You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பசிக்காமல் மன மகிழ்ச்சிக்காக சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு 80:20 வாழ்க்கை முறை பற்றி தெரியுமா?
- எழுதியவர், ஒனூர் எரம்
- பதவி, பிபிசி உலக சேவை
உணவுடன் நமக்கு இருக்கும் உறவு சிக்கலானது. பெரும்பாலும் ஆரோக்கியமற்றதும் கூட.
ஒரு நிறைவான, திருப்திகரமான விருந்துக்கு பிறகும் சிலர் மகிழ்ச்சிக்காக தின்பண்டங்களை சாப்பிடுவார்கள். அவ்வாறு பசியின்றி மன மகிழ்ச்சிக்காக மட்டும் சாப்பிடுவதை நிபுணர்கள் ‘ஹெடோனிக் உணவுப்பழக்கம்’ (hedonic eating) என்கின்றனர்.
"பசி ஏற்படாமல், மன மகிழ்ச்சிக்கு உணவுகள் மீது விருப்பம் ஏற்பட்டு உணவு உட்கொள்ள உந்தப்படுகிறார்கள்," என்று ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள். 'ஹெடோனிக் உணவுமுறை’ என்னும் பெயர் 'ஹெடோன்’ என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. அதன் அர்த்தம் "இன்பம்" என்பதாகும். மேலும் கிரேக்க புராணங்களில் இன்பத்திற்கான கடவுளை 'ஹெடோன்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
பசி உணர்வு ஏற்பட்டு நாமாக உணவு உட்கொள்ளும் போதும் இயல்பாகவே அதில் சிறிதளவேனும் 'மகிழ்ச்சி' என்ற உணர்வும் சம்பந்தப்பட்டிருக்கும். ஆனால் கலோரிகள் தேவைப்படாத நிலையில் மகிழ்ச்சிக்காக மட்டும் உணவு உட்கொள்வது பெரும்பாலும் 'உணவு எளிதில் கிடைக்கும்' சூழலில் இருக்கும் சமூகத்தினர் மத்தியில் காணப்படும் உணவு பழக்கம் ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் பசியின்மை நிலையில் சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருப்பர்.
ஹெடோனிக் பசி என்றால் என்ன?
நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் இருந்து பெறும் கலோரிகள்/ஆற்றல் மூலம் நமது உடல் செயல்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவை விட அதிக கலோரிகள் எரிக்கப்படும் போது, நம் உடலில் பசி உணர்வு ஏற்படும். அதாவது நான் சாப்பிட்ட உணவு முழுவதும் ஆற்றலாக மாறி நம் உடலால் செலவழிக்கப்பட்ட பின்னர், மீண்டும் ஆற்றல் தேவைக்காக பசி ஏற்படும். இந்த செயல்பாடு நம் வயிற்றில் இருக்கும் ஒரு ஹார்மோன் அமைப்பு மூலம் நடக்கிறது. வயிறு காலியாக இருக்கும் போது, நம் மூளைக்கு சமிக்ஞை அனுப்பப்படும். அதன் பின்னர் பசி உணர்வு ஏற்படும். இதைத்தான் பொதுவாக 'பசி' என்போம்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, "ஹெடோனிக் பசி" என்பது நாம் உடல் ரீதியாக பசியை உணர மாட்டோம், ஆனால் மன மகிழ்ச்சிக்காக சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் நமக்குள் ஏற்படுகிறது.
பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பசி மற்றும் ஆற்றல் சமநிலை பிரிவின் பேராசிரியர் ஜேம்ஸ் ஸ்டப்ஸ் கூறுகையில், "கிட்டத்தட்ட அனைவருக்கும் ஹெடோனிக் உணவுப் பழக்கம் உள்ளது, அதே சமயம், ஒவ்வொருவரும் மன மகிழ்ச்சிக்காக இலக்கு சார்ந்த பல நடத்தைகளை கொண்டுள்ளனர். நம்மில் சிலருக்கு, `உணவு’ பெரும் மகிழ்ச்சி அளிக்கும் ஆதாரமாக இருக்கும். மற்றவர்களை விட அதிகமாக உணவு மீது நாட்டம் கொள்வார்கள்” என்கிறார்.
ஸ்டப்ஸ் மேலும் கூறுகையில், "இன்பத்துக்காக உண்பது மட்டுமின்றி, பிற உணர்ச்சிகள், மன அழுத்தம் மற்றும் அசௌகரியத்தை தவிர்ப்பது உள்ளிட்ட காரணங்களோடும் உணவுப் பழக்கத்துக்கு தொடர்புள்ளது. இது "உடலின் பசி மற்றும் ஹெடோனிக் பசிக்கு இடையிலான வேறுபாட்டை குறைக்கிறது" என்று கூறுகிறார்.
இவ்வாறு, இன்பத்துக்காக தூண்டப்படும் பசியால் நாம் எதை சாப்பிடுகிறோம்? ஒரு கிண்ணம் முழுக்க கீரைக் கலவையா? அல்லது அவித்த காய்கறி கலவையா, இல்லை முளைகட்டிய தானியங்களா? கண்டிப்பாக இவற்றில் எதுவும் இருக்காது..
"இன்பத்துக்காக துண்டப்படும் பசியில், நாம் இயல்பாகவே கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மீது தான் நாட்டம் கொள்வோம். ஏனெனில் அவை அதிக ஆற்றல் மூலங்களை (calories) கொண்டுள்ளன" என்று, லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் பசி மற்றும் உடல் பருமன் ஆராய்ச்சி குழுவின் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் பெத் மீட் கூறுகிறார்.
