதிகளின் இருப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் இரானிடம் பல முறை தனது கவலைகளை வெளிப்படுத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக, இரானுடனான உரையாடல்களில், தீவிரவாதிகள் குறித்த தனது கவலைகளை பாகிஸ்தான் வெளிப்படுத்தி வந்தது. தங்களை சர்மாச்சார்கள் என்று அழைக்கும் பாகிஸ்தான் வம்சாவழி தீவிரவாதிகளுக்கு இரானுக்குள் கண்காணிக்கப்படாத இடங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களாக மாறியுள்ளன என்பதை பாஸ்கிஸ்தான் இரானுக்கு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தீவிரவாதிகளின் இருப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் கொண்ட பல ஆவணங்களையும் பாகிஸ்தான் பகிர்ந்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கூறிய தகவல்கள் அடிப்படையில், இரான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் பாகிஸ்தான் அதன் காரணமாகவே, இந்த சர்மாச்சார்கள் என்று அழைக்கப்படுபவர்கள், எந்த தண்டனையும் இல்லாமல் அப்பாவிகளான பாகிஸ்தான் மக்களை தாக்கிக் கொண்டே இருந்தனர் என்றும் கூறுகிறது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலுm, “இன்று காலை எடுக்கப்பட்ட நடவடிக்கை, இந்த சர்மாச்சார்கள் என்று அழைக்கப்படுபவர்களால் நடத்தப்படவிருந்த பெரிய அளவிலான பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த நம்பகமான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிராகத் தனது தேசிய பாதுகாப்பைப் உறுதி செய்வதற்கான பாகிஸ்தானின் உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்துவதாகும்.
இந்த மிகவும் சிக்கலான நடவடிக்கையின் வெற்றி, பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் திறனுக்கு ஒரு சான்று. தனது மக்களின் பாதுகாப்பையும், அவர்களின் உயிரையும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்காத பாகிஸ்தான் அதைப் புனிதமான மற்றும் மதிப்பிற்குரிய ஒன்றாகக் கருதுகிறது.
பாகிஸ்தான் இரான் இஸ்லாமிய குடியரசின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டை முழுமையாக மதிக்கிறது. இன்றைய நடவடிக்கையின் ஒரே நோக்கம், பாகிஸ்தானின் சொந்த பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதே ஆகும். அது மிக முக்கியமானது மற்றும் சமரசம் செய்ய முடியாதது ஆகும்," என்று குறிப்பிட்டுள்ளது.
அதோடு, பொறுப்புமிக்க சர்வதேச சமூக உறுப்பினராக, பாகிஸ்தான் ஐநா சாசனத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை உயர்த்திப் பிடிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"உறுப்பு நாடுகளின் பிரதேச ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாகிஸ்தான் மதிக்கிறது. அதேநேரம் பாகிஸ்தான் தனது இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுக்கும் செயல்களை அனுமதிக்காது.
ஐக்கிய நாடுகளின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு எங்கள் நியாயமான உரிமைகளைப் பயன்படுத்தி இதைச் செய்வோம்.
இரான் ஒரு சகோதர நாடு. பாகிஸ்தான் மக்கள் இரான் மக்கள் மீது மிகுந்த மதிப்பும், பாசமும் கொண்டுள்ளனர். தீவிரவாதம் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் எப்போதும் வலியுறுத்தியுள்ளோம். மேலும் கூட்டு தீர்வுகளைத் தேட தொடர்ந்து முயல்வோம்,” என்று கூறப்பட்டுள்ளது.
‘பாகிஸ்தான் தாக்கிய பகுதியில் ஆயுதக்குழுவினர் இல்லை’
இரானிய ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானுக்குள் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் இருப்பு இல்லை என்றும் பாகிஸ்தான் பொதுமக்கள் மீதுதான் தாக்குதல் நடத்தியுள்ளது எனவும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற இயக்கத்தின் செயதித் தொடர்பாளர் ஆசாத் பலுச் தெரிவித்துள்ளார்.
“இரானிய ஆக்கிரமிப்பில் உள்ள பலுசிஸ்தானுக்குள் (மேற்கு பலுசிஸ்தான்) பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் பிற ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
ஆனால் பாகிஸ்தானின் கூற்றை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மறுக்கிறது. மேற்கு பலுசிஸ்தானுக்குள் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அப்பாவி பலுச் மக்களை பாகிஸ்தான் இழந்துள்ளது,” என அந்த ராணுவ அமைப்பு கூறியுள்ளது.
பலூச் நிலத்தில் பாகிஸ்தான் மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளையும் சம ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதுவதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் உறுதியாகத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து ஆதரவைப் பெற்று மற்றவருக்கு எதிராகப் போராடுவது பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் கொள்கையாக இருந்ததில்லை என்றும் அது கூறுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)