You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்து பல லட்சம் சம்பாதிக்கும் நபர்
சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று கூறும் வடிவேலுவின் நகைச்சுவையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்... அதேபோல ஜப்பானில் ஒரு மனிதர் சும்மா இருக்கிறார். அதை சேவையாகவும் வழங்கி வருகிறார்.
"என்னடா இது?" என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது. சும்மா இருந்தே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு ஜப்பானிய மனிதரைப் பற்றிய கதைதான் இது.
“நீ மட்டும்தான் எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கிறாய் என்று எல்லாரும் சொல்வார்கள். எனவே அதையே ஒரு சேவையாக வழங்க நான் முடிவு செய்துவிட்டேன்,” என்கிறார் ஜப்பானை சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ.
ஜப்பான் தலைநகர் டோக்யோவை சேர்ந்த இவர் வாடிக்கையாளர்களுக்கு விநோதமான சேவை ஒன்றை வழங்கி வருகிறார்.
அதாவது எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதற்காக இவரை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.
ஜப்பானின் ‘டு நத்திங் கை’ (Do – nothing guy) என்று அழைக்கப்படும் இவர், இந்த சேவைக்காக கட்டணத்தையும் வசூலிக்கிறார்.
“எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதற்காக மக்கள் என்னை வாடகைக்கு எடுப்பார்கள். எனது வாடிக்கையாளர்களுடன் செல்லும்போது தேவையானவற்றிற்கு மட்டும் பதில் கூறுவேன். உணவு விடுதிகளுக்கு கூட்டிச் சென்றால் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பேன்,” என்கிறார் ஷோஜி
உங்களுக்கு உங்கள் வாடிக்கையாளர்கள் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்காதா என்று கேட்டால் இல்லை என்கிறார் ஷோஜி. “நிச்சயமாக நானாக எந்தப் பேச்சையும் தொடங்க மாட்டேன்,” என்கிறார் அவர்.
ஷோஜியின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் அவரை வாடகைக்கு எடுத்ததற்கு ஒவ்வொரு காரணங்களைச் சொல்கின்றனர்.
புதியதாகத் திறக்கப்பட்ட தனது கஃபேவில் ஆட்கள் பெரிதாக வரவில்லை என்பதால் ஷோஜியின் சேவையை அணுகி அவரை கஃபேவில் அமர வைத்து உணவு வழங்கியுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர்.
அதேபோல தனியாகச் செல்ல விரும்பாத இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்ணவும் ஷோஜியின் சேவையைப் பலர் அணுகியுள்ளனர்.
“பொதுவாக தனியாகச் செல்லக் கடினமாக இருக்கும் இடங்களுக்கு என்னை அழைத்து செல்வர். அதேபோல தனது நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்று நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பாத சில செய்திகளை என்னிடம் பகிர்ந்து கொள்ள எனது சேவையை அணுகுவார்கள்,” என்கிறார் ஷோஜி.
இது சும்மா இருக்கும் சேவை என்றாலும் தனது சேவைக்கு கட்டணம் வசூலிக்கிறார் ஷோஜி. ஒரு முறை அவரது சேவையை அணுகுவதற்கு 10 ஆயிரம் யென் அல்லது 85 அமெரிக்க டாலர்களை வசூலிக்கிறார் அவர். இது இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரம் ரூபாய்.
இதோடு சேர்த்து பயணக் கட்டணத்தையும் வழங்க வேண்டும். அதேபோல வாடிக்கையாளர்கள் எங்கேனும் கூட்டிச் சென்றால் அங்கே ஆகும் செலவுகளை அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தனது இந்த சேவையில் சில நேரங்களில் சில உணர்ச்சிகரமான அனுபவங்களும் ஷோஜிக்கு நேர்ந்துள்ளது.
“ஒரு வாடிக்கையாளரின் காதலர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். அவரின் ஞாபகத்தால் துயரப்பட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர் என்னை அழைத்து அவரது காதலருடனான நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். தனது காதலர் வழக்கமாக அணியும் தொப்பியை என்னிடம் கொடுத்து என்னை வழி அனுப்பி வைக்கச் சொன்னார்” என்கிறார் ஷோஜி
இம்மாதிரியாக பல காரணங்களுக்காக ஆண்கள் பெண்கள் என இருபாலரும் ஷோஜியை அணுகுகின்றனர்.
அதில் பொதுவான ஒரு காரணம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடன் இருக்க ஒரு துணை வேண்டும் என்பதுதான்.
ஷோஜியின் முன்னாள் மேலாளர்தான் இந்த சேவையை தொடங்குவதற்குத் தூண்டுதலாக இருந்துள்ளார்.
“பொதுவாக என்னால் ஒரு குழுவாகச் சேர்ந்து சரியாக பணி செய்ய இயலாது. நான் வேலை பார்த்த இடத்தில் என்னுடைய மேலாளார், நீ இங்கிருந்தாலும் இல்லை என்றாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்றார். அப்போது சும்மா இருந்து கொண்டே ஏன் நம்மால் உருப்படியாக எதையும் செய்ய முடியாதா என யோசித்தேன். அப்போதிலிருந்து என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்,” என்கிறார் ஷோஜி.
ஷோஜியின் சேவையை ஒருமுறை அணுகியவர்கள் மீண்டும் மீண்டும் அவரின் சேவையை அணுகவும் செய்கிறார்கள். அப்படி ஒருவர்தான் கொடாமி இஷிஹாரா.
தனது பிறந்தநாளன்று ஷோஜியின் சேவையை அணுகிய இவர், தனது தோலில் சூரிய ஒளி பட்டால் சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் தனது நண்பர்கள் அது குறித்து கவலை கொள்வார்கள், எனவே தனது பிறந்தாளுக்கு வெளியில் செல்ல ஷோஜியின் சேவையை அணுகியதாகக் கூறுகிறார்.
ஷோஜிக்கு இந்த ‘சேவைப் பணி’ பல புதிய கண்ணோட்டங்களையும் வழங்கியுள்ளது.
“இந்த சேவையை நான் தொடங்குவதற்கு முன்பு சாலையில் நடந்து செல்லும் மக்களைப் பார்த்தால் அவர்கள் இந்த சமூகத்துடன் ஒன்றி வாழ்கிறார்கள் என்னால் தான் அது முடியவில்லை என்று நினைப்பேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பல பிரச்னைகள் உள்ளன என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன்,” என்கிறார் ஷோஜி.
“தனிமையாக உணர்பவர்கள் என்னை அதிகம் வாடகைக்கு எடுக்கின்றனர்,” என்று கூறும் ஷோஜி, சும்மா இருந்தாலும் பிஸியாகவே இருக்கிறார்.
ஆம். ஒரு நாளைக்கு மூன்று வாடிக்கையாளர்களை ஷோஜி சந்திக்கிறார்.
சும்மாவே இருந்தால் வெறுமையாக இருக்காதா, ஒவ்வொரு நாளும் எப்படி உணர்கிறீர்கள் என்று ஷோஜியிடம் கேட்டால், “இந்த சேவையைத் தொடங்கிய பிறகு நான் பலவிதமான மனிதர்களைச் சந்தித்து வருகிறேன்.
அதில் அனைவரும் இந்த சமூகத்திற்கு ஏதேனும் பயனுள்ளதைச் செய்கிறார்களா என்று கேட்டால் நான் இல்லை என்றுதான் சொல்வேன். அனைத்து விதமான மனிதர்களும் சேர்ந்ததுதானே இந்த சமூகம்,” என்று தனது சேவையைத் தொடங்குகிறார் ஷோஜி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்