சாதி சர்ச்சை: சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் என்ன நடந்தது?
சாதி சர்ச்சை: சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் என்ன நடந்தது?

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி கூறிய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க. பிரமுகர் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது?

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்தது என்ன?

கண்ணய்யன், கிருஷ்ணன், விவசாயிகளுக்கு நெருக்கமானவரான கண்ணன், வழக்கறிஞர் அரங்க. செல்லதுரை, வழக்கறிஞர் பிரவீணா ஆகியோர் காலை ஒன்பதரை மணியளவில் அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸோடு அந்த அலுவலகத்தைச் சென்றடைந்திருக்கின்றனர். அமலாக்கத் துறை அலுவலகத்தில் என்ன நடந்தது என விவரிக்கிறார் விவசாயிகளுடன் சென்ற வழக்கறிஞரான அரங்க. செல்லதுரை.

"நாங்கள் ஒன்பதரை மணியளவில் அங்கு சென்று அமர்ந்ததும் அதிகாரிகள் ஒவ்வொருவராக அலுவலகத்திற்கு வந்தனர். பிறகு நாங்கள் அங்கிருந்தவர்களிடம் நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதைச் சொன்னோம். ஆனால் இந்த விவசாயிகளைப் பார்த்தவுடனேயே அங்கிருக்கும் துணை இயக்குநருக்கு பொறிதட்டியிருக்கிறது. ஏதோ தவறாக நடந்திருக்கிறது என உணர்ந்துவிட்டார். கொஞ்ச நேரத்தை கடத்திவிட்டு, அப்படியே அனுப்பிவிடலாம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தொடர்ந்து இந்த நோட்டீஸிற்காக வந்திருக்கிறோம் என்பதைச் சொன்னோம். "

"முதலில் வழக்கறிஞர்களான எங்களையும் வைத்துக்கொண்டு அவர்களது ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்று சொன்னோம். அதனை அவர்கள் ஏற்கவில்லை. தனியாகத்தான் விசாரிப்போம் என்றார்கள்."

"எங்களை விசாரித்துவிட்டு, அவர்களது முடிவு என்ன என்பதைச் சொல்லவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டோம். அவர்கள் முரண்பட்டே பேசினார்கள். இதையடுத்து வழக்கறிஞர் இருவரையுமாவது இணை இயக்குநரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால், அது முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இது பிரச்சனையாகப் போய்க்கொண்டிருக்கவே, நாங்கள் 100ஆம் நம்பரை அழைத்து பிரச்சனையைச் சொன்னோம். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து காவல்துறையினர் வந்தார்கள். அவர்களும் இது குறித்துக்கேட்டபோது, யார் வந்தாலும் வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்."

"இதற்குப் பிறகு டிஜிபி அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கே டிஜிபி இல்லை. ஆகவே வேறு ஒரு அதிகாரியிடம் நடந்தவற்றைச் சொல்லி, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவுசெய்யும்படி சொன்னோம். அவர்களிடம் புகாரை அளித்துவிட்டு வந்துவிட்டோம். அதற்குப் பிறகு, பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு திடீரென இந்த விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது" என்கிறார் அரங்க. செல்லதுரை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)