"இந்த உணவுகள் வழங்கும் ஆற்றல் மற்றும் அவற்றை உண்ணும் போது அவை வழங்கும் சிற்றின்பத்துக்கு நாம் ஈர்க்கப்படுகிறோம், மேலும் இந்த அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்ணும் உந்துதல் ஏற்படும் போது அது உடலின் பசியில் ஏற்பட்ட உந்துதலா அல்லது ஹெடோனிக் பசியால் ஏற்பட்ட உந்துதலா என்று வேறுபடுத்துவது கடினமாக இருக்கும்" என்றார்.
உடல் பருமன் ஏற்படும் அபாயம்
இன்றைய காலக்கட்டத்தில், கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் எளிதில் கிடைக்கிறது. நம்மை சுற்றி அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. எனவே இவை மீதான நாட்டமும் அதிகரித்து, ஹெடோனிக் உணவு பழக்கத்தை அதிகரிக்கிறது. மேலும் ஹெடோனிக் உணவு பழக்கத்தில், ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
"நாம் தற்போது மிகவும் சுவையான, எளிதாக பெறக்கூடிய, உடனடியாக உண்ணக் கூடிய துரித உணவுகளால் சூழப்பட்டுள்ளோம். இது நவீன சமுதாயத்தில் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. இன்றைய சூழலில், உலகில் உள்ள எட்டு பேரில் ஒருவருக்கு உடல் பருமன் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.” என்கிறார் பேராசிரியர் ஸ்டப்ஸ்.
தீர்வு என்ன?
நிபுணர்களின் கூற்றுப்படி, 'நடைமுறை கோட்பாட்டில் மகிழ்ச்சிக்காக சாப்பிடுவதில் தவறேதும் இல்லை, ஏனெனில் அது மகிழ்ச்சியான உணர்வைத் தூண்டுகிறது, ஆனால் அதிகப்படியாக உணவு உட்கொள்வது, குறிப்பிட்ட உணவுக்கு அடிமையாதல் மற்றும் உடல் பருமன் ஆகிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.’ என்கின்றனர்.
துருக்கியில், ஜனவரி 2024 இல் மனித ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், உடல் பருமனுடன் வாழும் மக்களுக்கும் `ஹெடோனிக் பசி’ க்கும் தொடர்பு உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டிருந்தது.
"அதிக எடை கொண்ட நபருக்கு ஹெடோனிக் பசி அதிகரிக்கையில், அவர்களின் தன்னம்பிக்கை குறைந்து தன்னை தானே வெறுக்க தொடங்குகின்றனர். எடையின் அடிப்படையில் சுய-கழிவிரக்கமும் அதிகரிக்கும்" என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே ஹெடோனிக் உணவு பழக்கத்தால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
"மகிழ்ச்சிக்காக உணவு உட்கொள்பவர்கள் எடை குறையும் போது அவர்களின் ஹெடோனிக் பசியும் குறையும் என்கிறது ஆராய்ச்சி. உணவுகள் மீது நாட்டம் கொள்வதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சிக்கலாம்” என்று டாக்டர் மீட் கூறுகிறார்.
உடல் எடையை குறைப்பது, புதிய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை வளர்த்துக் கொள்வது அல்லது புதிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆகியவை பலருக்கு எளிதாக இருக்காது. ஆனால் அவற்றை ஒரு மகிழ்ச்சியான "ஹெடோனிக்" செயல்பாடாக மாற்ற ஒரு வழி இருக்கிறது” என்கிறார் பேராசிரியர் ஸ்டப்ஸ்.
மேலும் பேசிய அவர், "உதாரணமாக, எடை குறைப்புக்காக நீங்கள் உங்கள் உடல் பயிற்சியை அதிகரிக்க விரும்பினால், உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தேர்வு செய்யுங்கள். அது உடற்பயிற்சி கூடமாக இருக்கலாம், நண்பர்களுடன் நடப்பதாக இருக்கலாம் அல்லது நடனமாக கூட இருக்கலாம். இன்பமளிக்கும் எந்த செயல்பாடுகள் உங்கள் வாழ்க்கையை ஊக்குவிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதும், உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களுடன் உங்கள் புதிய பழக்கங்களை சீரமைக்க முயற்சிப்பதும் முக்கிய அம்சமாகும்." என்றும் கூறினார்.
"அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும், ஹெடோனிக் உணவு பழக்கத்தின் மாற்றம், கவனத்துடன் சாப்பிட வேண்டும். அதற்காக பச்சை காய்கறிகளை மட்டும் சாப்பிட வேண்டும் என்பது பொருள் அல்ல. உணவு உட் கொள்ளலுக்கு மிகவும் சீரான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும்” என்று பேராசிரியர் ஸ்டப்ஸ் அறிவுறுத்துகிறார்.
"ஹெடோனிக் உணவு பழக்கத்தை நாங்கள் நிறுத்த விரும்பவில்லை. அந்த இன்பத்தை அதிக ஆரோக்கியமான உணவுக்கு திருப்பிவிட விரும்புகிறோம். அதீத சுவையான உணவுகள் தரும் இன்பத்தில் சமரசம் செய்யாமல், உணவுடன் மேலும் நேர்மறையான உறவை வளர்த்துக் கொள்ள முடியும் "
"மக்கள் 80:20 என்ற வாழ்க்கை முறை நோக்கி செல்வது அதீத பலனளிக்கும். உங்கள் உணவில் 80% குறைந்த கலோரிகள் கொண்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் அது உங்களுக்கு 20% பிடித்த உணவுகளை உட்கொள்ளும் வெகுமதிகளை அனுபவிக்க உதவுகிறது. அதாவது, முக்கியமான சமூக சந்தர்ப்பங்கள் மற்றும் நிகழ்வுகளில் விருந்துகளை தயக்கம் இன்றி உட்கொள்ள முடியும்" என்கிறார் பேராசிரியர் ஸ்டப்ஸ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)