திரெளபதி முர்மூ: 370வது பிரிவு, முத்தலாக், ஆதிசங்கரர் பற்றி என்ன சொன்னார் குடியரசு தலைவர்?

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, அரசமைப்பின் 370 பிரிவு ரத்து செய்த நடவடிக்கை, முத்தலாக் நடைமுறைக்கு தடை போன்ற அரசாங்கத்தின் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவை கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றும்போது பேசினார்.

சம்பிரதாய வழக்கத்தின்படி ஆண்டின் முதலாவது கூட்டம் என்பதால், குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ நாடாளுமன்ற இரு அவை கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

இந்திய குடியரசு தலைவராக பதவிக்கு வந்த பிறகு அவர் ஆற்றும் முதல் நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட உரை இதுவாகும்.

இன்றைய உரையில், தொடர்ந்து இரண்டு முறை நிலையான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்த குடிமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

"எனது அரசாங்கம் எப்போதுமே நாட்டின் நலனையே முதன்மையாகக் கொண்டிருக்கிறது. கொள்கை-வியூகத்தை முற்றிலுமாக மாற்றும் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறது," என்று அவர் கூறினார்.

எல்லைக்கு அருகே இந்தியாவை இலக்கு வைக்கும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான துல்லிய தாக்குதல் எனப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் தீவிரவாதத்தை வேரோடு ஒடுக்குவது வரை அரசாங்கம் உறுதியாகச் செயல்படுகிறது என்று அவர் பாராட்டினார்.

திருவள்ளுவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்தது முதல் முத்தலாக் தடை விவகாரம் வரை ஒரு தீர்க்கமாக முடிவெடுக்கக் கூடிய அரசாங்கமாக நாட்டு மக்களால் இந்த அரசு அங்கீகரிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.

"உலகில் எங்கெல்லாம் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறதோ, அந்த நாடுகள் மிகப்பெரிய நெருக்கடியால் சூழப்பட்டுள்ளன. ஆனால் தேசிய நலனுக்காக எனது அரசாங்கம் எடுத்த முடிவுகளால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா சிறந்த நிலையில் உள்ளது," என்று குடியரசு தலைவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு நிலையானது, அச்சமற்றது, உறுதியானது என்று கூறிய குடியரசு தலைவர், "பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் எனது அரசு செயல்பட்டு வருகிறது. எனது அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி உழைத்துள்ளது. எனது முயற்சியின் பலனாக. கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கம் அமல்படுத்திய பல அடிப்படை வசதி திட்டங்கள் 100 சதவீதம் மக்களை எட்டியுள்ளன அல்லது அந்த இலக்குக்கு மிக அருகில் உள்ளன," என்று திரெளபதி முர்மூ தெரிவித்தார்.

இன்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடர் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியாக பிப்ரவரி 10ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் பகுதி மார்ச் 12ஆம் தேதி மீண்டும் கூடி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும்.

முன்னதாக, குடியரசு தலைவரின் உரையைத் தொடர்ந்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2024ஆம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும்," என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இது தேர்தல் பரப்புரை அறிக்கை"

குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவின் உரைக்கு எதிர்க்கட்சிகள் பரவலாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

"இந்தியாவில் குடியரசு தலைவர் பதவியில் இருப்பவர், தேர்தலில் போட்டியிட மாட்டார். ஆனால் பாஜக அரசு தனது அடுத்த தேர்தல் பிரசாரத்தை அவர் மூலம் நடத்துவது போல் தெரிகிறது. அவரது முழு பேச்சும் தேர்தல் உரையாகவே இருந்தது," என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி எம்.பி சு. வெங்கடேசன், "பிரதமர் மோதியின் எட்டாண்டு கால ஆட்சியில் பல மருத்துவ கல்லூரிகளை திறன்துள்ளதாக குடியரசு தலைவர் கூறுகிறார். ஆனால், மதுரையில் மத்திய அரசு வாக்குறுதியளித்த எய்ம்ஸ் எங்கே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நிகழ்வை ஆம் ஆத்மி கட்சி, பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் புறக்கணித்தனர்.

"நாங்கள் அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டோம். ஏன் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் அது குறித்து விசாரிக்கவில்லை" என்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: