போதை மருந்து கொடுத்து படம் பிடிக்கப்படும் வல்லுறவு சம்பவங்கள் - பாலியல் தொழிலின் நிழல் உலகம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முகமது கடோபி & லைலா மகமூத்
- பதவி, மொகடிஷு & லண்டன்
சோமாலியாவின் தலைநகரமான மொகடிஷுவில் உள்ள இரண்டு பெண்கள், உள்நாட்டுப் போர் காரணமாக வன்முறை அச்சுறுத்தலுக்கு நடுவிலுள்ள ஒரு நகரத்தில் பாலியல் தொழிலாளிகளாக நிழல் உலகுக்குள் எப்படி தள்ளப்பட்டார்கள் என்பதைப் பற்றி பிபிசியிடம் பேசினார்கள். அவர்களுடைய அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களின் பெயர்களை மாற்றியுள்ளோம்.
மொகடிஷு நகரத்தின் துடிப்பான, சலசலப்பு நிறைந்த லிடோ கடற்கரை, கடலோர சொகுசு விடுதிகள், உயர்மட்ட உணவகங்கள், தங்குமிடங்கள் என்று பல்வேறு ஈர்ப்புகளோடு உள்ளன.
ஆனால், அதற்கு அருகிலேயே பார்ட்டி, போதைப்பொருள், பாலியல் காரணங்களால் தூண்டப்படும் வன்முறை என்று வேறுவிதமான காட்சிகளும் உள்ளன.
இந்த நகரத்தின் தோற்றத்திலிருந்து மறைக்கப்பட்ட பகுதியில் சிக்கியுள்ள பெண்கள் இளம் வயதினர், ஆதவற்றவர்கள்.
மூன்று ஆண்டுகளாக பாலியல் தொழிலாளியாக இருந்து வரும் 22 வயதான ஃபர்தௌசா, மொகடிஷுவின் வார்திக்லி மாவட்டத்தில் தோட்டாக்கள் துளைத்த அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் சிவப்பு திரைகள் நிழலாடிய இருண்ட அறையில் அமர்ந்துள்ளார்.
சமையல் அடுப்பின் சத்தத்திற்கு நடுவே மெல்லிய குரலில் அந்த இளம் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார்.
தனது 19 வயதில் வீட்டை விட்டு வெளியேறியதாக ஃபர்தௌசா விளக்குகிறார். இது சோமாலிய சமுதாயத்தில் ஓர் அரிதான நிகழ்வு. அங்கு இளம் பெண்கள் பொதுவாக திருமணத்திற்கு முன்பு குடும்பத்தைவிட்டுப் பிரிய மாட்டார்கள்.
இருப்பினும், வீட்டில் நடக்கும் துஷ்பிரோயகம், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களோடு தவிர்க்கமுடியாத வேறுபாடுகள் ஏற்படுவது இத்தகைய விஷயங்களுக்கு வழிவகுக்கின்றன. மேலும், இது வளர்ந்து வரும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
“ஆரம்பத்தில் நான் வீட்டைவிட்டு ஓடுவது குறித்து நினைக்கவில்லை. ஆனால், என் மாற்றாந்தாயுடன் என்னால் தொடர்ந்து வாழ முடியவில்லை,” என்று ஃபர்தௌசா கூறுகிறார்.
“நான் சிறுவயதாக இருந்தபோது என் அம்மா உயிரிழந்தார். அதற்குப் பிறகு அவரை என் தந்தை இரண்டாவது மனைவியாக வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் பல ஆண்டுகளாக என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். இருப்பினும் என் தந்தை எப்போதும் அவரது பக்கமேதான் இருப்பார்.”
வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, ஃபர்தௌசா புதிய நண்பர்களை உருவாக்கிக்கொண்டு, தனது தேவைகளைத் தானே கவனித்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். ஆனால், “அவர்கள் என்னைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்று நினைத்தேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான் புரிகிறது. அவர்கள் எனது உண்மையான நண்பர்கள் இல்லை."
