You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திராவில் அதிசய கிராமம்: டி.வி., செல்போன், மின்சாரமே வேண்டாம் என தவிர்க்கும் மக்கள்
மலைகளுக்கு அருகில், சிறிது தூரத்தில் காட்டுப்பகுதி, நடுவில் ஒரு மண் சாலை, பசுமையான வயல்வெளிகள், பனை மரங்கள் என்று பசுமையான சூழலில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. இங்கு இணையம், தொலைக்காட்சி, தொலைபேசி என்று எதுவும் இல்லை. அவ்வளவு ஏன், இங்கு மின்சாரம் கூட கிடையாது.
அப்படி இருக்கும்போது, இந்தக் கிராமத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
விசாகப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ தொலைவில், வடக்கு ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள கூர்மா கிராமம் எந்த நவீன வாழ்க்கை முறையும் இல்லாமல் உள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஹீரா மண்டலுக்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் கிருஷ்ண மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்தக் கிராமம் வேத வர்ணாஷ்ரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மக்கள், தாங்கள் அமைக்கும் கிராமங்களுக்கு, கிருஷ்ணர், விஷ்ணு தொடர்பான பெயர்களையே சூட்டுகிறார்கள்.
மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கூர்மா கிராமத்தில் தற்போது 50 வீடுகள் வரை உள்ளன. வீடுகள் மேலும் கட்டப்பட்டு வருகின்றன. சிலர் தங்களது குடும்பங்களுடன் இருக்கிறார்கள். சிலர் தனியாக வசிக்கிறார்கள்.
‘புதிய முறை அல்ல’
இங்கு பாரம்பரிய மற்றும் ஆன்மிக வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
“குஜராத், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இதுபோன்ற கிராமங்கள் உள்ளன. எங்களைப் போன்ற கிருஷ்ண தத்துவத்தைப் பின்பற்ற விரும்பும் மக்கள் அனைவரும் சேர்ந்து இதுபோன்ற கிராமங்களை உருவாக்குவோம்.
இங்கு வசிப்பவர்களுக்கு வெளி உலகத்துடன் தொடர்பு இல்லை. ‘உணவு, தங்குமிடம், உடை’ ஆகியவை இயற்கை வழியில் பெறப்பட்டவை. நாங்கள் பாலிஷ் செய்யாத(கையால் அரைத்த) அரிசியை உண்கிறோம். தேவையான துணிகளைத் தறியில் நெய்துகொள்கிறோம்,” என்கிறார் திரிபங்கா ஆனந்த் தாஸ். இவர் கூர்மா கிராமம் நிறுவப்பட்டதில் இருந்து அந்தக் கிராமத்தில் வசித்து வருகிறார்.
ஏன் மின்சாரம் இல்லை?
கூர்மா கிராமத்திற்கு அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் உள்ளது. மின்சார வசதி கிடைக்க வாய்ப்பு இருந்தும்கூட, கூர்மா கிராம மக்கள் அதற்குப் பதிலாக விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.
“மின்சாரம் அமைத்தால் வசதிகள் பெருகும். அவற்றுக்காகப் பணம் செலவழிக்க வேண்டும். பணம் வேண்டுமானால் மீண்டும் வாழ்க்கையின் சலசலப்புக்குப் பழக வேண்டும். அதனால்தான் நாங்கள் அந்த வசதிகளில் இருந்து விலகியுள்ளோம். இந்த அணுகுமுறை எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று ஹரிதாஸ் விளக்கினார்.
இவர் முன்பு ரஷ்யாவில் பணியாற்றினார். பிறகு இந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
பண்டமாற்று முறை
ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு கிருஷ்ண பஜனையுடன் தொடங்குகிறது. பிறகு அவர்கள் அன்றைய வேலையில் ஈடுபடுவார்கள். பிறகு, அவர்கள் தினசரி வேலைகளில் ஈடுபடுகின்றனர். அனைவரும் பாரம்பரிய உடைகளை அணிகின்றனர். பேன்ட், சர்ட் அணிய மாட்டார்கள்.
“நாங்கள் நெசவு மூலம் எங்கள் ஆடைகளை உருவாக்குகிறோம். துணிகளைத் துவைக்க இயற்கை முறை சாறுகளைப் பயன்படுத்துகிறோம். தண்ணீர் வேண்டும் என்றால், கிணற்றில் இருந்து எடுக்க வேண்டும்.
உணவுக்கு வீட்டின் முன்பாக, வயல்வெளிகளில் காய்கறிகளைப் பயிரிடுகிறோம். நாங்கள் தேவையான பொருட்களைப் பண்டமாற்று செய்துகொள்கிறோம்,” என்று கிராமவாசி நரோட்டம் தாஸ் பிபிசியிடம் கூறினார்.
'யார் வேண்டுமானாலும் வரலாம்'
இந்த கிராமம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அனைத்து வீடுகளும் சுட்ட மண் ஓடுகள், பனை ஓலைகளால் ஆனவை. இங்கு சிமென்ட் பயன்படுத்தப்படுவது இல்லை.
வெல்லம் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது. கடிதம் மூலம் தகவல் கொடுத்து, யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம். யார் வந்தாலும் இத்தகைய வீடுகளில்தான் குடியிருக்க வேண்டும். பிறகு, கட்டப்படும் வீடுகளில் அவர்கள் கட்டட வேலைக்காரர்களாகப் பணி செய்ய வேண்டும் என்பது விதி.
இங்கு வரும் அனைவருக்கும் அனைத்தும் இலவசம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சரண்தாஸ் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் பிற செலவுகள் எப்படி?
இந்தக் கிராமத்தில் காய்ச்சல், சளி போன்றவற்றுக்கான பொதுவான சிகிச்சை அளிக்கப்படுகிறது. யாருக்காவது பெரிய அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டால், அவர்கள் அதற்கு வெளியே செல்ல வேண்டும். மேலும், நாள்பட்ட நோய் பாதிப்புகள் யாருக்கேனும் இருந்தால், அவர்கள் அவ்வப்போது அந்த மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் இங்கு வருவதற்கு முன்பு பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் இங்கு இருக்கிறார்கள்.
உழைக்கும் வாழ்க்கையைவிட இப்படி வாழ்வதே மகிழ்ச்சி என்கிறார்கள், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கூர்மா கிராமத்தில் வந்து வசிக்கும் ராதாகிருஷ்ணன் சரண் தாஸ் போன்றவர்கள்.
“இயற்கையுடன் இணைந்து வாழ்வது மிகவும் நல்லது. இந்தப் பழக்கத்தை எங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தி வருகிறோம். ஆனால், இங்கு குருகுல முறையில் குழந்தைகள் வர்ணாசிரம கல்வியைப் பெறுகின்றனர். சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
ஏனெனில், அவர்கள் நாளை வெளி உலகில் வாழ வேண்டுமெனில் மொழி முக்கியம். அவர்கள் இங்கே வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று சரண் தாஸ் கூறினார்.
இந்தக் கிராமத்தைப் பார்க்க பார்வையாளர்களும் வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
இந்தக் கிராமத்தைப் பார்த்த பிறகு பணம் இல்லாமல் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது எனத் தெரிந்துகொண்டதாக கல்லூரி மாணவி அனிதா பிபிசியிடம் கூறினார். இங்கு வேடிக்கை பார்க்கவே வந்ததாகவும் ஆனால் வந்த பிறகு பணம் இன்றி நிம்மதியாக வாழக் கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், “அனைத்து வசதிகளும் இருந்தும் நாங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. இங்கு வந்து இரண்டு நாட்களைக் கழித்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது,” என்று அனிதா கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்