அவர் மார்ஃபின், டிராமாடோல், பெத்திடின் போன்ற ஓபியாய்டு போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, லிடோ கடற்கரையில் நடந்த நிழல் உலக பார்ட்டிகளில் இணைந்தார். அங்கு அவருக்கு பாலியல் தொழில் அறிமுகமானது.
ஃபர்தௌசா விரைவில் மொகடிஷுவின் இருண்ட நிழல் உலகில் சிக்கிவிட்டார். அவர் ஹோட்டல்களுக்கும் அந்நியர்களின் வீடுகளுக்கும் ஒதுக்குப்புறமான இடங்களுக்கும் பாலியல் தொழிலுக்காகச் சென்றார்.
ஆனால் இப்போது அவர் போதுமான வாடிக்கையாளர்களை அறிந்து வைத்திருக்கிறார். அவருடைய ஃபோனுக்கு நேரடியாகத் தொடர்புகொள்ளும் நபர்களை நம்பலாம்.
“என் கைபேசி ஒலிக்கும் வரை நான் காத்திருப்பேன். அழைப்பு வந்ததும் ஆண் வாடிக்கையாளர்களுடன் உடலுறவு கொள்ள வெளியே செல்கிறேன். மற்ற நேரங்களில், சில பெண் நண்பர்கள் அவர்களது வட்டத்தில் உள்ள ஆண் வாடிக்கையாளர்கள் கேட்பதாக எனக்கு அழைப்பார்கள்.”
“போதைப்பொருள் வாங்க எனக்குப் பணம் தேவைப்பட்டது”

பட மூலாதாரம், LEYLA JEYTE
வாழ்வின் அனைத்து தரப்பில் இருந்தும் பல்வேறு வாடிக்கையாளர்களை அவர் கையாள்கிறார்.
“இந்த ஆண்கள் முதலில், என் பெண் நண்பர்களுடைய ஆண் நண்பர்களாக இருந்தனர். பிறகு எனக்குத் தெரியாத வெவ்வேறு ஆண்களுடன் உறவு கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறியது. நான் பாதிக்கப்படக் கூடியவளாக இருந்தேன். இந்த நகரத்திலுள்ள பல இளம் பெண்களைப் போலவே எனக்கும் போதைப்பொருள் வாங்கப் பணம் தேவைப்பட்டது,” என்கிறார் ஃபர்தௌசா.
பாலியல் தொழிலின் ரகசியமான இயல்பு காரணமாக, இந்தத் தொழில் குறித்த அதிகாரபூர்வ தரவு எதுவுமில்லை. ஆனால், ஃபர்தௌசா மற்றும் அவரைப் போன்ற பிறரது சாட்சியங்கள் இந்த இளம் பெண்கள் சிக்கியுள்ள மோசமான சூழ்நிலை குறித்த ஒரு பார்வையை வழங்குகிறது.
ஹோடன் இரண்டரை ஆண்டுகளாக பாலியல் தொழிலாளியாக இருந்து வருகிறார். ஃபர்தௌசாவை போலவே, 23 வயதான இவரும் வீட்டைவிட்டு ஓடிப்போய் மொகடிஷுவின் நிழல் உலக வாழ்க்கைக்குள் மூழ்கிவிட்டார். அவரும் இப்போது எந்த நிதியுதவியும் இல்லாத, இவர்களைப் போலவே வீட்டைவிட்டு ஓடி வந்த சக இளம் பெண்களில் ஒருவராக இருக்கிறார்.
தங்களுடைய இருப்பிடத்திற்கு வெளியே கால்பந்து விளையாடும் குழந்தைகளுடைய சத்தம் ஒருபுறம் ஒலித்துக்கொண்டிருக்க, அதற்கு நடுவில் நிலையான, அமைதியான குரலில் தன் கதையைக் கூறினார்.
“நான் பெரும்பாலான இரவுகளை ஹோட்டல்களில் கழிக்கிறேன். இங்குள்ள இளம் பெண்கள் பலருடைய நிலையும் இதுதான். அங்கு நாங்கள் அனைத்து வகையான ஆண்களையும் சந்திக்கிறோம். அதில் சிலரோடு செல்லும்போது நிலைமை மிகவும் மோசமாகிவிடும்,” என்று ஹோடன் கூறுகிறார்.
சோமாலியாவில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது என்பதால், இந்த இளம் பெண்களில் பலரும் அதிகாரிகளிடம் எந்த உதவியும் கிடைக்காமல் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
காவல்துறை, பெண்கள் மற்றும் மனித உரிமைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளிடமிருந்து இதுகுறித்தும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள பிற பிரச்னைகள் குறித்தும் கருத்துகளைக் கோரியது. ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், LEYLA JEYTE
ஹோடனின் கூற்றுப்படி, “பல முறை சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி தங்கள் உடலில் காயங்களுடன் வருகிறார்கள். அதேநேரத்தில் மற்ற இளம் பாலியல் தொழிலாளர்கள் அவர்கள் நம்பிச் செல்லும் வாடிக்கையாளர்களாலேயே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள்.”
ஃபர்தௌசாவுக்கும் இது வன்முறைக்கு வழிவகுத்தது.
“ஆரம்பத்தில், நான் ஆண்களுடன் அவர்கள் உடலுறவு கொள்ள விரும்பும் இடங்களுக்குச் சென்றேன். ஆனால், ஒரு நாள் இரவு நான் தாக்கப்பட்டேன். ரத்தப்போக்குடனும் என் முகத்தில் காயங்களுடனும் நான் திருப்பி அனுப்பப்பட்டேன். அவர்கள் சொன்ன விலையோடு உடன்படாததால் அது நடந்தது,” என்று அவர் கூறுகிறார்.
“அப்போதிருந்து நான் எந்த ஆண்களுடனும் ஒதுக்குப்புறமான இடங்களுக்குச் செல்வதில்லை. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி, அது மிகவும் ஆபத்தானது. ஹோட்டல்களுக்கு செல்வது பாதுகாப்பானது. அங்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. ஒருவேளை ஏதாவது நடந்தாலும் உதவிக்கான எங்கள் அழுகையும் கதறல்களும் வெளியே கேட்கும்.
பாலியல் தொழிலில் ஈடுபடும் அனைத்து பெண்களுமே அதிர்ஷ்டசாலிகள் இல்லை. சில ஆண்களுடன் அவர்களது வீடுகள் அல்லது ஒதுக்குப்புறமான இடங்களுக்குச் செல்லும் பாலியல் தொழிலாளிகள், சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர்,” என்கிறார் ஃபர்தௌசா.
அந்தச் சம்பவங்கள் சில நேரங்களில் படம்பிடிக்கப்படுவதாகவும் பிறகு அந்தப் பெண்கள் அதை வைத்து மிரட்டப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
“அந்தப் பெண்கள் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு அவர்களுக்கு அடிபணிய வைக்கப்படுகிறார்கள்.”

பட மூலாதாரம், LEYLA JEYTE
‘அன்புக்குரியவர்களை எதிர்கொள்வது கடினம்’
பாலியல் தொழிலாளிகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்ட பிறகு இப்படி படம்பிடிக்கப்படுவது நடக்கலாம் என்கிறார் ஹோடன்.
“அவர்கள் மறுத்தால், அவர்களை அடித்து, உடல்ரீதியாகத் துன்புறுத்துகிறார்கள். வீடியோவை அவர்களுக்கு எதிரான ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில், இளம் பெண்களை இன்னும் மோசகமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களுடைய வீடியோவை வெளியே பகிர்வதாகவும் கூறப்படுகிறது. இது டிஜிட்டல் உலக அச்சுறுத்தலின் ஒரு வடிவம்.”
பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல் 4இன் சமீபத்திய செய்தி, பாலியல் தொழிலின் விளிம்புகளுக்கு அப்பால், சோமாலிய பெண்களிடையே பெருமளவில் நடத்தப்படும் அச்சுறுத்தல்களின் வடிவங்களை ஆவணப்படுத்தியுள்ளது.
“எனக்குத் தெரிந்த பல இளம் பெண்களுக்கு இது நடந்தது. பெரும்பாலானவர்கள் அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்பதை அனைவருமே அறிவோம். நாங்கள் நீண்ட காலமாக இந்த வாழ்க்கைக்குள் இருக்கிறோம்,” என்கிறார் ஹோடன்.
2019 முதல் 2020 வரை பாலியல் வன்முறை பெரியளவில் அதிகரித்திருப்பதாக ஐ.நா அறிக்கை கண்டறிந்துள்ளது. நெருக்கடிமிக்க பகுதிகளில் இத்தகைய துஷ்பிரயோகம் அதிகரிப்பதாகக் கூறுகிறது. “பலவீனமான சட்டம் குற்றவாளிகள் சுதந்திரமாக நடக்க அனுமதிக்கிறது. மேலும் இதில் பாதிக்கப்படுபவர்கள் சிறிதளவு ஆதரவைக்கூட பெறுவதில்லை,” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் சோமாலிய சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளார்கள். ஏனெனில், தடைசெய்யப்பட்ட வாழ்க்கை முறை என்பதாலேயே அவர்களை ஒதுக்கி வைக்கின்றனர்.
“சோமாலியாவில், எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆதரவளிக்கும் எந்த அமைப்பும் இல்லை. நாங்கள் யாரையும் அணுக முடியாது. சமூக அழுத்தம் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. அதனால்தான் பாதிக்கப்படும் பெண்கள் பலருக்கும், குறிப்பாக அவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தால் உதவி கிடைப்பதே இல்லை,” என்கிறார் ஃபர்தௌசா.
சோமாலியாவில் பல பெண்ணிய அமைப்புகள் உள்ளன. ஆனால் பிபிசி தொடர்புகொண்டபோது அவர்கள் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
பல பெண்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வழிமுறைகளும் அமைப்புகளும் இருந்தால் இதுபோன்ற ஆபத்தான தொழில்களில் ஈடுபடமாட்டார்கள் என்று ஹோடனும் ஃபர்தௌசாவும் வலியுறுத்துகின்றனர்.
“பல இளம் பெண்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையானதில் இருந்து மீண்டுவரப் போராடுகிறார்கள். இது அவர்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலைமைக்குத் தள்ளுகிறது. அவர்களில் பலருக்கும் இரவில் தூங்குவதற்குக் கூட இடமில்லை,” என்கிறார் ஃபர்தௌசா.
“அவர்கள் லிடோ கடற்கரை மற்றும் அந்த நகரத்தின் பிற பகுதிகளைச் சுற்றியுள்ள தெருக்களில் தூங்குகிறார்கள். மற்றவர்கள் தூங்குவதற்கு ஓர் இடம் வேண்டும் என்பதற்காக ஆண்களுடன் செல்கிறார்கள். அவர்கள் பாலியல் காரணங்களுக்காக இன்னும் அதிகமாகச் சுரண்டப்படுகிறார்கள்.”
ஃபர்தௌசா அவருக்குப் பின்னால் பார்க்கிறார். அங்கு ஓர் இளம் பெண் கையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அமினா, ஒரு முன்னாள் பாலியல் தொழிலாளி. கர்ப்பமான பிறகு அவர் அந்தத் தொழிலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.
“அமினா எப்போதும் என்னிடம் இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லுமாறு கூறுகிறார். ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல. இந்த நிலையில் நமது அன்புக்குரியவர்களை எதிர்கொள்வது கடினம். நான் என் குடும்பத்தை மூன்று ஆண்டுகளாகப் பார்க்கவில்லை.”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












